சனி, 26 ஜூலை, 2014

வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
       வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...


* வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

வினைத்தொகையில் இருசொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

ஊறிய காய் - இறந்தகாலம்
ஊறுகின்ற காய் - நிகழ்காலம்
ஊறும் காய் - எதிர்காலம்

இப்பொழுது மூன்றுகாலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப் போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா)
1)படர்கொடி

படர்ந்த கொடி- இறந்தகாலம்
படர்கின்ற கொடி- நிகழ்காலம்
படரும் கொடி- எதிர்காலம்

2)சுடுசோறு

சுட்டசோறு - இறந்தகாலம்
சுடுகின்றசோறு - நிகழ்காலம்
சுடும்சோறு - எதிர்காலம்

3)குடிநீர்

குடித்தநீர்- இறந்தகாலம்
குடிக்கின்றநீர்- நிகழ்காலம்
குடிக்கும்நீர்- எதிர்காலம்

கொடுக்கப் பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப்பாருங்கள். முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று. ஒரு விடைமட்டும் தான் முக்காலத்தையும் உணர்த்தும். மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம். தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம்.

* பண்புத்தொகைஎன்றால்என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

கொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.

(ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)

'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.

'மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை, நீலம், வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை, தீமை, கொடுமை, பொறாமை

சுவையைக் குறிக்கும் சொற்கள்:

காரம், புளிப்பு, கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம், வட்டம், நாற்கரம்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)

சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ
பொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு
அரவணை, செருக்களம் போன்றவை.

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும்பெயர்

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டுபிடிப்பது ?

1 வினைமுற்று என்றால் என்ன?

முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்து விட்டான் என்றுபொருள்.

இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினைமுற்று.

'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்

'படித்து' என்பது வினையெச்சம்
'படித்தான்' எனபது வினைமுற்று.

பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது. 'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது. எனவே அது வினைமுற்று.

கீழ்க் காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை 6 வகைப் படுத்திக் காணலாம்.

அ. தெரிநிலை வினைமுற்று

ஒருவினை முற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்.
செய்பவன் - ஓவியம்
கருவி - வர்ணம்
நிலம் - சுவர்
செயல் - தீட்டுதல்
பொருள் - சித்திரம்
காலம் - இறந்தகாலம்.

(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
செய்பவள் - எழிலரசி
கருவி - நார், கை
நிலம் - இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
பொருள் - மாலை
காலம் - இறந்தகாலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல்வினைமுற்று

முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும். இது எதிர்காலத்தைக் காட்டிவரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

1.ஏவல் ஒருமை வினைமுற்று

(எ.கா) நீநட, நீசெய், நீபோ, நீபடி

2. ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர்உண்குவீர் , நீர்வாரீர், நீர்செய்குதும்

ஈ. வியங்கோள் வினைமுற்று.
க - இய - இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக் கொடல் ஆகிய பொருள்களில் வரும். இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
ஒழிக, கெடுக, வைதல், செல்க
வருக, ஈக, விதித்தல், தருக
வேண்டல், சிரிக்க, பார்க்க

உ. உடன்பாட்டு வினைமுற்று

(எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

ஊ. எதிர்மறை வினைமுற்று

(எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

2. வினையாலணையும்பெயர்:

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
கண்டவர்
சென்றனன்

எப்படி எளிதில் கண்டறிவது?:

கொடுக்கப் பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர், அவன், அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.

(எ.கா)

'காட்சியவர்' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும்பெயர் ஈ) பண்புப்பெயர்

காட்சியவர் என்றசொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக