எழுத்தோசை
தேனொக்கும் செந்தமிழே!!!... நீ கனி! நான் கிளி!! வேறென்ன வேண்டும் இனி? என அன்னைத் தமிழாம் கொங்குத் தமிழில் அகிலமும் கற்போம்,,,,,,,
வியாழன், 20 ஆகஸ்ட், 2026
திங்கள், 20 அக்டோபர், 2025
சத்தியமங்கலம்முத்தமிழ்ச் சங்கம் - பொங்கல் விழா-2026
தமிழார்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த ஆண்டின் பொங்கல்திருவிழா, வருகின்ற 2026 ஜனவரி மாதம் 14 ஆம்தேதி புதன்கிழமை தொடங்கி போகி,சூரியப் பொங்கல்,மாட்டுப்பொங்கல்,காணும்பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.
சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் சார்பாக அனைவரின் நலன் கருதி ஒருவாரம் முன்னதாகவே அதாவது 2026 ஜனவரி 2 ஆம்தேதி தொடங்கி ஜனவரி 4ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்யப்பட்ட்டு பொங்கல்விழா கொண்டாடப்படும்.
முதல்நாளான ஜனவரி 2ஆம்தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 4.00மணிவரை மூலிகைத்தாவரங்கள் கண்காட்சி மற்றும் விளக்கமளித்தல்.சித்த மருத்துவர்களின் கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை நடத்தப்படும்.
2ஆம் நாளான ஜனவரி 3 ஆம்தேதி சனிக்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 4.00மணிவரைமற்றும் ஜனவரி 4 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00மணிக்கு விழா நிறைவு செய்யப்படும். தமிழர் வாழ்வியலோடு இணைந்த பலதரப்பட்ட கலைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக, பட்டிமண்டபம், நாட்டுப்புறப்பாடல்கள்,கும்மி, தெருக்கூத்து நாடகம், பேச்சுப்போட்டி, பாரம்பரிய உணவுகள்,ஓவியம்,சிற்பம்,விருந்தோம்பல்,இசை,நடனம்,தற்காப்புக்கலைகள், இலக்கியக்கலைகள், உள்ளிட்ட பலதரப்பட்ட கலைகளில் குழு முடிவின்படி தேர்ந்தெடுத்த கலைகள் மட்டும் நடத்தப்படும்.
3ஆம் நாளான ஜனவரி 4 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணிக்கு பொங்கல் விழாக் கூட்டம் நடத்தி நிறைவுசெய்யப்படும்.
பொங்கல் திருவிழாவினை ஒருவாரம் முன்னதாக சத்தியமங்கலம் முத்தமிழ்ச்சங்கம் நடத்துவதன் நோக்கம் ....பொங்கல் திருவிழா அன்றைய கொண்டாட்டத்திற்கு இடையூறு இல்லாமல் தமிழர்களின் பாரம்பரியத்தை புதுப்பிக்கும்நிகழ்வாக ஒருவாரம் முன்னதாகவே நடத்தி,
சுற்றுவட்டார பள்ளிகளுக்கிடையே மருத்துவத்தாவர்கள் கண்காட்சி போட்டியாக நடத்தப்படும். எல்லாப் பள்ளிகளையும் வரவழைத்து பார்வையிட்டு மூலிகைத்தாவரங்களைப்பற்றி அறிந்துகொள்வதுடன் மருத்துவப்பயன்களையும் தெரிந்துகொள்ளும்வகையில் தகவலளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் அன்றாடம் அலட்சியப்படுத்துகின்ற கண்ணெதிரே கிடைக்கும் தாவரங்களின் மருத்துவப்பயன்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
தமிழர் பாரம்பரியம் சார்ந்த கலைகளைப்பற்றி இன்றைய சமுதாயம் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்துவது. தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு காப்பது .விரைவில் நிகழ்ச்சிநிரல் அட்டவணை தயாரித்து அறிவிக்கப்படும்.
வெள்ளி, 10 அக்டோபர், 2025
ஒரு தலைவனையோ, தலைவியையோ, இணையையோ, ஒருஉயிரினத்தையோ, ஒரு உயிரற்ற பொருளையோ, ஒரு இடத்தையோ, ஒரு காலத்தையோ (நொடி, நாள், ஆண்டு), சுற்றியமைத்துப் பெருமையை/சிறுமையைக் கூறி பிறவற்றிற்கு சிறப்பில்லாது தொட்டும் தொடாமலும் விளக்கி, ஒரு பக்கத்திலோ, சில பக்கங்களிலோ இடம் பெருமளவு எழுதப்பட்ட கதை, சிறுகதை.
இச்சிறுகதையில், பலபேர் சிறப்பும், பலவற்றின் சிறப்பும் எழுதிக் குழப்பி, எது சிறந்தது ஏன் சிறந்தது, எதற்காக எழுதப்பட்டது எனப் புரியா வண்ணம் எழுதாமல் இருந்தாலே போதுமானது.
ஆனால், பலர், இப்பொழுது விளக்கம் கூறுவார்கள். நானூறு ஆண்டிற்குமுன் மேல் நாட்டவர் ஒருவர் சிறுகதைக்கு விளக்கம் தந்து அன்றிலிருந்து சிறுகதை இலக்கியம் தோன்றி வளரத் தொடங்கியது என்றும், அவர் சொன்ன வரைமுறைகளே அடிப்படை என்றும். அவர்க்கு, ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே இயற்றப்பட்ட பெருங்காப்பியங்கள் கொண்டுள்ள சிறுகதைகள் கண்ணுக்குப் புலப்படாது. இரண்டடியில் இலக்கணத்தோடு எழுதிய ஆயிரத்து முந்நூறு திருக்குறள்கள் இரண்டாயிரமாண்டிற்கு முன்பே இயற்றப்பட்டிருந்தாலும், இலக்கணமின்றி, கொச்சைத் தமிழோடும், பிறமொழி கலந்தும், வரம்பின்றி எழுதப்பட்ட சிறு சொற்றொடர்கள், புதுமை இலக்கியம் என்றும் அவற்றால் தான் தமிழ் வாழ்கிறது என்றும், அவர் கவிதைகள் பரிசுக்குரியன என்றும், அவருக்குப் பல பட்டங்களும் விருதுகளும் (விலைக்குக்) கொடுத்து, சுருங்கக் கூறி பெரிய விளக்கங்கள் தரும் ஐக்கூ என்றும், பிற வகை கூறி அது தமிழுக்குப் புதிதென்பர்.
தமிழில் உரையும், இசையும், பாடல்களும், கருவிகளும் இலக்கணப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அமைந்திருக்க, புதுமை இலக்கியம், மேல் நாட்டினர் வழிப்படி எழுதப்பட அவற்றிற்கே பரிசும் பாராட்டும். ஏனெனில், கற்பனைக்கே முதலிடம் என்றும், மொழியறிவு இரண்டாமிடம் என்றும் ஆகிவிட்ட நிலை.
தமிழ் மொழியில் பிழையின்றி எழுதும் திறனும், தமிழிலக்கணம் முழுதாய்க் கற்றாலே, முறையாய், அழகாய், கதைகள், கட்டுரைகள், காப்பியங்கள், பாக்கள், நாடகங்கள், இயற்றலாம். காலச் செலவும், பொருட் செலவும் ஆகும். அதைவிட எளிதானது, விரைவில் பணம் தரக்கூடியது, பிறமொழிக் கதைகளை, பாடல்களை, படியெடுத்தோ, மொழிபெயர்த்தோ, மொழியாக்கம் செய்தோ எழுதுவதுதான்.
சிறுகதைகளை தஞவிறக்கம் செய்து வாசிக்க ...
Google Play Books.
Tamil Ebooks
நிறைய ஈசாப்பு சிறுகதைகள் உண்டு
அம்புலிமாமா சிறுகதைகளையும்,படிக்கலாம்
Tamil
- சிறுகதையில் பயன்படுத்தப்படும் சில முக்கிய உத்திகள்.
- சிறுகதையில் வரும் கதாபாத்திரங்கள். அவற்றின் தன்மை, குணாதிசயம், நடத்தை ஆகியவற்றை விவரிப்பது. குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு சிறுகதைகள் எழுதப்படுகின்றன.
- கதை நடக்கும் இடம், காலம், சூழ்நிலை ஆகியவற்றை விவரிப்பது. சிறுகதையின் கருப்பொருளுக்கு ஏற்ற கதைக்களத்தை அமைப்பது முக்கியம்.
- கதை நகரும் விதம், சம்பவங்களின் வரிசை, திருப்பங்கள் ஆகியவற்றை விவரிப்பது. விறுவிறுப்பான கதைப்போக்கு வாசகர்களைக் கவர்ந்திழுக்கும்.
- கதாபாத்திரங்களுக்கு இடையேயான பேச்சுக்களை விவரிப்பது. உரையாடல்கள் மூலம் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், கதையின் போக்கையும் வெளிப்படுத்தலாம்.
- எழுத்தாளர் பயன்படுத்தும் மொழி நடை, பாணி, தொனி ஆகியவற்றை விவரிப்பது. எளிமையான, தெளிவான நடை வாசகர்களுக்கு கதையை எளிதில் புரிய உதவும்.
- கதை சொல்ல வரும் முக்கிய கருத்து அல்லது செய்தி. கருப்பொருள் சிறுகதையின் மையமாக அமையும்.
- கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நேரடியாக விவரிப்பது. கதாபாத்திரங்களின் மனதை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த உத்தி உதவும்.
- கடந்த கால நிகழ்வுகளைக் கதையின் போக்கில் இடையிடையே விவரிப்பது. கதாபாத்திரங்களின் பின்னணியையும், நிகழ்வுகளின் காரணத்தையும் புரிந்துகொள்ள இந்த உத்தி உதவும்.
- கருத்துக்களை மறைமுகமாக வெளிப்படுத்த குறியீடுகளையும் உருவகங்களையும் பயன்படுத்துவது. கதையின் ஆழத்தையும், அழகையும் அதிகரிக்க இந்த உத்திகள் உதவும்.
- இந்த உத்திகள் சிறுகதையை மேலும் சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்ற உதவுகின்றன.
சிறுகதை எழுதுதவது பற்றி சில குறிப்புகள்
நம் கற்பனை வளத்தையும், எழுதும் திறமையையும் முழுதாக வெளிக்கொணர சிறுகதை அல்லது புதினம் எழுதும் பழக்கம் பெரிதாக பயன்படும். அதிலும் இவ்விரு எழுத்துப் பிரிவுகளில் முக்கியமாக கதைகள் தான் கருவிகள். அக்கதையை நாம் எவ்விதத்தில் வாசகர்களுக்கு எடுத்துக் கூறுகின்றோம், என்பதைப் பொருத்து, அது சிறுகதையா அல்லது புதினமாக என்பதை நாம் அடையாளப் படுத்திக் கொள்ளலாம்.
எனினும், ஒருவர் தன் எழுத்துப் பயணத்தை தொடங்குவது கவிதைகள் அல்லது சிறுகதைகள் எழுதுவது மூலமாக தான். எழுத்திற்கு உயிர் கொடுப்பதை அங்கிருந்து தொடங்கி, புதினம் எழுதுவது மூலமாக அந்த உயிர்ப் பயணத்தை எவ்வளவு நேரம் தக்க வைத்துக் கொள்கிறார் என்பது தான் முதல் வேறுபாடு.
நீளம்:
பெயருக்கு ஏற்றாற் போல, சிறுகதை என்பது ஒரு கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுருக்கமாக கதையைச் சொல்லும் விதமாக தான் இருக்கும். இதன் நீளம் இவ்வளவு சொற்கள் தான் இருக்க வேண்டும் என்ற வரையறையில்லை, அது எழுத்தாளரின் விவரிப்பை பொருத்தது. சிறுகதையை வெளியிட, அது நூல் வடிவில் இருக்க வேண்டுமென்ற அவசியம் ஏற்படாது, எந்த எழுத்து மூலத்திலும் அதை பதிப்பிக்கலாம்.
ஆனால், புதினம் என்பது பல கிளைக்கதைகளை கோர்த்து முழுநீள கதை வடிவில் இருக்கும். இது பல ஆயிரம் சொற்களை தன்னுள் கொண்டிருக்கும், ஒரு புதினத்தை நூல் வடிலில் வெளியிட்டால் தான், அதை புதினம் என பலரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
எளிமையாக விளக்கினால், சிறுகதை என்பது குறும்படம் போல இருக்கும், புதினம் என்பது முழுநீள திரைப்படம் போல இருக்கும்.
கதை மாந்தர்கள்:
சிறுகதையில் பொதுவாக முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகம் தான் விளக்கமாக இருக்கும், சிறு கதாபாத்திரங்களின் பங்கு மின்னல் போல, வந்த சிறிது நேரத்திலேயே மறைந்து விடக் கூடும். கதையின் விசையும் ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் சம்பந்தமான பிரச்சனைகள், பயணங்கள், சூழ்நிலைகள் மட்டுமே வெளிப்படையாக புலப்படும்.
புதினத்தில் கதை மாந்தர்களின் அறிமுகமும், வருணனையும் சற்று மிகைப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். அது தவிர சிறு கதாபாத்திரங்களின் அறிமுகமும், அவர்களின் பங்கும் நியாயப்படுத்தும் படி இருக்கும். ஒவ்வொரு கதை மாந்தரும் தங்களுக்குரிய வசனங்களையும், கதையில் இருப்பதற்கான நோக்கத்தையும் நன்றாக பதித்துவிடுவர்.
விவரிப்பு:
சிறுகதையில் முக்கிய கதாபாத்திரங்களை சார்ந்த சூழ்நிலைகளே அதிகமாக வருவதால், அவர்களைப் பற்றிய விவரிப்பு தான் கதையின் ஓட்டத்தில் வலுவாக இருக்கும். சிறுகதையில் மிகைப்படுத்தல்கள் அவ்வபோது வந்தாலும், அவற்றின் தாக்கம் விரைவாக தீர்ந்து போகும். அடுத்தடுத்த நகர்தலை நோக்கி கதை பயணிப்பதால், அவற்றை தொடர்பு படுத்துவது எளிதாக இருக்கும்.
புதினத்தில் பல கதைமாந்தர்களின் பங்கு இருப்பதால், பல கிளைக்கதைகள் தனித்தனியாக பயணிக்கும், அவை எந்தப் புள்ளியில் இணைகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மால் தொடர்பு படுத்த முடியும். கதையின் நோக்கத்தைப் பற்றிய விவரிப்பு சுருக்கமாக இருந்தால், அது நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
சுவை:
சிறுகதையின் சுவை எழுத்தாளரின் தேர்ந்த சொல்லாடல் மற்றும் விவரிப்பில் தான் இருக்கிறது. சிறுகதையின் சுவை, மர நிழலில் சாய்வு நாற்காலியை போட்டமர்ந்து, ஆவி பறக்கும் தேநீரை குவளையில் ஊற்றி குடித்து முடிக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது போல இருக்கும். அந்தக் கதை கூறும் கருத்து நமக்குப் புரிந்திருக்கும், ஆனால் மனதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சிறிது நேரத்திலேயே, எந்த சூழலிலும் வாசகரால் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்கும்.
புதினத்தின் சுவை பலாச்சுளைகளை உண்பது போல, குறிப்பிட்ட கால இடைவேளையில் தித்திப்பு தருவதாக இருக்கும். பல சூழ்நிலைகளும், கிளைக்கதைகளும் தனித்தனியே பயணிப்பதால், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்தில் பயணிக்கலாம், அவை முடிவு பெற்றும் இருக்கலாம், முடிவு பெறாமலும் இருக்கலாம். எனினும், அதை வாசகருக்கு நீண்ட நேர பயணத்தை பரிசளிக்கும். தன் நாட்களில் பல வேளைகளில் வாசகர், புதினத்தை படிப்பதால், எழுத்தாளர் கதையில் தோய்வு ஏற்படாதவாறு, நன்கு கட்டமைத்த இணைப்புகளாக எழுதுவார். அதனால், கதையின் விவரிப்பும், இடைப் பயணங்களும், மீண்டும் நம் நாற்காலிக்கே நம்மை அழைத்து வந்துவிடும்.
ஆழம்:
சிறுகதையில் கதை மாந்தர் அல்லது சூழ்நிலையின் ஆழத்தை எவ்வளவு விவரிக்க வேண்டும் என்பதை எழுத்தாளர் தான் முடிவு செய்வார். அவற்றில் தான், எழுத்தாளரின் தனித்தன்மை வெளிப்படும். எனவே, கதை முழுவதும் ஆழமாக விவரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நிறைய ஆராய்ச்சிகளும், மெனக்கெடல்களும் தேவைப்படாது. ஒரு வரிக்கருத்தை வைத்து கூட, ஒரு சிறுகதையை எழுதிவிடலாம்.
புதினத்தில் வருணனை மற்றும் உரையாடல் மூலமாக தான், ஆழமான கருத்தை கூற முடியும். எனவே, ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தையும், அவரின் குணாதிசயத்தையும் பல்வேறு சூழலில் நாம் உணர்ந்துகொள்வோம். கருத்துகள் எளிமையாக இருந்தாலும் கதை பயணிக்கும் விதத்தில் அவை வலிமையானதாக தோன்றலாம்.
கதைக்கரு:
சிறுகதையின் கதைக்கரு எளிமையாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மேற்கூறிய படி, ஒரு வரிக்கதையை கூட, நாம் சிறுகதையாக எழுதிவிடலாம். அதனால், நாம் கூற வேண்டியவற்றை மட்டுமே குறிப்பிட்டு எழுதிவிடலாம். நீண்ட நெடிய பின்புலம், கருத்தை கூறுவதற்கு தேவைப்படாது.
புதினத்தின் கதைக்கரு ஆரம்பத்திலேயே புலப்படாத படி தான் எழுதப்படும். அதே போல, எழுதும் ஆர்வத்தில் எங்கு நாம் கதையின் முக்கிய கருத்தை கூறினோம் என்பதைக் கூட மறந்து போக நேரிடும். அதனால், புதினத்தை எழுதும் பொழுது, பகுதிகளாக பிரித்து எழுவதும், அந்தந்த பகுதிக்கான கதைச்சுருக்கத்தை தனியே எழுதி வைத்திருப்பது, எழுதியதை நினைவில் மீட்ட பயன்படும்.
மறைபொருள்:
சிறுகதையில் மறைபொருள் அதிக அளவில் புதைத்து வைக்க முடியாது, அவ்வாறு மறைத்து வைத்த கதைக்கும் பெரிய பலத்தை கொடுக்காது. கதையின் முடிவுக்கு ஏற்ப சிறு சிறு திருப்புமுனைகளை நாம் வைத்திருக்கலாம். ஆனால், அவற்றை நாம் விரைவில் வெளிப்படுத்தி விடுவோம்.
புதினத்தில் பல மறைபொருட்களை ஆங்காங்கே புதைத்து வைக்கலாம், அவற்றை அடுத்தடுத்த கதைக் காரணிகளுடன் தொடர்புபடுத்துவதே அவற்றின் பயன்களை உணர்த்த வழிவகுக்கும்.
சிறுகதை மற்றும் புதினம் எழுதுவதற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?
ஒரு சிறுகதையை எழுதுவதற்கும் ஒரு புதினத்தை எழுதுவதற்குமான (புதினம் = நாவல்) வேறுபாட்டை உணர்த்த அவற்றை 100 மீட்டர் விரைவோட்டத்துடனும் (sprint) 42 கிலோமீட்டர் மாரத்தான் (marathon) ஓட்டத்துடனும் ஒப்பிடலாம்!
சிறுகதையை எழுதுவதற்குத் தேவையான நேரமும் ஆற்றலும் மிகக் குறைவு. சராசரியாக அரைமணி முதல் 2 மணிநேரத்திற்குள் ஒரு சிறுகதையை எழுதி முடித்துவிடலாம். சிறுகதை என்பதன் அளவு சுமார் 1500 முதல் 5000 சொற்கள் வரைதான்!
புதினம் என்பது சராசரியாக 50 ஆயிரம் சொற்கள் கொண்டது (இது நமது தமிழ்ச் சூழலின் அளவு; ஆங்கிலச் சூழலில் இதுதான் குறைந்தளவே! 50ஆயிரம் சொற்கள் இருந்தால்தான் அதைப் புதினம் என்றே ஒத்துக்கொள்வர்! அதற்கும் கீழ் குறைந்தால் அது ‘நாவல்லா’ (novella) எனப்படும் - குறும்புதினம் / குறுநாவல்!)
எனவே தோராயமாக:
ஒரு புதினம் = 15 சிறுகதைகள்
(தமிழ்ப் புதினங்கள் சராசரியாக 25 முதல் 35 அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றன, அவ்வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை அளவு என்று கொண்டால் ஒரு புதினம் = 30 சிறுகதை என்றும் சொல்லலாம்!)
எனவே ஒரு புதினத்தை எழுத நிறைய ஆற்றலும், நேரமும், உழைப்பும் செலவாகிறது!
நான் அறிந்தவரை எழுத்தாளர்கள் சராசரியாக 3 முதல் 6 மாத காலத்தில் ஒரு புதினத்தை எழுதுகின்றனர். பலரும் ஆண்டுக்கொரு புதினம் என்ற வகையில் எழுதுகின்றனர்.
(தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை பெரும்பாலான எழுத்தாளர்கள் ஆர்வத்தினால் எழுதுபவர்களே, முழுநேர எழுத்தாளர்கள் அல்ல! எனவே, ஒரு நாளைக்கு எழுத்திற்காக அவர்களால் செலவிடப்படக்கூடிய நேரம் சராசரியாக ஒரு மணிநேரந்தான்! இந்தக் கணக்கில்தான் மேற்சொன்ன கால அவகாசம் அமைகிறது!)
மேலும், சிறுகதையைவிட ஒரு புதினத்தை எழுத அதிக ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது.
சிறுகதை என்று வரும்போது பலரும் தாம் அறிந்த சூழல்களையும் மனிதர்களையும் வைத்தேதான் கதையைப் பின்னுகின்றனர். இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, நல்ல கவனிப்பும் நினைவாற்றலும் இருந்தால் போதும்.
ஆனால், புதினம் அப்படியல்ல, அதில் நாம் தகவல்களை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் தரவேண்டும், அதன் நிகழ்வுகள் நீண்ட கால இடைவெளிக்குள் நிகழ்வதாகவும் இருக்கும், எனவே நமக்குத் தெரிந்த சூழலாக மனிதர்களாக இருந்தாலும் அவற்றைப் புதினத்தில் எழுதுவதற்கு முன் குறைந்தளவு ஆராய்ச்சியேனும் தேவைப்படும்!
மேலும், ஒன்றிரண்டு புதினங்களுக்குப் பின் நமக்குத் தெரிந்த சூழல் & மனிதர்களைப் பற்றிய கதைகள் நம்மிடம் தீர்ந்துபோயிருக்கும் (மீறி எழுதினால் அது நீர்த்துவிடும்! வாசகர்கள் அலுக்கிறது என்பார்கள்!) எனவே, நமது சுக வட்டத்தை (comfort zone) தாண்டி வெளிவர உந்தப்படுவோம்... ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான்!
(பலர் இந்த ஆராய்ச்சியிலேயே காலந்தள்ளிக்கொண்டு எழுத விரும்பிய கதையை எழுதாமலே இருப்பர்! ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்று வள்ளுவனார் மொழிந்ததைப் போல எவ்வளவு கற்றாலும் இன்னும் கொஞ்சம் கற்போம், இது போதாது என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்கும் அபாயம் உண்டு இதில்!)
ஒரு சிறுகதை என்பது பொதுவாக ஒரே ஒரு மையநிகழ்வைச் சுற்றி இருக்கும். அதற்கேற்ப அதில் ஒன்று அல்லது அதிகம் போனால் இரண்டு முதன்மைக் கதைமாந்தர் (protagonist) இருப்பர்.
ஆனால், புதினம் என்பதில் பல முதன்மைக் கதைமாந்தரும், அவர்களைச் சுற்றிய பல மையநிகழ்வுகளும் இருக்கலாம் (இருக்கும்!)
எனவே சிறுகதை எழுதுகையில் கவனம் சிதறாமல் அந்த மைய நிகழ்வைப் பற்றி, அதை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.
புதினத்தில் அங்கும் இங்கும் அலைய வேண்டும். ஆனாலும் கோவையை (continuity) இழந்துவிடக்கூடாது!
சிறுகதை என்பது வில்லிலிருந்து இலக்கை நோக்கிப் பாயும் ஓர் அம்பைப் போல விர்ர்ர்ர்ர் என்று செல்வது (செல்ல வேண்டும்!)
புதினம் என்பது ஒரு நீண்ட இரயில் பயணத்தைப் போல... மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு, தலையெண்ணி, இடங்கண்டு அமர்ந்து ஆசுவாசப்படுகையில் வண்டி மெல்லக் குலுங்கி நகரத் தொடங்கும்... சீராக வேகமெடுத்துப் பயணிக்கும்... சக பயணிரை அறிமுகஞ் செய்துகொண்டு, நலம் விசாரித்து, நட்பாகி, இருந்தாலும் மனிதகுலத்தின் மீதான ஒரு அடிப்படை சந்தேகத்தோடு பைகளுக்கும் பெட்டிகளுக்கும் சங்கிலி கோத்துப் பூட்டுப் பூட்டி இருக்கைப்படுக்கையில் படுத்துத் தூங்காமல் தூங்கி... டி.டி.ஆர்., சன்னல் வழிக் காப்பி, காய்ந்த சப்பாத்தி, சீட்டுக்கட்டு, இருக்கைச் சண்டை... என்று பலதையும் கடந்து போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து... எல்லாப் பெட்டியும் பையும் தலைகளும் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு... அப்பாடி!
சிறுகதை அளவில் சிறியதாக இருந்தாலும் அதனைக் கச்சிதமாக அமைப்பது ஒரு சவால்!
’இதோ, இவர்தான் ராமு...’ என்று அறிமுகப்படுத்தி, அவரின் இந்த சன்மம், போன சென்மம் எல்லாம் சொல்லி, அவர் கதாநாயகனல்ல, அவரின் அண்டைவீட்டுக்காரர் என்று நீட்டும் வசதியெல்லாம் சிறுகதைக்கு இல்லை!
‘வா... ஓடி வா... ஓடு... ஓடு...’ என்று வாசகனை முதல் சொல்லிலிருந்து தரதரவென்று பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி, மூச்சுவிடும் இடைவெளியில் அவளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லி, அடுத்த மூச்சில் ‘அவ்ளோதாம்ப்பா!’ என்று முடித்துவிட்டு, இரைத்துக்கொண்டிருக்கும் அவளைக் கண்டுகொள்ளாமல் ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று நாம் வந்துவிட வேண்டும்!
சிறுகதை ஒரு புகைப்படம், புதினம் ஒரு காணொளி.
கைப்பேசியை வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், காணொளி எடுக்கலாம்...
ஆனால், புலிட்சர் பரிசோ ஆஸ்கர் விருதோ வேண்டுமென்றால் இரண்டுக்குமே நிறைய உழைப்பு, திட்டமிடல், கற்றல், பயிற்சி ஆகியன தேவை!
