புதன், 25 பிப்ரவரி, 2015

.புளியோதரை செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கம் வாங்க.......புளியோதரை செய்யலாம் வாங்க..
 தேவையான பொருட்கள் அரிசி 400கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் பத்து,நல்லெண்ணெய் நூறுகிராம்,முந்திரிப்பருப்பு அல்லது நிலக்கடலை இருபது கிராம்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,மல்லித்தூள் இரண்டுஸ்பூன்,கறிவேப்பிலை,உப்பு,கடுகு,உளுந்து,பெருங்காயம் தேவையான அளவு,
செய்முறை
 சோற்றை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் காய்ந்தபிறகு கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து,கடலைப்பருப்பு வறுத்து இத்துடன் பெருங்காயத்தையும் போடவும்.மிளகாயை இரண்டிரண்டாக கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வறுத்தபிறகு புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும்.மல்லித்தூள் சேர்த்து தேவையானஅளவு உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் மேலாக வரும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.அடுப்பிலிருந்து திறக்கும்போது கறிவேப்பிலையை போடவும்.முந்திரி அல்லது நிலக்கடலையை தனியே வறுத்து சோற்றில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிய பிறகு புளிக்காய்ச்சலையும் சேர்த்து சோற்றை நன்கு கிளறவும்

தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..தக்காளிச் சோறு செய்யலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்
 அரிச 400கிராம்,தக்காளி கால் கிலோ கிராம்,நாட்டுத்தக்காளி சேர்த்தால் புளிப்பு அதிகமாக இருக்கும்.பெரிய வெங்காயம் ஒன்று,பச்சை மிளகாய் நான்கு,மிளகாய்த்தூள் இரண்டு  ஸ்பூன்,மஞ்சள் தூள் கால் ஸ்பூன்,கொத்துமல்லித்தூள் ஒரு ஸ்பூன்,தாளிக்க எண்ணெய் கடுகு,உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை,உப்பு தேவையான அளவு 
செய்முறை
 சோற்றை குழைந்துவிடாமல் வேகவைத்துக்கொள்ளவும்,தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வெங்காயத்தை நீளமாக பொடியாக  நறுக்கிவைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,தாளித்து அத்துடன் தக்காளி,வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு சுருள வதக்கிக்கொள்ளவும்,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியபிறகு இறக்கிவைத்து சோற்றுடன் கலந்து அத்துடன் கறிவேப்பிலையை பச்சையாக சேர்த்துக்கிளறவும்.தொட்டுக்கொள்ள வெங்காயத்தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.

எலுமிச்சை சோறு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு வாங்க..எலுமிச்சை சோறு செய்யலாம் வாங்க...
 அரிசி 400கிராம்,எலுமிச்சை பழம் 2,பச்சைமிளகாய்10,கடுகு ஒரு ஸ்பூன்,உளுந்து ஒரு ஸ்பூன்,கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன்,வெந்தயம் கால் ஸ்பூன்,பெருங்காயம் சிறிதளவு,முந்திரி ஐம்பது கிராம்,அல்லது நிலக்கடலை சேர்க்கலாம்.கறிவேப்பிலை,மஞ்சள்தூள்,எண்ணெய்,உப்பு தேவையான அளவு 
செய்முறை;
 முதலில் சோற்றை உதிரியாக வருமாறு குக்கரில் வழக்கமாக ஊற்றும் தண்ணீரீல் அரைப்பங்கு குறைத்து ஊற்றி சாதமாக வேகவைத்துக்கொள்ளவும். எலுமிச்சைப்பழத்தை கசப்பில்லாமல் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இதனுடன் உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்துக்கொள்ளவும்,வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு,உளுந்து,வெந்தயம் தாளித்து எலுமிச்சைச்சாற்றில் சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து அதில் முந்திரிப்பருப்பை சேர்த்து அளவாக வறுத்து சோற்றில்கொட்டிக் கலக்கி இத்துடன் எலுமிச்சைச்சாற்றுக்கலவையையும் சேர்த்து சோற்றை கரண்டியால் நன்கு கிளறி விடவும்.கவனி கடலைப்பருப்பையும் ,முந்திரியையும் எலுமிச்சைச்சாற்றில் சேர்த்தால் புளிப்பு ஏறிவிடும். அதனால்தான் தனியாக வறுத்துக்கொள்ள கூறியுள்ளேன். 
எலுமிச்சை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை,மிளகாய்,பூண்டு,உப்பு வைத்து அரைத்த துவையல் சிறந்தது.

துவரம் பருப்புச் சோறு

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். துவரம்பருப்புசோறு செய்யலாம் வாங்க...
 தேவையான பொருட்கள்;
 பச்சை அல்லது புழுங்கல் அரிசி 400கிராம்,துவரம் பருப்பு 100கிராம்,புளி எலுமிச்சை அளவு,மிளகாய் வற்றல் பத்து அல்லது பதினைந்து,சீரகம்-ஒரு ஸ்பூன்,வெள்ளைப்பூண்டு ஐந்து பல்,சின்ன வெங்காயம் 100கிராம்,மஞ்சள் தூள் அரை ஸ்பூன்,கறிவேப்பிலை இரண்டு கொத்து,கடுகு இரண்டு ஸபூன்,உடைத்த உளுந்து ஒரு ஸ்பூன்,நல்லெண்ணெய்25கிராம்,தேங்காய் அரைமூடி,உப்பு தேவையான அளவு.
செய்முறை;பரமேஸ் டிரைவர்
 முதலில் மிளகாய் வற்றல்,சீரகம்,பூண்டு ஆகியவற்றை நன்கு மசித்துக்கொள்ளவும்,சாம்பார் வெங்காயத்தை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக்கொள்ளவும்,புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்,தேங்காயை துருவி வைக்கவும்,
 பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றவும்,அரிசியையும்,பருப்பையும் நன்கு கழுவி அதில் கரைத்த புளி,மசித்த மிளகாய்விழுது,வெங்காயம்,தேங்காய்த்துருவல்,மஞ்சள் தூள்,உப்பு,உருவிய கறிவேப்பிலை போட்டு கரண்டியால் கலக்கி பிறகு குக்கரை மூடி அடுப்பில் பத்து நிமிடம் சமைக்கவும்,சோறு வெந்தபிறகு இறக்கிவைத்து ஆவி அடங்கியபிறகு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வடகம் தாளித்து குக்கரில் வெந்த சாதத்தில் கொட்டிக் கிளறவும்.பிறகு ஜவ்வரிசி வடகம் அல்லது அரிசி வடகம் தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்.சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

கறிவேப்பிலை துவையல்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
  வீட்டில் கருவேப்பிலை அதிகமாக இருந்தால் கவலைப்படாதீங்க. கறிவேப்பிலைத் துவையல் செய்யுங்க
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை ஒரு கப், சின்ன வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, புளி சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு, உப்பு, எண்ணெய் 2  ஸ்பூன்.

செய்முறை: கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு, புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு தாளித்து கொட்டவும்.

ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் செய்யலாம் வாங்க..

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சாம்பார் செய்யும் முறை பற்றி காண்போம்.
தேவையானப் பொருட்கள்
துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
கத்திரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய லெமன் அளவு
அரைப்பதற்கு:
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தக்காளி - ஒன்று (பெரியது)
தேங்காய் - ஒரு ஸ்பூன்
சாம்பார்பொடி - 4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
வற்றல்மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு
 செய்முறை
முதலில் பருப்பை வேக வைக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும்.
வேகவைத்த பருப்புடன், 4 டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
அரைக்க கூறியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும்.
காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்

தக்காளி தொக்கு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தக்காளித்தொக்கு செய்வது பற்றி காண்போம்.
                                           
தேவையான பொருட்கள்: தக்காளி - 500 கிராம்,  மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
தனியா தூள் - 3 தேக்கரண்டி,  பூண்டு - 20 பல், இஞ்சி - ஒரு அங்குல துண்டு
நல்லெண்ணெய் - 3/4 கப், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,                            கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை: இஞ்சியை தோல் சீவிக் கொள்ள வேண்டும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு இரண்டையும் அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளியை போட்டு, அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் வேக வைத்து, தோல் சற்று சுருங்கியவுடன் எடுத்து விட வேண்டும்.
பிறகு தக்காளியின் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 30 நொடி கிளறி விட வேண்டும்.
கிளறிய பின்பு, அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி மேலும் ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
அதன் பின்னர் ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுதுடன் மசாலா எல்லாம் ஒன்றாக கலந்ததும் ஒரு தட்டை வைத்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து, தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரும்பொழுது கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். இது ஒரு வாரம் வரைக்கும் கெடாமல் இருக்கும்.

தக்காளி சாதம்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 
 தக்காளி சாதம் செய்யலாம் வாங்க...
 
விருந்தின்போது ஸ்பெஷலாக ஒரு சாதம் தயாரிக்க விரும்பினால் அதற்கு தக்காளி சாதமே ஏற்றது. சூடாக தக்காளி சாதம் தயாரித்து வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள். செய்முறை இதோ:

தேவையானவை

பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - 2
தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நெய் - அரை கப்
புதினா - கைப்பிடி அளவு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை

மீடியம் சைஸ் குக்கரில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும்.

இஞ்சி பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும். நீளவாக்கில் வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். புதினா, மல்லியை சுத்தம் செய்து கொள்ளவும். பட்டை கிராம்பு வெடித்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு புதினா மல்லி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு மூடி தேங்காயை மிக்சியில் அடித்து கையால் நன்றாகப் பிழிந்து 2, 3 தடவை பால் எடுக்கவும். பாலுடன் தண்ணீர் சேர்த்து 4 கப் அளந்து குக்கரில் விட்டு தாளித்த சாமான்களுடன் அரிசியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்ததும் எடுத்து விடவும். சூடான தக்காளி சாதம் ரெடி. இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தே குக்கரை திறக்கவும். வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

வேப்பம் பூ ரசம்......

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.வேப்பம்பூ ரசம் செய்வது பற்றி காண்போம்.

தேவையானவை:
புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து
சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

==========================================================================

 வேப்பம் பூ ரசம்  எவ்வாறு செய்வது.
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப. பொடிப்பதற்கு: மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. தாளிக்க:  கடுகு - அரை டீஸ்பூன், வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு (வெல்லம் கரைத்தது), பெருங்காயம், கறிவேப்பிலை  சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து  வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து  காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதனால உங்க வீட்டுல வேப்பம்பூ ரசம்,  பச்சடி வச்சி அசத்துங்க.

நண்டு மசாலா......

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.கொங்குத்தமிழ் மன்றம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். நண்டு மசாலா செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
நண்டு மசாலா என்றாலே நாவில் நீர் ஊறும். முறையான பக்குவத்தில் இதை தயாரித்தாலோ வாசனை ஊரைத் தூக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்

நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம் நறுக்கியது
தக்காளி - 100 கிராம் நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காயë -அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் இஞ்சி, பூண்டு வாணலியில் வறுத்து அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

அதன்பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை போதுமான உப்பு சேர்க்கவும்.

நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கிவிடவும்