சிறுகதை எழுதுதவது பற்றி சில குறிப்புகள்
நம் கற்பனை வளத்தையும், எழுதும் திறமையையும் முழுதாக வெளிக்கொணர சிறுகதை அல்லது புதினம் எழுதும் பழக்கம் பெரிதாக பயன்படும். அதிலும் இவ்விரு எழுத்துப் பிரிவுகளில் முக்கியமாக கதைகள் தான் கருவிகள். அக்கதையை நாம் எவ்விதத்தில் வாசகர்களுக்கு எடுத்துக் கூறுகின்றோம், என்பதைப் பொருத்து, அது சிறுகதையா அல்லது புதினமாக என்பதை நாம் அடையாளப் படுத்திக் கொள்ளலாம்.
எனினும், ஒருவர் தன் எழுத்துப் பயணத்தை தொடங்குவது கவிதைகள் அல்லது சிறுகதைகள் எழுதுவது மூலமாக தான். எழுத்திற்கு உயிர் கொடுப்பதை அங்கிருந்து தொடங்கி, புதினம் எழுதுவது மூலமாக அந்த உயிர்ப் பயணத்தை எவ்வளவு நேரம் தக்க வைத்துக் கொள்கிறார் என்பது தான் முதல் வேறுபாடு.
நீளம்:
பெயருக்கு ஏற்றாற் போல, சிறுகதை என்பது ஒரு கதையின் தொடக்கம், நகர்வு, முடிவு என்பதை அடிப்படையாகக் கொண்டு, சுருக்கமாக கதையைச் சொல்லும் விதமாக தான் இருக்கும். இதன் நீளம் இவ்வளவு சொற்கள் தான் இருக்க வேண்டும் என்ற வரையறையில்லை, அது எழுத்தாளரின் விவரிப்பை பொருத்தது. சிறுகதையை வெளியிட, அது நூல் வடிவில் இருக்க வேண்டுமென்ற அவசியம் ஏற்படாது, எந்த எழுத்து மூலத்திலும் அதை பதிப்பிக்கலாம்.
ஆனால், புதினம் என்பது பல கிளைக்கதைகளை கோர்த்து முழுநீள கதை வடிவில் இருக்கும். இது பல ஆயிரம் சொற்களை தன்னுள் கொண்டிருக்கும், ஒரு புதினத்தை நூல் வடிலில் வெளியிட்டால் தான், அதை புதினம் என பலரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
எளிமையாக விளக்கினால், சிறுகதை என்பது குறும்படம் போல இருக்கும், புதினம் என்பது முழுநீள திரைப்படம் போல இருக்கும்.
கதை மாந்தர்கள்:
சிறுகதையில் பொதுவாக முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகம் தான் விளக்கமாக இருக்கும், சிறு கதாபாத்திரங்களின் பங்கு மின்னல் போல, வந்த சிறிது நேரத்திலேயே மறைந்து விடக் கூடும். கதையின் விசையும் ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் சம்பந்தமான பிரச்சனைகள், பயணங்கள், சூழ்நிலைகள் மட்டுமே வெளிப்படையாக புலப்படும்.
புதினத்தில் கதை மாந்தர்களின் அறிமுகமும், வருணனையும் சற்று மிகைப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். அது தவிர சிறு கதாபாத்திரங்களின் அறிமுகமும், அவர்களின் பங்கும் நியாயப்படுத்தும் படி இருக்கும். ஒவ்வொரு கதை மாந்தரும் தங்களுக்குரிய வசனங்களையும், கதையில் இருப்பதற்கான நோக்கத்தையும் நன்றாக பதித்துவிடுவர்.
விவரிப்பு:
சிறுகதையில் முக்கிய கதாபாத்திரங்களை சார்ந்த சூழ்நிலைகளே அதிகமாக வருவதால், அவர்களைப் பற்றிய விவரிப்பு தான் கதையின் ஓட்டத்தில் வலுவாக இருக்கும். சிறுகதையில் மிகைப்படுத்தல்கள் அவ்வபோது வந்தாலும், அவற்றின் தாக்கம் விரைவாக தீர்ந்து போகும். அடுத்தடுத்த நகர்தலை நோக்கி கதை பயணிப்பதால், அவற்றை தொடர்பு படுத்துவது எளிதாக இருக்கும்.
புதினத்தில் பல கதைமாந்தர்களின் பங்கு இருப்பதால், பல கிளைக்கதைகள் தனித்தனியாக பயணிக்கும், அவை எந்தப் புள்ளியில் இணைகின்றன என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மால் தொடர்பு படுத்த முடியும். கதையின் நோக்கத்தைப் பற்றிய விவரிப்பு சுருக்கமாக இருந்தால், அது நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
சுவை:
சிறுகதையின் சுவை எழுத்தாளரின் தேர்ந்த சொல்லாடல் மற்றும் விவரிப்பில் தான் இருக்கிறது. சிறுகதையின் சுவை, மர நிழலில் சாய்வு நாற்காலியை போட்டமர்ந்து, ஆவி பறக்கும் தேநீரை குவளையில் ஊற்றி குடித்து முடிக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது போல இருக்கும். அந்தக் கதை கூறும் கருத்து நமக்குப் புரிந்திருக்கும், ஆனால் மனதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சிறிது நேரத்திலேயே, எந்த சூழலிலும் வாசகரால் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்கும்.
புதினத்தின் சுவை பலாச்சுளைகளை உண்பது போல, குறிப்பிட்ட கால இடைவேளையில் தித்திப்பு தருவதாக இருக்கும். பல சூழ்நிலைகளும், கிளைக்கதைகளும் தனித்தனியே பயணிப்பதால், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கோணத்தில் பயணிக்கலாம், அவை முடிவு பெற்றும் இருக்கலாம், முடிவு பெறாமலும் இருக்கலாம். எனினும், அதை வாசகருக்கு நீண்ட நேர பயணத்தை பரிசளிக்கும். தன் நாட்களில் பல வேளைகளில் வாசகர், புதினத்தை படிப்பதால், எழுத்தாளர் கதையில் தோய்வு ஏற்படாதவாறு, நன்கு கட்டமைத்த இணைப்புகளாக எழுதுவார். அதனால், கதையின் விவரிப்பும், இடைப் பயணங்களும், மீண்டும் நம் நாற்காலிக்கே நம்மை அழைத்து வந்துவிடும்.
ஆழம்:
சிறுகதையில் கதை மாந்தர் அல்லது சூழ்நிலையின் ஆழத்தை எவ்வளவு விவரிக்க வேண்டும் என்பதை எழுத்தாளர் தான் முடிவு செய்வார். அவற்றில் தான், எழுத்தாளரின் தனித்தன்மை வெளிப்படும். எனவே, கதை முழுவதும் ஆழமாக விவரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நிறைய ஆராய்ச்சிகளும், மெனக்கெடல்களும் தேவைப்படாது. ஒரு வரிக்கருத்தை வைத்து கூட, ஒரு சிறுகதையை எழுதிவிடலாம்.
புதினத்தில் வருணனை மற்றும் உரையாடல் மூலமாக தான், ஆழமான கருத்தை கூற முடியும். எனவே, ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தையும், அவரின் குணாதிசயத்தையும் பல்வேறு சூழலில் நாம் உணர்ந்துகொள்வோம். கருத்துகள் எளிமையாக இருந்தாலும் கதை பயணிக்கும் விதத்தில் அவை வலிமையானதாக தோன்றலாம்.
கதைக்கரு:
சிறுகதையின் கதைக்கரு எளிமையாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மேற்கூறிய படி, ஒரு வரிக்கதையை கூட, நாம் சிறுகதையாக எழுதிவிடலாம். அதனால், நாம் கூற வேண்டியவற்றை மட்டுமே குறிப்பிட்டு எழுதிவிடலாம். நீண்ட நெடிய பின்புலம், கருத்தை கூறுவதற்கு தேவைப்படாது.
புதினத்தின் கதைக்கரு ஆரம்பத்திலேயே புலப்படாத படி தான் எழுதப்படும். அதே போல, எழுதும் ஆர்வத்தில் எங்கு நாம் கதையின் முக்கிய கருத்தை கூறினோம் என்பதைக் கூட மறந்து போக நேரிடும். அதனால், புதினத்தை எழுதும் பொழுது, பகுதிகளாக பிரித்து எழுவதும், அந்தந்த பகுதிக்கான கதைச்சுருக்கத்தை தனியே எழுதி வைத்திருப்பது, எழுதியதை நினைவில் மீட்ட பயன்படும்.
மறைபொருள்:
சிறுகதையில் மறைபொருள் அதிக அளவில் புதைத்து வைக்க முடியாது, அவ்வாறு மறைத்து வைத்த கதைக்கும் பெரிய பலத்தை கொடுக்காது. கதையின் முடிவுக்கு ஏற்ப சிறு சிறு திருப்புமுனைகளை நாம் வைத்திருக்கலாம். ஆனால், அவற்றை நாம் விரைவில் வெளிப்படுத்தி விடுவோம்.
புதினத்தில் பல மறைபொருட்களை ஆங்காங்கே புதைத்து வைக்கலாம், அவற்றை அடுத்தடுத்த கதைக் காரணிகளுடன் தொடர்புபடுத்துவதே அவற்றின் பயன்களை உணர்த்த வழிவகுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக