ஞாயிறு, 8 மார்ச், 2015

தன்னொழுக்கத்தின் சக்கரவர்த்தி திருமிகு. சிவக்குமார் அவர்கள் கதை-03


மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.தனிமனித ஒழுக்கத்தின் சக்கரவர்த்தி அவர்களின் கடந்துவந்த பாதை இனியொரு நாள் கிடைக்காமல் போனால்?அதாங்க அவரது பக்கத்திலிருந்து திருடி இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

1996 -மே மாதம் 31-ந்தேதி -கோலாலம்பூர்...
மலேசிய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பிரதிநிதிகளின் சங்கம்( NAMLIA) தனது 17- வது மாநாட்டினை தொடங்கியது. மலேசியாவில் 90,000 பிரதிநிதிகள்..உலக அளவில் 21 நாடுகளிலிருந்து வி.ஐ.பிக்கள் - நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

என்னோடு மலேசியாவிற்கு முதன்முதலாக வந்த நண்பர் - பயணக் களைப்புடன் நடு நிசி தாண்டிய கலை நிகழ்ச்சிகள் பார்த்த களைப்பில் - இந்திய நேரம் காலை 10.30 மணி வரை உறங்கிவிட்டார். மலேசிய நேரம், இந்திய நேரத்தைவிட 2.30 மணி கூடுதல் என்பதை மறைந்துவிட்டார். அடித்துப் பிடித்து அவர் தயாரான போது மலேசிய நேரம் பிற்பகல்1.30... வேகமாக டைனிங் ஹால் ஓடினோம்.
மாநாட்டு விருந்தினர் சாப்பிட்டு முடித்து விட்டிருந்தனர். பொறுமையற்று 30 மாடி லிப்டில் இறங்கி, சாலையைக் கடந்து ஓடி, விழா நடக்கும் ஓட்டலுக்குள் நுழைந்து மீண்டும் 50 மாடி... லிப்டில் பயணித்து, மூச்சிறைக்க என் ஹாலுக்குள் கால் வைத்தபோது சரியாக 2.00 மணி.

ஒவ்வொருவரும், கடின உழைப்பால் உயர்ந்த அனுபவங்களைப் பற்றி பேசினோம். நேரம் தவறாமை பற்றிப் பேசிய நான் - காலத்தின் அருமை கருதி- இன்று பகல் நான் உணவு அருந்தாமல் ஓடிவந்தேன் என்றேன்..எல்லோருக்கும் அதிர்ச்சி... ஒரு சம்பவம் சொன்னேன்.
முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அமெரிக்காவில் ஒரு விழா முடிந்து விருந்தில் கலந்து கொண்டார். மது அருந்தச் சொன்னார்கள். பழக்கமில்லை என்றார். லேசாக நாக்கில் சுவைத்து விட்டுத் தாருங்கள் என்றனர். ' எங்கள் நாட்டில் கொஞ்சம் கற்புடையவள் - நிறைய கற்புடையவள் என்ற பேதமில்லை. கற்புடையவள்- கற்பிழந்தவள் என்றுதான் சொல்வார்கள். ஒரு சொட்டு நாக்கில் பட்டாலும் நான் குடிகாரன்தான்' என்றார்.
அதே போல் 2.00 மணி நிகழ்ச்சிக்கு 2.10 க்கு வந்தாலும் லேட்தான் 2.02 நிமிடத்துக்கு வந்தாலும் லேட்தான் என்றேன். கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது...

 கி.பி.1004 முதல் 1010 வரையிலான காலகட்டத்தில் ராஜராஜ சோழனால்
கட்டப்பட்டது இந்த தஞ்சை பெரிய கோயில்.
கலசத்தைத் தாங்கி நிற்கும் கல் 36 அடி சுற்றளவு கொண்டது. அதனால் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை கலசத்தின் நிழல் அந்தக் கல் மீதே விழுந்து விடும். அதற்கு முன்னும் பின்பும் நிழல் காம்பவுண்டுக்கு வெளியே போய்விடும்.
1962 -ஜூன் 1 -ந்தேதி எனது 19 -ஆவது வயதில் வரைந்த ஓவியம். அப்போது ஓவியக்கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
நான் சென்ற போது நாள் முழுதும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆகவே கலச நிழல் எங்காவது தரையில் விழுகிறதா என்று பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை.
மங்களாம்பிகா ஓட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை எடுத்து குளித்து தயாராகி காலை 6.30 மணிக்கு துவங்கி பிற்பகல் 2.30 மணி வரை ஒரே மூச்சாக வரைந்து முடித்த ஓவியம்.

 ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். ஓவியக்கல்லூரி படிப்பு முடித்து நடிக்கத்தொடங்கி 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.
மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் நாடகக்குழுவுடன் மும்பைக்குச் சென்று 4 நாடகங்கள் ஷண்முகானந்தா ஹாலில் போட்டோம்.
பகல் பொழுதில் குடும்ப நண்பர் டி.எஸ். மகாதேவன் அவர்கள் - துறைமுகத்தில் கப்பல் வடிவமைக்கும் பணியில் இருந்த பாலக்காட்டுக்காரர் - மகன் சுவாமி வழிகாட்ட, கொலாபா பகுதியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடத்தின் 13-வது மாடியிலிருந்து மும்பை நகரத்தின், பரந்து விரிந்த காட்சியை, ஸ்கேல் பயன்படுத்தாமல் 3 மணி நேரத்தில் வரைந்த, பென்சில் ஸ்கெச் இது. வரைந்த ஆண்டு 1972.


1962- மே மாதம் 27-ந்தேதி - ஓவியம் : அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -சிலைகள்.....
ஓவியக்கலை கல்லூரி 3-ம் ஆண்டு கோடை விடுமுறையில் உடன் பயின்ற நண்பர் மதுரை சந்திரசேகர் வீட்டில், 4 நாட்கள் தங்கி, அவரும் நானும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - 1000 கால் மண்டபத்திலுள்ள சிலைகள் -திருமலை நாயக்கர் மகால் - திருப்பரங்குன்றம் - தெப்பக்குளம் என்று மணிக்கணக்கில், வண்ண ஓவியங்கள்- ஸ்கெச்கள் செய்தோம்.
சொக்கநாதர் சந்நதி எதிரில், அக்னிவீரபத்ரர் - அகோரவீரபத்ரர் -
அடுத்த மண்டபத்தில், ருத்ர தாண்டவம் - பத்ரகாளி சிலைகள்...
காலை 8 மணிக்கு, சிற்றுண்டி முடித்து வந்து உட்கார்ந்து மாலை 6 மணி வரை, சுமார் 10 மணி நேரம் வரைந்த ஓவியம் இது.
12 மணிக்கு, விளக்குகளை அணைத்து விட்டு கோயில் கதவுகள் எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டிவிட்டுப் போய் விடுவார்கள். மாலை 4 மணிக்கு கதவுகள் திறக்கப்படும். கும்மிருட்டில், நானும் சந்திரனும் பகல் உணவைத் தவிர்த்து, தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தோம்.
சந்திரனின் பெரியம்மா - தன் ஒரே மகனுடன் - 5,6 குழந்தைகள் உள்ள தங்கை வீட்டுக்கு வந்து , அத்தனை குழந்தைகளையும் பாசம் காட்டி வளர்த்த
புண்ணியவதி .....
கோயிலுக்குள், பசியில் பிள்ளைகள் இருக்கும் என்று யோசித்து ரெண்டு பொட்டலம் சாம்பார் சாதம், தயிர் சாதம் தயார் செய்து எடுத்து வந்து, உள்ளே அனுமதிக்க மறுத்த கோவில் காவலருடன் சண்டையிட்டு - பிள்ளைகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று மிரட்டி - 'விக்கட் கேட்'- வழியே உள்ளே நுழைந்து, இருட்டில், ஒவ்வொரு மண்டபமாக எங்களைத் தேடி, கண்டுபிடித்து
பசியாற்றிய தாய் அன்பை, இப்போதும் நினைத்து கண்கலங்குகிறேன்....

 எனது 10-வது வயதில் 'தேவதாஸ்' படம் பார்த்தேன். பார்வதி - தேவதாஸ் இரண்டு அமர காதலர்களின் உடல்களும் ஒரே சிதையில் தீ மூட்டப்படுவது கடைசிக் காட்சி.
படம் பார்த்துவிட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டவாறு சூலூரிலிருந்து
3 கி.மீ.தூரமுள்ள என் கிராமத்துக்கு இரவில் நடந்தே போனேன்.
அன்று பார்வதியாக நடித்த சாவித்திரியை என் சகோதரியாக வரித்துக் கொண்டேன்.
வணங்காமுடி - பாசமலர் - நவராத்திரி - கொஞ்சும் சலங்கை -கை கொடுத்த
தெய்வம்- என்று எத்தனை படங்கள் , எத்தனை விதமான வேடங்கள்!!.. 'மிஸ்ஸியம்மா' - 'மாயா பஜார்' -அவரை தேவதையாகக் காட்டிய படங்கள்.
'பாச மலர் '- கிளைமாக்ஸில் பார்வையிழந்த சிவாஜியைத் தேடி மகளுடன் சாவித்திரி வருவார். 'எங்கண்ணா போயிட்டீங்க? - என்று கதறுவார்' நீ கிழிச்ச அன்பு வட்டத்தை தாண்டி என்னால எங்கயும் போகமுடியலம்மா' ன்னு சொல்லும்போதும், 'கை வீசம்மா கை வீசு.. கடைக்குப்போலாங் கை வீசு..'
என்று பாடி அழுத போதும் தமிழகத் தியேட்டர்கள் ரசிகர்களின் கண்ணீரில் மிதந்தன..
'சரஸ்வதி சபதம் -கலைவாணி ; கந்தன் கருணை-யில் முருகன் அன்னையாக என்னோடு நடித்தவர், பின்னாளில் 'புது வெள்ளம்' - படத்திலும் என் அம்மாவாக நடித்தார்..
கால வெள்ளத்தில் அவரே படம் தயாரித்து, இயக்கி, நடித்து, தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து - காலம் அவரை கடுமையாகத் தண்டித்தது..
அந்தச் சூழலிலும் என் 100- வது பட விழாவுக்கு வந்து மாலை அணிவத்து உச்சி மோர்ந்தார் அந்த அன்புச் சகோதரி நடிகையர் திலகம் !!!

 2015 - பிப்ரவரி 18-ந்தேதி தயாரிப்பாளர்களின் 'சாம்ராட்' டி.ராமாநாயுடு 78 வயதில் மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்.
தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் 150 க்குள் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்.
தனிமனிதனாக அதிகப்படங்களைத் தயாரித்து கின்னஸ் ரெக்கார்டில் இடம்
பிடித்தவர்.
2009 -ல் தாதா சாகேப் பால்கே விருது; 2012 - ல் பத்மபூஷண் விருது பெற்றவர்.
1999 முதல் 2004 வரை மத்திய பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்.1991-ல் அறக்கட்டளை நிறுவி ஏழை எளியவர்களுக்கு கல்வி, சுகாதார வசதி செய்து கொடுத்தவர்.
ஆந்திரர்கள் எல்லோரும் மௌரிய வாரிசுகள் என்பதால் இவரும் 6 அடி தாண்டிய நெடிய உருவம். கம்பீரமான தோற்றம்.....
வெள்ளை டி சர்ட்,வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூஸ், கருப்பு கண்ணாடி- இவரது அடையாளம்... கலைந்த தலைமுடி, கசங்கிய சட்டை, வியர்வை முகத்துடன் இவரை இறைவனே பார்த்திருக்க முடியாது என்று சொல்லலாம்.
தீட்சண்யமான கண்கள், வெள்ளை மனம், பதட்டமில்லாத சுபாவம். தூய்மையின்
அடையாளம் .. இவர் கோபத்துடன் இரைந்து பேசி யாரும் பார்த்திருக்க முடியாது.
1964-ல் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் துவக்கி தயாரித்த முதல் தெலுங்குப் படம் 'ராமுடு பீமுடு' அதிரடி வெற்றி...
வாகினி நாகிரெட்டியாரோடு இணைந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ' வசந்த மாளிகை' - சிவாஜி, வாணிஶ்ரீ நடிப்பில் ஒரு மைல் கல்..
1974-ல் செல்வி ஜெயலலிதா அவர்களின் 100-வது படம்"திருமாங்கல்யம் "- இவர் தயாரிப்பு.
ஒளிப்பதிவு -மேதை மார்க்கஸ் பார்ட்லே... இயக்கம் ஏ. வின்சன்ட்..முத்துராமன் அவர்களும் நானும் இரண்டு ஹீரோக்கள்....
படப்பிடிப்புத் தளத்துக்கு அருகில் கொட்டகை போட்டு, சுடச்சுட பொங்கல் , வடை, பூரி கிழங்கு, ஊத்தப்பம்- பகல் உணவில் ஆடு, கோழி, காடை, கவுதாரி என ராஜ விருந்துதான் தினமும் ...
இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு பிற்பகல் படப்பிடிப்பில் உண்ட களைப்பில் நடிகர்கள் நெளிவதைப் பார்த்து அப்படி ரசிப்பார் நாயுடு..
ஓராண்டு முன் ராமாநாயுடு பேத்தி திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.. சூர்யா, கார்த்தியுடன் நானும் ஹைதராபாத் சென்றிருந்தேன்..
' முதலாளீ '- என்ற என் குரல் கேட்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார் ..
தமிழ் சினிமாவின் " கோல்ன் டேஸ்" மனிதர்கள் மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.....


1979..டிசம்பர் 14-ந்தேதி..மாலை 4-மணி.
சிங்கப்பூர் விமான நிலையம்...
'ராமன் பரசுராமன்'- படத்தில், எனக்கு இரட்டை வேடம்.. கதைப்படி சிறு வயதில் என் தாயாரை கொலைப்பழி சுமத்தி சிறையில் அடைத்த 3 வில்லன்கள் , இப்போது, சிங்கப்பூர்- ஹாங்காங்- ஜப்பான் ஆகிய நாடுகளில் சொகுசாக வாழ்கிறார்கள்..வாலிபர்களான பிறகு - பரசுராமனும், டாக்டர் ராமனும், அவர்களைப் பழி வாங்க அந்த 3 நாடுகளுக்குச் செல்வது படத்தின் பிற்பகுதி..

படக்கதைச் சுருக்கத்துடன்,விமான நிலையத்தில் படமாக்கவுள்ள காட்சிகள் பற்றி, அதிகாரிக்கு, ஒரு பக்க அளவில் எழுதிக்கொடுக்க, 30 நிமிடங்களே அங்கு படமாக்க அனுமதித்தார்கள். நடித்தவர்கள், ஒளிப்பதிவாளர் , இயக்குநர் என 8 பேர் மட்டுமே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம்.
எல்லா விமான நிலையங்களின் ஓடு பாதையும், உள் கட்டமைப்பும், ஒரே மாதிரி இருக்கும் என்பதால், சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே, 3 நாடுகளுக்கும் ஹீரோக்கள் சென்று, விமானத்திலிருந்து இறங்குவது- ஏறுவது போன்ற காட்சிகளைப் படமாக்கிவிட முடிவு செய்தோம்...
முதலில் ஒரு விமானம் வந்து இறங்குவதைப் படம் பிடித்தோம்..ஓடு தளத்திலிருந்து வந்து நின்று, ஏணி இணைப்புக்கள் கொடுத்தவுடன்,கண் இமைக்கும் நேரத்தில், பரசுராமன் வேடத்துக்கு, நான் முரட்டு மீசை ஒட்டி, தலைமுடியைக் கலைத்துவிட்டு, ஜீன்ஸ் பேண்ட், சட்டை மாட்டி, ரத்தி அக்னி ஹோத்ரியை , பிடித்து இழுத்துக் கொண்டு, ஏணி வழியே ஏறி, விமானத்துக்குள் நுழைந்து, பயணிகளோடு இறங்குவது போல் படமாக்கினோம்.
அடுத்த 2 நிமிடங்களில், வேறு ஒரு விமானம் தரை இறங்குவதைப் படமாக்கினோம். ஓடுதளத்திலிருந்து, அது வந்து நிற்பதற்குள், நான், தலை வாரி, முரட்டு மீசை அகற்றி, டாக்டர் உடையணிந்து , லதாவை இழுத்துக் கொண்டு விமானத்துக்குள் ஓடி, இறங்குவதைப் படம் பிடித்தோம்..
இப்படி, 3 நாடுகள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு, 6 தடவை, ரன்வே ரோட்டில்- ஜமுக்காள மறைப்பில், ரத்தியும், லதாவும், உடைகள் மாற்றி நடித்தது, மறக்க முடியாத சம்பவம். தீயாய் வேலை செய்து 25 நிமிடங்களில், திட்டமிட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்த போது, பெருமிதமாக இருந்தது.
கிராமத்தில், 15 பைசா டிக்கட் வாங்கி, தரையில் அமர்ந்து படம் பார்த்த, ஒரு சாதாரண இளைஞனை, வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று படம் எடுத்த அமரர் கோபிநாத் அவர்களை நன்றியுடன் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...

யோகாவும் நானும்
16 வயதில் சென்னை வந்தபோது இளம் தொப்பை இருந்தது. அதைக் கரைக்க, கன்னிமாரா நூலகத்தில் ரூ.3/- கட்டி உறுப்பினராகி, யோகா பற்றி பெங்களூர் சுந்தரம் அவர்கள் எழுதிய புத்தகத்தைப்
பார்த்துப் பயிற்சி செய்தேன்.
6 மாதங்களில் 38 ஆசனங்கள் கற்றுக்கொண்ட கொண்டேன். ஆசனவாய் வழியாக காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் 'பஸ்தி' கைவரப்பெற்றேன்.
காபி,டீ, புகை,மது, 'டீன் ஏஜ்' காதல் அப்போதே தவிர்த்தது, மனதை ஒருமுகப்படுத்தி யோகா செய்ய வசதியாக இருந்தது.
1988- ஜனவரி 1-ந்தேதி முதல் அசைவம் நிறுத்தி விட்டேன். முட்டை மட்டும் சாப்பிடுகிறேன்.
இளம் வயதில் அழகான உடல் கட்டு பெற 'ஜிம்' பயிற்சி நல்லதுதான். ஆனால் 90 வயதிலும் யோகா பயிற்சி செய்யமுடியும்.
65 வயதுக்கு மேல் சிரசாசனம் தவிர்க்கச் சொல்கிறார் டாக்டர்.
தற்போது 12 முக்கிய ஆசனங்கள் மட்டும் செய்கிறேன். மன அமைதி, உடல் சுறு சுறுப்புக்கு யோகா என்றும் உதவும்.
இப்பொழுது எனக்கு 70 வயது. கொஞ்சம் தொப்பை இருக்கிறது. ரெட்டை நாடி உடம்புக்காரர்களுக்கு சில சமயம் இது தவிர்க்க முடியாது.
50 வயது தாண்டியும் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி அண்டாமல்
பார்த்துக் கொண்டால் அதுவே பெரிய விஷயம்.

 திருமிகு.சிவக்குமார் அவர்களுக்கு நன்றிங்க..
என அன்பன் 
பரமேஸ் டிரைவர் - 
சத்தியமங்கலம்.
ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக