வியாழன், 26 பிப்ரவரி, 2015

இனிப்பு கம்பு அடை
*******************
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 1 கப்
வெல்லம் -1/2 அல்லது 3/4 கப்
தேங்காய் துண்டுகள் – 1/3 கப்
ஏலக்காய் – 2
உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் அல்லதுநெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஏலக்காயை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை பொடி செய்துக் கொள்ளவேண்டும்.
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீருடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய், சிறிதளவு உப்பு, தேங்காய்துண்டுகள் ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.
பிசைந்த மாவு கலவையை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவேண்டும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.
இந்த உருண்டையை உள்ளங்கை அல்லது எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரின் மேல் வைத்து மெல்லிதாக தட்டிக் கொள்ளவேண்டும்.
தட்டியதை தவாவில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் அடைகளை மெதுவாக திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவேண்டும்.
இப்பொழுது சுவையான இனிப்பு கம்பு அடை தயார்.
மருத்துவ பயன்கள்:
கம்பு தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கம்பு அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு. கம்பு ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
கம்பு உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக