வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வீர மாமுனிவரின் தமிழ்ப் பணிகள்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.வீர மாமுனிவர் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீர மாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை