வெள்ளி, 10 அக்டோபர், 2025




சிறுகதை மற்றும் புதினம் எழுதுவதற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஒரு சிறுகதையை எழுதுவதற்கும் ஒரு புதினத்தை எழுதுவதற்குமான (புதினம் = நாவல்) வேறுபாட்டை உணர்த்த அவற்றை 100 மீட்டர் விரைவோட்டத்துடனும் (sprint) 42 கிலோமீட்டர் மாரத்தான் (marathon) ஓட்டத்துடனும் ஒப்பிடலாம்!

சிறுகதையை எழுதுவதற்குத் தேவையான நேரமும் ஆற்றலும் மிகக் குறைவு. சராசரியாக அரைமணி முதல் 2 மணிநேரத்திற்குள் ஒரு சிறுகதையை எழுதி முடித்துவிடலாம். சிறுகதை என்பதன் அளவு சுமார் 1500 முதல் 5000 சொற்கள் வரைதான்!

புதினம் என்பது சராசரியாக 50 ஆயிரம் சொற்கள் கொண்டது (இது நமது தமிழ்ச் சூழலின் அளவு; ஆங்கிலச் சூழலில் இதுதான் குறைந்தளவே! 50ஆயிரம் சொற்கள் இருந்தால்தான் அதைப் புதினம் என்றே ஒத்துக்கொள்வர்! அதற்கும் கீழ் குறைந்தால் அது ‘நாவல்லா’ (novella) எனப்படும் - குறும்புதினம் / குறுநாவல்!)

எனவே தோராயமாக:

ஒரு புதினம் = 15 சிறுகதைகள்

(தமிழ்ப் புதினங்கள் சராசரியாக 25 முதல் 35 அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றன, அவ்வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை அளவு என்று கொண்டால் ஒரு புதினம் = 30 சிறுகதை என்றும் சொல்லலாம்!)

எனவே ஒரு புதினத்தை எழுத நிறைய ஆற்றலும், நேரமும், உழைப்பும் செலவாகிறது!

நான் அறிந்தவரை எழுத்தாளர்கள் சராசரியாக 3 முதல் 6 மாத காலத்தில் ஒரு புதினத்தை எழுதுகின்றனர். பலரும் ஆண்டுக்கொரு புதினம் என்ற வகையில் எழுதுகின்றனர்.

(தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை பெரும்பாலான எழுத்தாளர்கள் ஆர்வத்தினால் எழுதுபவர்களே, முழுநேர எழுத்தாளர்கள் அல்ல! எனவே, ஒரு நாளைக்கு எழுத்திற்காக அவர்களால் செலவிடப்படக்கூடிய நேரம் சராசரியாக ஒரு மணிநேரந்தான்! இந்தக் கணக்கில்தான் மேற்சொன்ன கால அவகாசம் அமைகிறது!)

மேலும், சிறுகதையைவிட ஒரு புதினத்தை எழுத அதிக ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது.

சிறுகதை என்று வரும்போது பலரும் தாம் அறிந்த சூழல்களையும் மனிதர்களையும் வைத்தேதான் கதையைப் பின்னுகின்றனர். இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை, நல்ல கவனிப்பும் நினைவாற்றலும் இருந்தால் போதும்.

ஆனால், புதினம் அப்படியல்ல, அதில் நாம் தகவல்களை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் தரவேண்டும், அதன் நிகழ்வுகள் நீண்ட கால இடைவெளிக்குள் நிகழ்வதாகவும் இருக்கும், எனவே நமக்குத் தெரிந்த சூழலாக மனிதர்களாக இருந்தாலும் அவற்றைப் புதினத்தில் எழுதுவதற்கு முன் குறைந்தளவு ஆராய்ச்சியேனும் தேவைப்படும்!

மேலும், ஒன்றிரண்டு புதினங்களுக்குப் பின் நமக்குத் தெரிந்த சூழல் & மனிதர்களைப் பற்றிய கதைகள் நம்மிடம் தீர்ந்துபோயிருக்கும் (மீறி எழுதினால் அது நீர்த்துவிடும்! வாசகர்கள் அலுக்கிறது என்பார்கள்!) எனவே, நமது சுக வட்டத்தை (comfort zone) தாண்டி வெளிவர உந்தப்படுவோம்... ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான்!

(பலர் இந்த ஆராய்ச்சியிலேயே காலந்தள்ளிக்கொண்டு எழுத விரும்பிய கதையை எழுதாமலே இருப்பர்! ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்று வள்ளுவனார் மொழிந்ததைப் போல எவ்வளவு கற்றாலும் இன்னும் கொஞ்சம் கற்போம், இது போதாது என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்கும் அபாயம் உண்டு இதில்!)

ஒரு சிறுகதை என்பது பொதுவாக ஒரே ஒரு மையநிகழ்வைச் சுற்றி இருக்கும். அதற்கேற்ப அதில் ஒன்று அல்லது அதிகம் போனால் இரண்டு முதன்மைக் கதைமாந்தர் (protagonist) இருப்பர்.

ஆனால், புதினம் என்பதில் பல முதன்மைக் கதைமாந்தரும், அவர்களைச் சுற்றிய பல மையநிகழ்வுகளும் இருக்கலாம் (இருக்கும்!)

எனவே சிறுகதை எழுதுகையில் கவனம் சிதறாமல் அந்த மைய நிகழ்வைப் பற்றி, அதை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.

புதினத்தில் அங்கும் இங்கும் அலைய வேண்டும். ஆனாலும் கோவையை (continuity) இழந்துவிடக்கூடாது!

சிறுகதை என்பது வில்லிலிருந்து இலக்கை நோக்கிப் பாயும் ஓர் அம்பைப் போல விர்ர்ர்ர்ர் என்று செல்வது (செல்ல வேண்டும்!)


புதினம் என்பது ஒரு நீண்ட இரயில் பயணத்தைப் போல... மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு, தலையெண்ணி, இடங்கண்டு அமர்ந்து ஆசுவாசப்படுகையில் வண்டி மெல்லக் குலுங்கி நகரத் தொடங்கும்... சீராக வேகமெடுத்துப் பயணிக்கும்... சக பயணிரை அறிமுகஞ் செய்துகொண்டு, நலம் விசாரித்து, நட்பாகி, இருந்தாலும் மனிதகுலத்தின் மீதான ஒரு அடிப்படை சந்தேகத்தோடு பைகளுக்கும் பெட்டிகளுக்கும் சங்கிலி கோத்துப் பூட்டுப் பூட்டி இருக்கைப்படுக்கையில் படுத்துத் தூங்காமல் தூங்கி... டி.டி.ஆர்., சன்னல் வழிக் காப்பி, காய்ந்த சப்பாத்தி, சீட்டுக்கட்டு, இருக்கைச் சண்டை... என்று பலதையும் கடந்து போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து... எல்லாப் பெட்டியும் பையும் தலைகளும் சரியாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு... அப்பாடி!

சிறுகதை அளவில் சிறியதாக இருந்தாலும் அதனைக் கச்சிதமாக அமைப்பது ஒரு சவால்!

’இதோ, இவர்தான் ராமு...’ என்று அறிமுகப்படுத்தி, அவரின் இந்த சன்மம், போன சென்மம் எல்லாம் சொல்லி, அவர் கதாநாயகனல்ல, அவரின் அண்டைவீட்டுக்காரர் என்று நீட்டும் வசதியெல்லாம் சிறுகதைக்கு இல்லை!

‘வா... ஓடி வா... ஓடு... ஓடு...’ என்று வாசகனை முதல் சொல்லிலிருந்து தரதரவென்று பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி, மூச்சுவிடும் இடைவெளியில் அவளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லி, அடுத்த மூச்சில் ‘அவ்ளோதாம்ப்பா!’ என்று முடித்துவிட்டு, இரைத்துக்கொண்டிருக்கும் அவளைக் கண்டுகொள்ளாமல் ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று நாம் வந்துவிட வேண்டும்!

சிறுகதை ஒரு புகைப்படம், புதினம் ஒரு காணொளி.

கைப்பேசியை வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம், காணொளி எடுக்கலாம்...

ஆனால், புலிட்சர் பரிசோ ஆஸ்கர் விருதோ வேண்டுமென்றால் இரண்டுக்குமே நிறைய உழைப்பு, திட்டமிடல், கற்றல், பயிற்சி ஆகியன தேவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக