வெள்ளி, 10 அக்டோபர், 2025

 ஒரு தலைவனையோ, தலைவியையோ, இணையையோ, ஒருஉயிரினத்தையோ, ஒரு உயிரற்ற பொருளையோ, ஒரு இடத்தையோ, ஒரு காலத்தையோ (நொடி, நாள், ஆண்டு), சுற்றியமைத்துப் பெருமையை/சிறுமையைக் கூறி பிறவற்றிற்கு சிறப்பில்லாது தொட்டும் தொடாமலும் விளக்கி, ஒரு பக்கத்திலோ, சில பக்கங்களிலோ இடம் பெருமளவு எழுதப்பட்ட கதை, சிறுகதை.

இச்சிறுகதையில், பலபேர் சிறப்பும், பலவற்றின் சிறப்பும் எழுதிக் குழப்பி, எது சிறந்தது ஏன் சிறந்தது, எதற்காக எழுதப்பட்டது எனப் புரியா வண்ணம் எழுதாமல் இருந்தாலே போதுமானது.

ஆனால், பலர், இப்பொழுது விளக்கம் கூறுவார்கள். நானூறு ஆண்டிற்குமுன் மேல் நாட்டவர் ஒருவர் சிறுகதைக்கு விளக்கம் தந்து அன்றிலிருந்து சிறுகதை இலக்கியம் தோன்றி வளரத் தொடங்கியது என்றும், அவர் சொன்ன வரைமுறைகளே அடிப்படை என்றும். அவர்க்கு, ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே இயற்றப்பட்ட பெருங்காப்பியங்கள் கொண்டுள்ள சிறுகதைகள் கண்ணுக்குப் புலப்படாது. இரண்டடியில் இலக்கணத்தோடு எழுதிய ஆயிரத்து முந்நூறு திருக்குறள்கள் இரண்டாயிரமாண்டிற்கு முன்பே இயற்றப்பட்டிருந்தாலும், இலக்கணமின்றி, கொச்சைத் தமிழோடும், பிறமொழி கலந்தும், வரம்பின்றி எழுதப்பட்ட சிறு சொற்றொடர்கள், புதுமை இலக்கியம் என்றும் அவற்றால் தான் தமிழ் வாழ்கிறது என்றும், அவர் கவிதைகள் பரிசுக்குரியன என்றும், அவருக்குப் பல பட்டங்களும் விருதுகளும் (விலைக்குக்) கொடுத்து, சுருங்கக் கூறி பெரிய விளக்கங்கள் தரும் ஐக்கூ என்றும், பிற வகை கூறி அது தமிழுக்குப் புதிதென்பர்.

தமிழில் உரையும், இசையும், பாடல்களும், கருவிகளும் இலக்கணப்படியே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அமைந்திருக்க, புதுமை இலக்கியம், மேல் நாட்டினர் வழிப்படி எழுதப்பட அவற்றிற்கே பரிசும் பாராட்டும். ஏனெனில், கற்பனைக்கே முதலிடம் என்றும், மொழியறிவு இரண்டாமிடம் என்றும் ஆகிவிட்ட நிலை.

தமிழ் மொழியில் பிழையின்றி எழுதும் திறனும், தமிழிலக்கணம் முழுதாய்க் கற்றாலே, முறையாய், அழகாய், கதைகள், கட்டுரைகள், காப்பியங்கள், பாக்கள், நாடகங்கள், இயற்றலாம். காலச் செலவும், பொருட் செலவும் ஆகும். அதைவிட எளிதானது, விரைவில் பணம் தரக்கூடியது, பிறமொழிக் கதைகளை, பாடல்களை, படியெடுத்தோ, மொழிபெயர்த்தோ, மொழியாக்கம் செய்தோ எழுதுவதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக