ஞாயிறு, 8 மார்ச், 2015

தன்னொழுக்கத்தின் சிகரம் திருமிகு.சிவக்குமார் அவர்களது மலரும் நினைவுகள்...

 மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தன்னொழுக்கத்தின் சிகரம் திருமிகு.சிவக்குமார் அவர்களது அபூர்வ படங்கள் தங்களது பார்வைக்காக....







































 அன்பன் 
பரமேஸ் டிரைவர் 
-சத்தியமங்கலம் .
+919585600733 
paramesdriver@gmail.com
 http://konguthendral.blogspot.com,
 http://consumerandroad.blogspot.com

தன்னொழுக்கத்தின் சக்கரவர்த்தி திருமிகு. சிவக்குமார் அவர்கள் கதை-03


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.தனிமனித ஒழுக்கத்தின் சக்கரவர்த்தி அவர்களின் கடந்துவந்த பாதை இனியொரு நாள் கிடைக்காமல் போனால்?அதாங்க அவரது பக்கத்திலிருந்து திருடி இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

1996 -மே மாதம் 31-ந்தேதி -கோலாலம்பூர்...
மலேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பிரதிநிதிகளின் சங்கம்( NAMLIA) தனது 17- வது மாநாட்டினை தொடங்கியது. மலேசியாவில் 90,000 பிரதிநிதிகள்..உலக அளவில் 21 நாடுகளிலிருந்து வி.ஐ.பிக்கள் - நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

என்னோடு மலேசியாவிற்கு முதன்முதலாக வந்த நண்பர் - பயணக் களைப்புடன் நடு நிசி தாண்டிய கலை நிகழ்ச்சிகள் பார்த்த களைப்பில் - இந்திய நேரம் காலை 10.30 மணி வரை உறங்கிவிட்டார். மலேசிய நேரம், இந்திய நேரத்தைவிட 2.30 மணி கூடுதல் என்பதை மறைந்துவிட்டார். அடித்துப் பிடித்து அவர் தயாரான போது மலேசிய நேரம் பிற்பகல்1.30... வேகமாக டைனிங் ஹால் ஓடினோம்.
மாநாட்டு விருந்தினர் சாப்பிட்டு முடித்து விட்டிருந்தனர். பொறுமையற்று 30 மாடி லிப்டில் இறங்கி, சாலையைக் கடந்து ஓடி, விழா நடக்கும் ஓட்டலுக்குள் நுழைந்து மீண்டும் 50 மாடி... லிப்டில் பயணித்து, மூச்சிறைக்க என் ஹாலுக்குள் கால் வைத்தபோது சரியாக 2.00 மணி.

ஒவ்வொருவரும், கடின உழைப்பால் உயர்ந்த அனுபவங்களைப் பற்றி பேசினோம். நேரம் தவறாமை பற்றிப் பேசிய நான் - காலத்தின் அருமை கருதி- இன்று பகல் நான் உணவு அருந்தாமல் ஓடிவந்தேன் என்றேன்..எல்லோருக்கும் அதிர்ச்சி... ஒரு சம்பவம் சொன்னேன்.
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அமெரிக்காவில் ஒரு விழா முடிந்து விருந்தில் கலந்து கொண்டார். மது அருந்தச் சொன்னார்கள். பழக்கமில்லை என்றார். லேசாக நாக்கில் சுவைத்து விட்டுத் தாருங்கள் என்றனர். ' எங்கள் நாட்டில் கொஞ்சம் கற்புடையவள் - நிறைய கற்புடையவள் என்ற பேதமில்லை. கற்புடையவள்- கற்பிழந்தவள் என்றுதான் சொல்வார்கள். ஒரு சொட்டு நாக்கில் பட்டாலும் நான் குடிகாரன்தான்' என்றார்.
அதே போல் 2.00 மணி நிகழ்ச்சிக்கு 2.10 க்கு வந்தாலும் லேட்தான் 2.02 நிமிடத்துக்கு வந்தாலும் லேட்தான் என்றேன். கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது...

 கி.பி.1004 முதல் 1010 வரையிலான காலகட்டத்தில் ராஜராஜ சோழனால்
கட்டப்பட்டது இந்த தஞ்சை பெரிய கோயில்.
கலசத்தைத் தாங்கி நிற்கும் கல் 36 அடி சுற்றளவு கொண்டது. அதனால் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை கலசத்தின் நிழல் அந்தக் கல் மீதே விழுந்து விடும். அதற்கு முன்னும் பின்பும் நிழல் காம்பவுண்டுக்கு வெளியே போய்விடும்.
1962 -ஜூன் 1 -ந்தேதி எனது 19 -ஆவது வயதில் வரைந்த ஓவியம். அப்போது ஓவியக்கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
நான் சென்ற போது நாள் முழுதும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆகவே கலச நிழல் எங்காவது தரையில் விழுகிறதா என்று பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை.
மங்களாம்பிகா ஓட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை எடுத்து குளித்து தயாராகி காலை 6.30 மணிக்கு துவங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஒரே மூச்சாக வரைந்து முடித்த ஓவியம்.

 ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். ஓவியக்கல்லூரி படிப்பு முடித்து நடிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.
மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் நாடகக்குழுவுடன் மும்பைக்குச் சென்று 4 நாடகங்கள் ஷண்முகானந்தா ஹாலில் போட்டோம்.
பகல் பொழுதில் குடும்ப நண்பர் டி.எஸ். மகாதேவன் அவர்கள் - துறைமுகத்தில் கப்பல் வடிவமைக்கும் பணியில் இருந்த பாலக்காட்டுக்காரர் - மகன் சுவாமி வழிகாட்ட, கொலாபா பகுதியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடத்தின் 13-வது மாடியிலிருந்து மும்பை நகரத்தின், பரந்து விரிந்த காட்சியை, ஸ்கேல் பயன்படுத்தாமல் 3 மணி நேரத்தில் வரைந்த, பென்சில் ஸ்கெச் இது. வரைந்த ஆண்டு 1972.


1962- மே மாதம் 27-ந்தேதி - ஓவியம் : அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -சிலைகள்.....
ஓவியக்கலை கல்லூரி 3-ம் ஆண்டு கோடை விடுமுறையில் உடன் பயின்ற நண்பர் மதுரை சந்திரசேகர் வீட்டில், 4 நாட்கள் தங்கி, அவரும் நானும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - 1000 கால் மண்டபத்திலுள்ள சிலைகள் -திருமலை நாயக்கர் மகால் - திருப்பரங்குன்றம் - தெப்பக்குளம் என்று மணிக்கணக்கில், வண்ண ஓவியங்கள்- ஸ்கெச்கள் செய்தோம்.
சொக்கநாதர் சந்நதி எதிரில், அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -
அடுத்த மண்டபத்தில், ருத்ர தாண்டவம் - பத்ரகாளி சிலைகள்...
காலை 8 மணிக்கு, சிற்றுண்டி முடித்து வந்து உட்கார்ந்து மாலை 6 மணி வரை, சுமார் 10 மணி நேரம் வரைந்த ஓவியம் இது.
12 மணிக்கு, விளக்குகளை அணைத்து விட்டு கோயில் கதவுகள் எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டிவிட்டுப் போய் விடுவார்கள். மாலை 4 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். கும்மிருட்டில், நானும் சந்திரனும் பகல் உணவைத் தவிர்த்து, தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தோம்.
சந்திரனின் பெரியம்மா - தன் ஒரே மகனுடன் - 5,6 குழந்தைகள் உள்ள தங்கை வீட்டுக்கு வந்து , அத்தனை குழந்தைகளையும் பாசம் காட்டி வளர்த்த
புண்ணியவதி .....
கோயிலுக்குள், பசியில் பிள்ளைகள் இருக்கும் என்று யோசித்து ரெண்டு பொட்டலம் சாம்பார் சாதம், தயிர் சாதம் தயார் செய்து எடுத்து வந்து, உள்ளே அனுமதிக்க மறுத்த கோவில் காவலருடன் சண்டையிட்டு - பிள்ளைகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று மிரட்டி - 'விக்கட் கேட்'- வழியே உள்ளே நுழைந்து, இருட்டில், ஒவ்வொரு மண்டபமாக எங்களைத் தேடி, கண்டுபிடித்து
பசியாற்றிய தாய் அன்பை, இப்போதும் நினைத்து கண்கலங்குகிறேன்....

 எனது 10-வது வயதில் 'தேவதாஸ்' படம் பார்த்தேன். பார்வதி - தேவதாஸ் இரண்டு அமர காதலர்களின் உடல்களும் ஒரே சிதையில் தீ மூட்டப்படுவது கடைசிக் காட்சி.
படம் பார்த்துவிட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவாறு சூலூரிலிருந்து
3 கி.மீ.தூரமுள்ள என் கிராமத்துக்கு இரவில் நடந்தே போனேன்.
அன்று பார்வதியாக நடித்த சாவித்திரியை என் சகோதரியாக வரித்துக் கொண்டேன்.
வணங்காமுடி - பாசமலர் - நவராத்திரி - கொஞ்சும் சலங்கை -கை கொடுத்த
தெய்வம்- என்று எத்தனை படங்கள் , எத்தனை விதமான வேடங்கள்!!.. 'மிஸ்ஸியம்மா' - 'மாயா பஜார்' -அவரை தேவதையாகக் காட்டிய படங்கள்.
'பாச மலர் '- கிளைமாக்ஸில் பார்வையிழந்த சிவாஜியைத் தேடி மகளுடன் சாவித்திரி வருவார். 'எங்கண்ணா போயிட்டீங்க? - என்று கதறுவார்' நீ கிழிச்ச அன்பு வட்டத்தை தாண்டி என்னால எங்கயும் போகமுடியலம்மா' ன்னு சொல்லும்போதும், 'கை வீசம்மா கை வீசு.. கடைக்குப்போலாங் கை வீசு..'
என்று பாடி அழுத போதும் தமிழகத் தியேட்டர்கள் ரசிகர்களின் கண்ணீரில் மிதந்தன..
'சரஸ்வதி சபதம் -கலைவாணி ; கந்தன் கருணை-யில் முருகன் அன்னையாக என்னோடு நடித்தவர், பின்னாளில் 'புது வெள்ளம்' - படத்திலும் என் அம்மாவாக நடித்தார்..
கால வெள்ளத்தில் அவரே படம் தயாரித்து, இயக்கி, நடித்து, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து - காலம் அவரை கடுமையாகத் தண்டித்தது..
அந்தச் சூழலிலும் என் 100- வது பட விழாவுக்கு வந்து மாலை அணிவத்து உச்சி மோர்ந்தார் அந்த அன்புச் சகோதரி நடிகையர் திலகம் !!!

 2015 - பிப்ரவரி 18-ந்தேதி தயாரிப்பாளர்களின் 'சாம்ராட்' டி.ராமாநாயுடு 78 வயதில் மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் 150 க்குள் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்.
தனிமனிதனாக அதிகப்படங்களைத் தயாரித்து கின்னஸ் ரெக்கார்டில் இடம்
பிடித்தவர்.
2009 -ல் தாதா சாகேப் பால்கே விருது; 2012 - ல் பத்மபூஷண் விருது பெற்றவர்.
1999 முதல் 2004 வரை மத்திய பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்.1991-ல் அறக்கட்டளை நிறுவி ஏழை எளியவர்களுக்கு கல்வி, சுகாதார வசதி செய்து கொடுத்தவர்.
ஆந்திரர்கள் எல்லோரும் மௌரிய வாரிசுகள் என்பதால் இவரும் 6 அடி தாண்டிய நெடிய உருவம். கம்பீரமான தோற்றம்.....
வெள்ளை டி சர்ட்,வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூஸ், கருப்பு கண்ணாடி- இவரது அடையாளம்... கலைந்த தலைமுடி, கசங்கிய சட்டை, வியர்வை முகத்துடன் இவரை இறைவனே பார்த்திருக்க முடியாது என்று சொல்லலாம்.
தீட்சண்யமான கண்கள், வெள்ளை மனம், பதட்டமில்லாத சுபாவம். தூய்மையின்
அடையாளம் .. இவர் கோபத்துடன் இரைந்து பேசி யாரும் பார்த்திருக்க முடியாது.
1964-ல் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் துவக்கி தயாரித்த முதல் தெலுங்குப் படம் 'ராமுடு பீமுடு' அதிரடி வெற்றி...
வாகினி நாகிரெட்டியாரோடு இணைந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ' வசந்த மாளிகை' - சிவாஜி, வாணிஶ்ரீ நடிப்பில் ஒரு மைல் கல்..
1974-ல் செல்வி ஜெயலலிதா அவர்களின் 100-வது படம்"திருமாங்கல்யம் "- இவர் தயாரிப்பு.
ஒளிப்பதிவு -மேதை மார்க்கஸ் பார்ட்லே... இயக்கம் ஏ. வின்சன்ட்..முத்துராமன் அவர்களும் நானும் இரண்டு ஹீரோக்கள்....
படப்பிடிப்புத் தளத்துக்கு அருகில் கொட்டகை போட்டு, சுடச்சுட பொங்கல் , வடை, பூரி கிழங்கு, ஊத்தப்பம்- பகல் உணவில் ஆடு, கோழி, காடை, கவுதாரி என ராஜ விருந்துதான் தினமும் ...
இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு பிற்பகல் படப்பிடிப்பில் உண்ட களைப்பில் நடிகர்கள் நெளிவதைப் பார்த்து அப்படி ரசிப்பார் நாயுடு..
ஓராண்டு முன் ராமாநாயுடு பேத்தி திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.. சூர்யா, கார்த்தியுடன் நானும் ஹைதராபாத் சென்றிருந்தேன்..
' முதலாளீ '- என்ற என் குரல் கேட்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார் ..
தமிழ் சினிமாவின் " கோல்ன் டேஸ்" மனிதர்கள் மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.....


1979..டிசம்பர் 14-ந்தேதி..மாலை 4-மணி.
சிங்கப்பூர் விமான நிலையம்...
'ராமன் பரசுராமன்'- படத்தில், எனக்கு இரட்டை வேடம்.. கதைப்படி சிறு வயதில் என் தாயாரை கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்த 3 வில்லன்கள் , இப்போது, சிங்கப்பூர்- ஹாங்காங்- ஜப்பான் ஆகிய நாடுகளில் சொகுசாக வாழ்கிறார்கள்..வாலிபர்களான பிறகு - பரசுராமனும், டாக்டர் ராமனும், அவர்களைப் பழி வாங்க அந்த 3 நாடுகளுக்குச் செல்வது படத்தின் பிற்பகுதி..

படக்கதைச் சுருக்கத்துடன்,விமான நிலையத்தில் படமாக்கவுள்ள காட்சிகள் பற்றி, அதிகாரிக்கு, ஒரு பக்க அளவில் எழுதிக்கொடுக்க, 30 நிமிடங்களே அங்கு படமாக்க அனுமதித்தார்கள். நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் , இயக்குநர் என 8 பேர் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம்.
எல்லா விமான நிலையங்களின் ஓடு பாதையும், உள் கட்டமைப்பும், ஒரே மாதிரி இருக்கும் என்பதால், சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே, 3 நாடுகளுக்கும் ஹீரோக்கள் சென்று, விமானத்திலிருந்து இறங்குவது- ஏறுவது போன்ற காட்சிகளைப் படமாக்கிவிட முடிவு செய்தோம்...
முதலில் ஒரு விமானம் வந்து இறங்குவதைப் படம் பிடித்தோம்..ஓடு தளத்திலிருந்து வந்து நின்று, ஏணி இணைப்புக்கள் கொடுத்தவுடன்,கண் இமைக்கும் நேரத்தில், பரசுராமன் வேடத்துக்கு, நான் முரட்டு மீசை ஒட்டி, தலைமுடியைக் கலைத்துவிட்டு, ஜீன்ஸ் பேண்ட், சட்டை மாட்டி, ரத்தி அக்னி ஹோத்ரியை , பிடித்து இழுத்துக் கொண்டு, ஏணி வழியே ஏறி, விமானத்துக்குள் நுழைந்து, பயணிகளோடு இறங்குவது போல் படமாக்கினோம்.
அடுத்த 2 நிமிடங்களில், வேறு ஒரு விமானம் தரை இறங்குவதைப் படமாக்கினோம். ஓடுதளத்திலிருந்து, அது வந்து நிற்பதற்குள், நான், தலை வாரி, முரட்டு மீசை அகற்றி, டாக்டர் உடையணிந்து , லதாவை இழுத்துக் கொண்டு விமானத்துக்குள் ஓடி, இறங்குவதைப் படம் பிடித்தோம்..
இப்படி, 3 நாடுகள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு, 6 தடவை, ரன்வே ரோட்டில்- ஜமுக்காள மறைப்பில், ரத்தியும், லதாவும், உடைகள் மாற்றி நடித்தது, மறக்க முடியாத சம்பவம். தீயாய் வேலை செய்து 25 நிமிடங்களில், திட்டமிட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்த போது, பெருமிதமாக இருந்தது.
கிராமத்தில், 15 பைசா டிக்கட் வாங்கி, தரையில் அமர்ந்து படம் பார்த்த, ஒரு சாதாரண இளைஞனை, வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று படம் எடுத்த அமரர் கோபிநாத் அவர்களை நன்றியுடன் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...

யோகாவும் நானும்
16 வயதில் சென்னை வந்தபோது இளம் தொப்பை இருந்தது. அதைக் கரைக்க, கன்னிமாரா நூலகத்தில் ரூ.3/- கட்டி உறுப்பினராகி, யோகா பற்றி பெங்களூர் சுந்தரம் அவர்கள் எழுதிய புத்தகத்தைப்
பார்த்துப் பயிற்சி செய்தேன்.
6 மாதங்களில் 38 ஆசனங்கள் கற்றுக்கொண்ட கொண்டேன். ஆசனவாய் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் 'பஸ்தி' கைவரப்பெற்றேன்.
காபி,டீ, புகை,மது, 'டீன் ஏஜ்' காதல் அப்போதே தவிர்த்தது, மனதை ஒருமுகப்படுத்தி யோகா செய்ய வசதியாக இருந்தது.
1988- ஜனவரி 1-ந்தேதி முதல் அசைவம் நிறுத்தி விட்டேன். முட்டை மட்டும் சாப்பிடுகிறேன்.
இளம் வயதில் அழகான உடல் கட்டு பெற 'ஜிம்' பயிற்சி நல்லதுதான். ஆனால் 90 வயதிலும் யோகா பயிற்சி செய்யமுடியும்.
65 வயதுக்கு மேல் சிரசாசனம் தவிர்க்கச் சொல்கிறார் டாக்டர்.
தற்போது 12 முக்கிய ஆசனங்கள் மட்டும் செய்கிறேன். மன அமைதி, உடல் சுறு சுறுப்புக்கு யோகா என்றும் உதவும்.
இப்பொழுது எனக்கு 70 வயது. கொஞ்சம் தொப்பை இருக்கிறது. ரெட்டை நாடி உடம்புக்காரர்களுக்கு சில சமயம் இது தவிர்க்க முடியாது.
50 வயது தாண்டியும் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி அண்டாமல்
பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விஷயம்.

 திருமிகு.சிவக்குமார் அவர்களுக்கு நன்றிங்க..
என அன்பன் 
பரமேஸ் டிரைவர் - 
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

தன்னொழுக்கத்தின் சக்கரவர்த்தி திருமிகு. சிவக்குமார் அவர்கள் கதை -02


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.தனிமனித ஒழுக்கத்தின் சக்கரவர்த்தி அவர்களின் கடந்துவந்த பாதை இனியொரு நாள் கிடைக்காமல் போனால்?அதாங்க அவரது பக்கத்திலிருந்து திருடி இங்கு பதிவிட்டிருக்கிறேன்.        ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில்
விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப்
போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லியிலிந்து ஒன்றை
எடுத்துச் சாப்பிட்டு வளர்ந்தது.
வாலிப வயதில் திருச்சியிலிருந்து 200 மைல் சைக்கிள் சவாரி செய்து
சென்னை வந்தார். தானே சிறுகதை எழுதி துண்டு பிரசுரமாக அச்சிட்டு
ஓடும் ரயிலில் அவரே விநியோகம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னோடி கே.சுப்ரமணியம் அவர்களிடமிருந்து
86,467 ரூ 9 அணா 11 பைசாவுக்கு ஜெமினி ஸ்டுடியோவை வாங்கினார். 1940-லிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் தயாரித்தார். 1948 -ல் 'சந்திரலேகா'- படத்தை அன்றே 30 லட்சம் செலவில் (இன்று 100 கோடிக்கு மேல் ) தயாரித்து அந்தப் படத்திற்கு சுமார் 700 பிரதிகள் எடுத்து இந்தியா முழுக்க ரிலீஸ் செய்து இந்தியாவின் ' செசில் பி டெமில்லி ' என்று பெயர் எடுத்தார்.
1953 -ல் 'ஒளவையார்' -படத்தை - 6 ஆண்டுகள் தயாரித்து மீண்டும் சரித்திரம்
படைத்தார். ஔவையாக நடித்த கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கு 4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.
ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் அவரே. அந்த மாமனிதர் இயக்கத்தில் 1966-ல் காஞ்சனாவின் கணவராக, சிவாஜியின் மருமகனாக
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' -படத்தில் 1500 ரூ சம்பளத்தில் நடித்ததை
பாக்கியமாக நினைக்கிறேன்

 அருட்செல்வர்ஏ.பி.என் அவர்கள் உருவாக்கிய 'கந்தன் கருணை'-
படம் 1967-பொங்கல் தினத்தில் வெளிவந்தது.
'ராமாயணம்'-வைணவர்களின் இதிகாசம். 'கந்தபுராணம்'- சைவர்கள் இதிகாசம். ராமாயணக் கதை முந்தையது. கந்த புராணம் பிந்தியது.
அதில் ராமன் ஹீரோ. ராவணன் வில்லன்...இங்கு முருகன் ஹீரோ. சூரபத்மன் வில்லன்...ராமனுக்கு அனுமன் .. முருகனுக்கு வீரபாகு.
ராவணன் தங்கை சூர்ப்பனகையால் அங்கு யுத்தம். சூரனின் தங்கை அஜமுகியால் இங்கு யுத்தம். அங்கும் இலங்கை.. இங்கும் இலங்கை..
தங்கப் பிளேட்டில் சாப்பிட்ட தியாக ராஜபாகவதர், 1934-ல் 'பவளக்கொடி '- படத்தில் நடிக்க ரூ.750 சம்பளம் வாங்கிய காலத்தில் , 'நந்தனார்'-படத்தில் நடிக்க
1லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய, கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் 'கந்தன் கருணை' படத்தில் ஒளவையாராக நடித்தார்.
உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி முருகப் பெருமானின்
சேனாதிபதியாக நடித்தார்.
அசோகன் வாழ்க்கையில் சூரபத்மன் வேடம் ஒரு மைல் கல்.
1965-ல் 'வெண்ணிற ஆடை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நமது இன்றைய தமிழக முதல்வர் ஜெ. அவர்கள் வள்ளி வேடமேற்று புள்ளி மானாக துள்ளி துள்ளி அற்புதமாக நடித்திருப்பார்.
வெள்ளி விழாப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த கே.ஆர். விஜயா தெய்வயானையாக நடித்தார்.
குழந்தை முருகன், 12 வயது முருகன் பகுதி எல்லாம் படமாக்கிவிட்டு ஆறு மாத காலம் 30 பேருக்கும் மேல் ஒப்பனை பரிசோதனை செய்து கடைசியில் கல்யாண முருகனாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

 'Balad of a soldier'- என்ற தலைப்பில் ரஷ்ய மொழியில் வெளியான படத்தினைத் தழுவி கவியரசு கண்ணதாசன் அவர்கள் தமிழில் எடுத்த 'தாயே உனக்காக'-என்ற படத்தின் ஹீரோவாக நான் நடித்தேன். எனது ஜோடி மீண்டும் ஒரு சீனியர் நடிகை புஷ்பலதா.
சிவாஜி-பத்மினி, எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி, முத்துராமன்-தேவிகா, மேஜர்,நாகேஷ்- மனோரமா, வி.கே.ஆர்,நம் முதல்வர் ஜெ, மனோகர்,புஷ்பலதா, சி.கே. சரஸ்வதி- என்று தமிழ் நாட்டின் பிரபலங்கள் பெரும்பாலோர் கௌரவ வேடமேற்று நடித்திருந்தனர் .
தி.நகர் கிருஷ்ண வேணி தியேட்டரில் முதல் காட்சி பார்த்தேன்.
ஆறு மாதமாக சிவாஜி படம் வெளிவராத நேரம். தியேட்டர் வாசலில் ராணுவ மேஜர்- வீணை வித்வான் - நம்பூத்ரி - என பல தோற்றங்களில் சிவாஜி கட்அவுட்கள் !!
படம் துவங்கிய 10 வது நிமிடம் சிவாஜி போர்க்களத்தில் இறக்கும் காட்சி !!
நூறு சிவாஜி ரசிகர்கள், பெருத்த ஏமாற்றத்தில்,கெட்டவார்த்தையில் என்னை திட்டிக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியேறினார்கள் !!
நாம் போக வேண்டிய தூரம் எங்கோ இருக்கிறது என்று அன்று, உணர்ந்து கொண்டேன்



சேலம் -சங்ககிரிக்கு அருகே- அக்கம்மாப்பேட்டை ஜமீன்தார் பரமசிவத்துக்கு மகனாகப் பிறந்து -தந்தை இறந்த பின் 7 வயதில் டி. கே.எஸ். நாடக குழுவில் சேர்ந்து டி.கே. ஷண்முகம் அவர்களுக்கு ஹீரோயினாக இளவயதில் நடித்தவர் திரு. ஏ.பி. நாகராஜன்.
வாலிபனான பின் சொந்த நாடகக் குழு துவங்கி 'நால்வர்'-, 'மாங்கல்யம் '- என பல நாடகங்களை தானே எழுதி, அவற்றில் ஹீரோவாக நடித்து, அவை படமானபோது அதிலும் ஹீரோவாக நடித்து 'பெண்ணரசி '- கதைவசனம் எழுதி கதாநாயகனாக நடித்தார்.
பின் நாளில் 'நவராத்திரி'- 'திருவிளையாடல்'- படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பியவர் அருட்செல்வர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள்.
வளர்ந்து வரும் காலகட்டத்தில் தான் டைரக்ட் செய்த 13 படங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த அருட்செல்வரே எனக்கு 'காட் பாதர்'.
 1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.

 எஸ்.வி.சுப்பையா அண்ணன் - நடிகர், தயாரிப்பாளர் மிகவும் வித்யாசமானவர்.
திடும் என்று படப்பிடிப்பு சமயத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் கண்மூடித்திறப்பதற்குள் எடுத்துப்போய் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவார். ஏன் என்று கேட்டால், 'தான்' என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகச் சொல்வார்.
பாரதியாகவும், அபிராமப் பட்டராகவும் திரையில் வாழ்ந்த அவர் ஜெயகாந்தனின் 'கைவிலங்கு' - நாவலைத் தனது முதல் படமாக தயாரித்தார்.
நானும் லட்சுமியும் இணைந்து நடித்த 2- வது படத்தில், சிவாஜி அவர்கள் சாமுண்டி கிராமணி - என்ற கள் இறக்கும் தொழிலாளியாக 3 நாட்கள்
கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த வேடம் படத்தின் முதுகெலும்பாக அமைந்து விட்டது. வெள்ளிப் பெட்டியில் ஒரு தொகை வைத்து சிவாஜியிடம் நீட்டினார் எஸ்.வி.எஸ். காசு வேண்டாம் என்று சிவாஜி மறுத்துவிட்டார். உணர்ச்சி வசப்பட்டவர் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து சிவாஜிக்கு நன்றிக் கடன் கழிப்பேன் என்று பேட்டியளித்தார்.
காடாத்துணியில் தைத்த அரை டிராயருடன் திருப்பதி நடந்தே சென்று ஏழுமலையானிடம் சண்டை போட்டுத் திரும்புவார் .
நடிப்புத்தொழிலை விட்டு கொஞ்ச காலம் ரெட்ஹில்ஸை அடுத்த கரனோடையில் நிலம் வாங்கி கலப்பை பிடித்து உழுது விவசாயம் செய்தார்.
திடும் என்று ஒருநாள் மாரடைப்பால் புறப்பட்டுப் போய்விட்டார்.
சவக்குழிக்குள் சடலத்தை வைத்து மண்ணைத் தள்ளிய போது 'அப்பா மூஞ்சி மேல மண்ணைப் போடாதிங்க. அவருக்கு மூச்சு முட்டும்'- என்று
அவரின் 6 வயது மகன் சரவணன் அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

 ஆயிரம் தண்டால் ஆஞ்சநேயர் முன் பள்ளி நாட்களில் எடுத்தவர். 400 அடி நீள தெப்பக்குளத்தில் ஒரு முனையில் மூழ்கி மறுமுனையில் ஒரு நிமிடத்தில் தொட்டவர். கல்லூரியில் படிக்கையில் பெரியம்மை தாக்கியதில் முகம் கோரமாக உள்ளதென்று தற்கொலை செய்ய முயன்றவர். கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், நீலப்படுதா கட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா வாய்ப்புக்காக எந்த தயாரிப்பாளரைப் போய்ப் பார்த்தாலும் 'ஏம்பா உன் வீட்டுல கண்ணாடியே இல்லையா' என்று அவமானப்படுத்தப் பட்டவர். அறுபதுகளில் அவர் ஏறாத நாடக மேடைகளே இல்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்டவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் தவிர்க்க இயலாத நகைச்சுவை நடிகர். பெட்டி நிறைய பணம் சேர்த்து, அம்மாவை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கலாம் என்று செல்லும்முன்னே, அம்மா மயானம் அடைந்த செய்தி அறிந்து மூர்ச்சையானார். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நேரம், சொந்தங்கள் அனைத்தும் சிறை சென்ற போதும், கலங்காமல் தொழிலில் கவனம் செலுத்தினார். பாலசந்தரால் நவரசங்களையும் நடிப்பில் வெளிப்படுத்திய கலைஞன் - நாகேஷ் அவர்கள்!
நான் வரைந்த திரு.நாகேஷ் ஓவியம் இங்கே..


 தமிழ்த்திரையுலகில் சகலகலாவல்லி என்றால் இன்றுவரை அதற்குப் பொருத்தமானவர் பி.பானுமதி அம்மா தான்.
கதை- திரைகதை-வசனம்-இயக்கம்-இசை-பாடல்-நடிப்பு-தயாரிப்பு-ஓவியம்-ஜோதிடம் என்று அவர் கால் பதிக்காத துறையே திரையுலகில் இல்லையெனலாம்.
1949-லேயே ஜெமினி தயாரித்த 'அபூர்வ சகோதரர்கள்', பி.யு.சின்னப்பா நடித்த 'ரத்னகுமார்' ஆகியவற்றில் நாயகி.
1953-ல் 'சன்டிராணி' - படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட்டவரும் அவரே.
மதுரைவீரன்,மலைக்கள்ளன், அலிபாபா - ஆகிய படங்களைப் பார்த்தவர்களுக்கு இவரது ஆளுமை எளிதில் புரியும்.
ரங்கூன்ராதா, அம்பிகாபதி, மக்களைப் பெற்ற மகராசி என பல படங்களில் சிவாஜியின் கதாநாயகி.
எம்.ஜி.ஆர்- சிவாஜி பெரிதும் மரியாதை வைத்திருந்த நடிகை.
'அன்னை' படம் அவருக்காகவே ஓடியது!
'இப்படியும் ஒரு பெண்' - அவர் தயாரித்து, இயக்கி, பிரதான வேடத்தில் நடித்த படம். அதில் நான் தான் கதாநாயகன். அப்போது என் ஓவியங்களைக் காட்டினேன். 'உனக்கு இதில் கிடைத்த திருப்தி நடிப்பில் கிடைக்குமா?' என்று கேட்டார்.
என் பனை ஓலை ஜாதகத்தைப் பார்த்து - 'வருகிற செப்டம்பருக்குள் உனக்கு திருமணம். இல்லாவிட்டால் நித்யபிரம்மச்சாரி' என்றார்.
ஜூலை-1ல் திருமணமாயிற்று. மனைவியுடன் அவர் இல்லம் சென்று ஆசிபெற்று வந்தேன்.



வெள்ளை உள்ளம் கொண்டவர். எதிரிக்கும் தீங்கு நினைக்காதவர், படிப்பாளி, பண்பாளர், நடிகர். பிருந்தாவனத்து நந்தகுமாரன் மீது எந்தப் பெண்ணுக்குத்தான் ஆசை வராது? ஆம். திரு. ஜெமினி கணேசனை நேசித்த பெண்கள் கணக்கில் அடங்கா!
எம்.ஜி.ஆர், சிவாஜியைநெருங்க இயலாத படைப்பாளிகள் ஜெமினியை கதாநாயகனாய் போட்டு தமிழுக்கு பல தரமான படங்கள் கொடுத்தனர். ஸ்ரீதர், கோபால கிருஷ்ணன், ஏ.பி.என்., K.பாலச்சந்தர் போன்றோருக்கு மட்டுமல்ல, ஜெமினி வாசன், நாகி ரெட்டியார், ஏ.வி.எம். போன்றோரின் பேவரெட் ஹீரோ.
1957-ல் கிராமத்தில் இருந்து அவருடைய ஓவியம் வரைந்து, பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தேன். புகைப்படத்துடன் வருங்காலத்தில் பெரிய ஓவியனாக வருவாய் என்று வாழ்த்தி கடிதம் எழுதியிருந்தார்.
1965-குப் பிறகு பல படங்களில் அவருடன் நடித்தேன். பார்க்கும் போதெல்லாம் - அவர் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து நான் வரைந்த ஓவியத்தை கேட்டுக் கொண்டே இருந்தார். அவரது 80-வது வயது நிறைவடைந்த நிகழ்ச்சியில் அதைப் பரிசளித்தேன்.
'கங்கா - கௌரி' படத்தில் அவர் சிவன், நான் விஷ்ணு. படத்தின் கடைசி நாளில் ஒரே வட்டிலில் என்னை உடன் அமரச் சொல்லி, அசைவ உணவை என் வாயில் அவர் ஊட்டி விட்ட பொழுது தந்தையின் பாசத்தை உணர்ந்தேன்.
 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது, புதையல், அமரதீபம், உத்தமபுத்திரன் - பள்ளி நாட்களில் நான் பார்த்தது.
காதலன், காதலியாக நடித்த அந்த நாளிலேயே - 'மங்கையர் திலகம்' படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக நடித்தார் பத்மினி.
அந்நாளில் எம்.ஜி.ஆர்- பானுமதி, சிவாஜி -பத்மினி, ஜெமினி - சாவித்ரி, நிரந்தர திரையுலக ஜோடிகள்.
சிவாஜி - பத்மினியை என் இதயக்கூட்டில் பதித்துக்கொண்டேன்.
'மதுரை வீரன்' படத்தில் எம்.ஜி.ஆர் உடன் நடிக்கப் போய்விட்டார் என்று ஒரு வருடம் அவர் நடித்த படங்களைப் பார்க்காமல் என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் உச்ச கட்ட நடனக் காட்சி, தில்லான மோகனாம்பாள் திருவருட்செல்வர் படங்களில் தேர்ந்த நாட்டியத் தாரகையாக என்று நிரூபித்தவர்.
நடிப்பில் மட்டுமல்ல குணத்திலும் அவர் நிறைகுடம். எம்.ஜி.ஆர், சிவாஜி , ஜெமினி என மும்மூர்த்திகளோடு நடித்த போதும் ஒருவரைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்கூட புறம் பேசாத பத்தரை மாற்றுத் தங்கம்.
ஓவியனாக வாழ்கையை தொடர நினைத்த நான் நடிகனாக பின் ஏ.பி.என். படங்களில் - புராண வேடங்களில் நடித்த பொழுது பத்மினியுடன் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.
ஜெமினியின் 'விளையாட்டுப் பிள்ளை', சஷ்டி பிலிம்ஸ் தேரோட்டம் படங்களில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு பெற்றேன்.
1958-இல் மோகன் ஆர்ட்ஸ்-ல் 16வது வயதில் பயிற்சி ஓவியனாக இருந்த பொழுது நான் வரைந்த பத்மினியின் ஓவியத்தை ஒரு நாள் அவருக்கு பரிசளித்தேன்.
அந்த நாட்டியப் பேரொளி அணைந்த செய்தி கேட்டு ஷோபனா வீட்டுக்கு சென்றேன். கண்ணாடிப் பேழைக்குள் சிரித்தவாறு துயில் கொண்டிருந்தார்.
தலைமாட்டில் நான் வரைந்த பத்மினி ஓவியம் அருகே குத்துவிளக்கு, அணையாத ஜோதியாக ஒழி உமிழ்ந்தது. கண்கள் குளமாகிவிட்டன.


மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் 1928- ஜனவரி 1-ந்தேதி, கல்வித்துறையில் பணிபுரிந்த சூரிய நாராயணன்-ஆதிலட்சுமி தம்பதிக்குப் பிறந்தவர். அப்பாவுக்கு மகனை IAS அதிகாரி ஆக்க விருப்பம். 5-ம் வகுப்பில் அர்ச்சுனன் வேடம் போட்ட பிள்ளைக்கோ நடிப்பின்மீது காதல். TKS நாடகக்கலைக் குழுவில் சேர்ந்தார்.
செக்கச் சிவந்த மேனி, சுருட்டை முடி, கன்னத்தில் குழியுமாக இருந்த சிறுவனை மடியில் அமர்த்தி, தலை முடிக்கு எண்ணை தேய்த்து வாரி ஜடை பின்னி அழகு பார்ப்பார் KB சுந்தராம்பாள் அம்மையார்.
பளிச்சிடும் கண்கள், நீளமூக்கு, நீண்ட தலைமுடியோடு ஒரு பையனை நாடகக் கம்பெனி முதலாளி, 'யதார்த்தம்' பொன்னுசாமி பிள்ளை ஒருநாள் அறிமுகப்படுத்தினார்.
அந்தப் பையன் இளைஞனானதும், இவர், உடன் நடித்த படம் ' பராசக்தி '. வெள்ளி மணி அடித்தது போல கணீரென்ற குரலில் அடுக்கு மொழி வசனம் பேசுவதை சிவாஜியே ரசித்துப் பார்ப்பார்.
மதுரையில் நேதாஜி பேச்சுக் கேட்டு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1943-ல் ஈரோட்டில் ' சந்ரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. சோர்வடையும்போதெல்லாம் அண்ணாவைப் பார்க்க காஞ்சி சென்று விடுவார்.
அண்ணா வெளிநாடு புறப்பட்ட போது, ராஜு, சினிமாவில் நீ பயன்படுத்திய ஒரு கோட்டை கொடு, ஆல்டர் பண்ணி போட்டுக் கொள்கிறேன் என்று கேட்க, இவர் புது சூட் தைத்துக் கொடுத்தார்.
பெரியாரிடமும் நெருக்கம் உண்டு. சிக்கனத்துக்குப் பேர்போன பெரியார் முழுக்கைச் சட்டை தச்சு அதை ஏன் மடிச்சு அரைக்கை ஆக்கிப் போடறே, அரைக்கை சட்டை தைச்சுட்டு மீதி துணியில் 2 கர்சீப் தைச்சுக்கலாம் இல்லையா என்று கேட்டாராம்.
கலைஞர் அவர்கள் இவருக்கு நாடகங்கள் பல எழுதிக் கொடுத்திருக்கிறார். எஸ்.எஸ்.ஆர்
- ஜெயலலிதா அம்மையார் நடித்த கலைஞரின் 'மணிமகுடம்' படம், நாடகமாகத் தமிழகமெங்கும் நடைபெற்றது. அதன் நாயகியாக மனோரமா நடித்தார்.
முதலாளி, நானும் ஒரு பெண், பூம்புகார்,வானம் பாடி, சிவகங்கைச் சீமை -நான் ரசித்த அவரது படங்கள்.

தேர்தலில் போட்டியிட்டு மக்கள் மன்றத்தில் கால் பதித்த முதல் நடிகர்!
காக்கும் கரங்கள் - இவர் நாயகனாக நடித்த ஏவிஎம் படம். அதில்தான் நான் தமிழ் மக்களுக்கு நடிகனாக அறிமுகமானேன். எஸ்.எஸ்.ஆர்.தங்கை ரேவதியின் காதலனாக 'காக்கும் கரங்களில்' நான்.

மேடையில் பேசிய - என் வாழ்க்கையை செதுக்கிய இலக்கிய பாடல்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
மனிதன் தோன்றிய காலத்தில் மண்ணும், நீரும், காற்றும், வானமும் பொதுவாக இருந்தது. வளர வளர வலுத்தவன் இளைத்தவனை அடித்து அடிமையாக்கினான். பூமியைப் பிரிதான், கடலைப் பிரித்தான், வானத்தையும் பிரித்து விட்டான். பேரழிவூட்டும் ஆயுதங்களைக் கண்டுபிடித்தான், எண்ணற்ற உயிர்களை அழித்தான்.
இனஅழிப்பு உலகமெங்கும் நீக்கமற தொடர்கிறது... காட்டுமிராண்டிகள் கத்தி அரிவாளில் செய்த உயிர்க் கொலைகளை நாகரிக மனிதன் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகள் மூலம் செய்கிறான்.
இந்த அவலங்கள் என்று முடியப்போகின்றன?
2500 ஆண்டுகளுக்கு முன்னரே
எல்லா ஊரும் என் ஊரே உலக மக்கள் அனைவரும் என் உடன்பிறப்புக்கள் என்று சொல்லியவன் தமிழன். அதுமட்டும் அல்ல,
நமக்கு வரும் நன்மை தீமைக்கு நாமே பொறுப்பு. நோய் வருவதும் போவதும் நம் உடலை நாம் பேணிப் பாதுகாப்பதைப் பொருத்தது. சாவு எங்களுக்கு புதிதல்ல, வாழ்க்கை மலர்ப் படுக்கையும் அல்ல
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் பொழுது அதில் சிக்கிக் கொள்கின்ற தெப்பம் எப்படி முட்டி மோதி உருண்டு, புரண்டு ஓடுகிறதோ அது போல மானுட வாழ்க்கை இந்த மண்ணில் அலைகழிக்கப் படுகிறது - என்பதையும் நம் பெரியோர்கள் சொல்லிவிட்டார்கள்.
அதனால் கல்வியில் சிறந்தவர்களையும், செல்வத்தில் சிறந்தவர்களையும் கடவுளாக மதிக்க மாட்டோம். ஏதுமில்லாத ஏழையை, படிக்காத பாமரனை, ஈனப்பிறவியாக நினைத்து காலால் எட்டி உதைக்கவும் மாட்டோம் - என்ற கருத்துக்களை ஒரே பாடலில் சொன்னவர் கணியன் பூங்குன்றனார்.
"யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ; முனிவின் ,
இன்னாது என்றலும் இலமே ; 'மின்னொடு
வானம் தண்துளி தலைஇ , ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல , ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது , திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே ;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ."
புறநானூறு -பாடல் 192
கணியன் பூங்குன்றன்

1977 -ஜூன் 11-ந்தேதி - வளசரவாக்கம் -திலீப்குமார் கார்டன் ..'
'கவிக்குயில்'-படம் சிக்மகளூரில் பெரும்பகுதி படமாக்கப்பட்டது .
இளையராஜா இசையில் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' -என்று பாலமுரளி பாடிய படம்.
படத்தில், கண்ண பரமாத்மா அருள் பெற்ற நான் கனவில் தோன்றிய ஶ்ரீதேவியை நேரில் சந்திக்க, காதல்...அவசரத்தில், அவள் கருத்தரிக்க நேர்ந்து, நான்
அவள் அண்ணன் ரஜினியைச் சந்தித்து விளக்கம் சொல்லப் புறப்படுகையில் வழியில் அடைமழை. மரம் ஒன்று ஒடிந்து, என் தலையில் அடிபட, கடந்த காலச்
சம்பவங்கள் மறந்து விடுவதாகக் கதை போகும்.
வளசரவாக்கம் படப்படிப்பு பகுதி, மலைச்சரிவு போன்ற இடம். வெளியூர் கூலித்தொழிலாளர்கள் குடிசைப்பகுதி... மலைச் சரிவு, அவர்களின் திறந்த
வெளிக் கழிப்பிடம்.
மரம் ஒடிந்து தலையில் விழ, மயக்கமடைந்த நான், தரையில்...தீயணைப்பு வேனில் இருந்து ஆகாயத்திற்கு நீர் பீய்ச்சியடிக்க, மழை போல் பூமியில் அது பாய்ந்தது. மேடான பகுதியில் இருந்து, ஒரு வார மனிதக் கழிவுகள்,
இன்று மாலை அவசரமாய்ப் போனது - எல்லாம் தண்ணீரில் மிதந்து வந்து என் கன்னத்தை வருடிச் சென்றன. நாற்றத்தைச் சகிக்க முடியாமல்,
'தேவராஜ் என்னய்யா இது ?'-என்று டைரக்டரிடம் கேட்டேன்.
'10,000/-ரூபா செலவு செஞ்சு ஆர்க், புரூட் லைட்டெல்லாம் வந்திடுச்சி. பல்லைக்கடிச்சிட்டு அரைமணி நேரம் படுத்துக்க, சீனை முடிச்சிடறேன்'-
என்றார்.
அதிகாலை 4.30-க்கு வீடு திரும்பி குளித்துவிட்டு பெங்களூர் ரவீந்ர கலாக்ஷேத்ரா ஹாலில் , நாடகத்தில் பங்கேற்க, 6 மணி ரயில் பிடித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதக் கழிவை அள்ளும் சகோதரர்கள் தியாகம் நினைவுக்கு வந்தது.... என்று அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற வேதனை இதயத்தை வருடியது...
 கே.பி.சார் விடைபெற்றுக்கொண்டார்.
நடிப்புலக வாழ்க்கையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தொட்ட எல்லையை இயக்குநராகத் தொட்ட மேதை...60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் - திரை உலகம் - சின்னத்திரையில் ஆட்சி செய்தவர்..இவர் வாங்காத விருதுகள் - பட்டங்கள் எதுவும் இல்லை.
திருவாரூர் அருகில் நல்லமாங்குடியில் கர்ணம் கைலாசத்தின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்.. வெள்ளைக்காரக் கலைக்டரிடமே ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவார் தந்தையார்.
4 பெண்கள், 2 பிள்ளைகள்.ஒரே ஜமுக்காள விரிப்பில் மொத்தக் குடும்பம் தூங்க வேண்டும். எனக்கு என்று பாய் , தலையணை, போர்வை எப்போது கிடைக்கும் ?என்று ஏங்கிய சிறுவன்..
12 வயதிலேயே 'நாட்டர்டேம் கூனன்' வேடமேற்று பரிசு தட்டிச் சென்றார். பி.எஸ்.ஸி-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி...1949 -50 முத்துப்பேட்டையில் ஆசிரியர்.
1951 -64 ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி. அங்கேயே 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் ஆங்கிலத்தில் எழுதி ஹீரோவாக நடித்தார்.
ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழு துவக்கி - நீர்க்குமிழி - மெழுகுவர்த்தி- சர்வர் சுந்தரம் -'மேஜர் சந்த்ரகாந்த்' -எதிர்நீச்சல்- நவக்கிரகம் - நாடகங்கள் நடத்தி சென்னையைத் கலக்கினார்.
நீர்க்குமிழி - யில் துவங்கி 100-க்குள் மேற்பட்ட படங்களில் இயக்குநராக எழுத்தாளராக - பங்களிப்பு.
கமல்,ரஜினி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ப்ரியா, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக்,சுஹாசினி- என பெரிய பட்டாளத்துடன் நாகேஷ், மேஜர், சௌகார் - என எண்ணற்ற கலைஞர்கள் இவரால் பட்டை தீட்டப்பட்டனர். அடியேனும் அதில் ஒருவன்.
1970-ல் அதிக பட்ச டென்சனில் மாரடைப்பு ஏற்பட்டு 6 மாதம் படுக்கை. அப்போது சத்தியம் செய்தார். இனி சிகரெட் தொடுவதில்லை- பிஸி நடிகர்கள் எனக்குத்தேவையில்லை -புது முகங்கள் போதும்- படத்தில் ஏதாவது ஒரு செய்தி சொல்ல வேண்டும் - ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் என் படங்கள் இனி பெண்மையைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும்..
கடைசி வரை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்த
இந்த முடிவை கடைசி வரை காப்பாற்றினார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் - அக்னிசாட்சி - சிந்துபைரவி - என் வாழ்க்கையில் மறக்க முடியாத அவரது படைப்புக்கள் !!!!


ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி சில ஆண்டுகள்.. கோவை மாவட்டத்தில் கல்வியின் அவசியம் புரியாத காசிகவுண்டன் புதூர் என்ற எளிய கிராமத்தில் பிறந்தேன் .
பத்து மாதக் குழந்தையாக இருக்கையில் அப்பா மரணம்.
அடுத்த 4 ஆண்டில் கல்லூரி செல்ல வேண்டிய 16 வயது
அண்ணன் பிளேக்கில் போய்விட்டான்...பஞ்சம் தலைவிரித்தாடிய காலம்...இரண்டு பேர் படிப்புச்
செலவைச் சமாளிக்க முடியாமல் 3-ம் வகுப்புடன் அக்கா நிறுத்தம்.
பள்ளி இறுதிக்குப்பின் சென்னையில் ஓவியக்கலை
பயில ஒன்றுவிட்ட மாமா கல்விக்கடன் வழங்கினார்.
100-வது படம் வெளியானபோது மாணவர் சமுதாயத்துக்கு சிறு துளியாவது உதவ எண்ணி தாயார் ஆசியுடன் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை
துவக்கினேன்.
ரூ. 25,000/- வங்கி வைப்பு நிதிக்கு ரூ.2,250/- ஆண்டு வட்டி.
ரூ.1000/- 750/- 500/- எனப் பிரித்து +2 தேர்வில் முதல் நிலை பெற்ற 3-மாணவர்களுக்கு பரிசு வழங்கினோம்.
படிப்படியாக பரிசுத் தொகையை உயர்த்தி 25-ம் ஆண்டு நானே ரூ.50,000/- பரிசு வழங்கினேன்.
இப்போது பிள்ளைகள் பொறுப்பேற்று ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் கடந்த 10 ஆண்டுகளாக பரிசளிக்கிறார்கள்.
1980-ம் ஆண்டு முதன் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் இப் படத்தில் இருக்கிறார்கள்
 குளத்தூர்' பெரியம்மா...
காய்ந்து போன என் கிராமம் மாதிரி இல்லை குளத்தூர். ஊர் அருகே ஆச்சாங்குளம். ஆறு மாதம் தண்ணீர் வழியும். மீதி நாட்கள் காய்ந்த குளத்துக்குள் வெள்ளரி காய்த்து பழுத்து வெடித்து 'வா..வா'எடுத்துச் சாப்பிட்டு' - என்று கெஞ்சும்..
பக்கத்தில் ரயில் பாலம், அதன் மேல் சென்னை போகும் ரயில்.. பெருமாள் கோயிலில் திருவிழா.. ராட்டினந்தூரி, குதிரைத்தூரி, தெருக்கூத்து, சேவல் சண்டை, கும்மிப்பாட்டு, கோலாட்டம்-
என சிறு வயதில் நான் அதிகம் நேசித்த ஊர் குளத்தூர்.
படிக்காத பெரியம்மா, ஏழ்மையை நேசிக்கும் தன் 4 தங்கைகளின் 12 குழந்தைகளும், சனி,ஞாயிறு லீவில் இங்கு வந்தால் - உறவுக் குழந்தைகளை முன்னால் அமர்த்தி, தான் பெற்ற குழந்தைகளை பின் வரிசையில் வைத்து, முதலில் தங்கை குழந்தைகளுக்கு பரிமாறி
மீந்ததை அவர்களுக்கு பரிமாறுவார்.
30 ஆண்டுகள், ஓவியனாக,நடிகனாக ஓடி விட்டன. சென்னை விமானம் அரை மணி தாமதம் என்றார்கள்....அதற்குள் பெரியம்மாவைப் பார்த்து வரலாமே என்று கோவை விமான நிலையத்திலிருந்து காரில் பறந்தேன்.
ஒல்லியான உடம்பில் ஓடியாடி, எல்லா வேலைகளையும் செய்யும் பெரியம்மா
ஓய்ந்து போய் திண்ணையில்.....கண்கள் மூடிய நிலையில்..தலையைத் தடவிக் கொடுத்தேன். கண் விழித்தார்..ஆனந்தக் கண்ணீர் !!
' கண்ணூ ! ரொம்ப நாளைக்கு தாங்க மாட்டன் போலிருக்கு. அப்படி ஏதாவது ஆச்சுன்னா, தவணப்படுத்த நீ வருவாயா சாமீ '....
குபுக்கென்று என் கண்களில் நீர் முட்டியது....
'நீ காட்டின பாசம் எங்கம்மாகிட்ட எனக்கு கெடைக்கலெ. அந்தப் பாசம் உண்மைன்னா இந்தியாவுல எங்கிருந்தாலும் வந்திடுவேன்'...என்றேன்..
11-12-1992 - மாலைப் பொழுது.. குளத்தூரிலிருந்து, எதிர்பார்த்த போன்...
அன்று ஏனோ கோவை ரயில்கள் ரத்து!. வாயு தூத் ஆட்கள் எப்படியும் இடம் ஒதுக்குகிறோம் வாருங்கள் என்றார்கள்..
அதிகாலை 5.30-க்கு பறந்து 7.00 மணிக்கு ஊர் போய் பெரியம்மா தலை மாட்டில் நான்தான் முதல் ஆள்... என் பெரியம்மா பாசம் வென்று விட்டது...

 திருமிகு.சிவக்குமார் அவர்களுக்கு நன்றிங்க..
என அன்பன் 
பரமேஸ் டிரைவர் - 
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.
 வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். 
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 
 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 
 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 
 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் 
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 
 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் 
 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும் 
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 
 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 
 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 
 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது...... gowrishankar by (9965372183)