வியாழன், 26 பிப்ரவரி, 2015

பருப்பு ரசம்உட்பட ரச வகைகள் வைக்கலாம் வாங்க...

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தமிழ் வலைப்பக்கத்திற்கு இனிதே வரவேற்கிறேன்.
         பருப்பு ரசம்,தக்காளி ரசம்,மிளகு ரசம்,எலுமிச்சை ரசம்,சீரக ரசம்,தூதுவளை ரசம் வைக்கலாம் வாங்க...
  (1) பருப்பு ரசம்;
 தேவையான பொருட்கள்;
 துவரம்பருப்பு 100கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் ஐந்து,மிளகு ஒரு ஸ்பூன்,மல்லிவிதை ஒரு ஸ்பூன்,சீரகம் மூன்று ஸ்பூன்,பூண்டு நான்கு பல்,பெருங்காயம் சிறிதளவு,தேவையான அளவு கடுகு,கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,கொத்துமல்லித்தழை,உப்பு ஆகியன.
செய்முறை;
 துவரம்பருப்பை வேகவைத்து எடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்,புளியைக் கரைத்து உப்பு மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை போட்டு கொதிக்கவிடவும்,மிளகு,சீரகம்,கொத்துமல்லிவிதை,கறிவேப்பிலை,பூண்டு வைத்து கரகரப்பாக நுணுக்கி வெந்த பருப்புத்தண்ணீரில் போட்டு கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்,தேவைப்பட்டால் வெல்லம் சிறிதளவு சேர்க்கவும்.அதன்பிறகு கொதித்துவந்து நுரை கட்டியதும் கடுகு தாளித்து கொத்துமல்லித்தழை,கறிவேப்பிலையை போட்டு இறக்கிவைக்கவேண்டும்.ரசத்திற்கு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கக் கூடாது.
          கவனி; சாம்பார் மற்றும் ரசவகைகளுக்கு துவரம்பருப்பு,புளி,மிளகாய்வற்றல்,கொத்துமல்லிவிதை இந்த நான்கும் அவசியம்.தேவைப்பட்டால் சீரகம்,பூண்டு,பெருங்காயம்,கொத்துமல்லித்தழை,தக்காளி இவைகளையும் சேர்க்கலாம்  என்பதை தெரிந்துகொள்ளுங்க...
 (2)சீரக ரசம்;
  பருப்பு ரசத்தைப்போலவே செய்து  கூடுதலாக சீரகம் இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்.
(3)தக்காளி ரசம்;
            பருப்பு ரசத்தைப்போலவே செய்து புளியை மட்டும் பாதியாக குறைத்து 200கிராம் தக்காளி நறுக்கி கரைத்து சேர்த்தால் போதும் தக்காளி ரசம் தயார்..
(4)எலுமிச்சை ரசம்;
        பருப்பு ரசத்தைப்போலவே செய்து புளிக்குப்பதிலாக மூன்றுஎலுமிச்சை மட்டும் பிழிந்து பச்சை மிளகாய் எட்டு சேர்க்கவும்.எலுமிச்சை ரசம் தயார்.
(5)மிளகு ரசம்;
 ரசப்பொடிக்குப்பதிலாக ஒரு மேஜைக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து துவரம்பருப்பு இரண்டு பிடி புளி எலுமிச்சை அளவு,பெருங்காயம் சிறிதளவு,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,மஞ்சள்தூள் அரை ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து செய்யவும்.
(6)தூதுவளைரசம்;
         மிளகு ரசத்தில் தூதுவளை இலை ஒரு பிடியும் வாதநாராயணன் கொழுந்து தேவையான அளவும் சேர்க்கவும். 

ரசப்பொடி தயாரிப்பது எப்படி? 
        
 மிளகாய் வற்றல், மல்லித்தூள், மிளகு,சீரகம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு  இவைகளை வறுத்து கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்வது ரசப்பொடி ஆகும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக