ஞாயிறு, 8 மார்ச், 2015

தன்னொழுக்கத்தின் சக்கரவர்த்தி திருமிகு. சிவக்குமார் அவர்கள் கதை-01



மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.தனிமனித ஒழுக்கத்தின் சக்கரவர்த்தி அவர்களின் கடந்துவந்த பாதை இனியொரு நாள் கிடைக்காமல் போனால்?அதாங்க அவரது பக்கத்திலிருந்து திருடி இங்கு பதிவிட்டிருக்கிறேன்.
Actor Sivakumar
28 மே 2014 ·
1987-ஆம் ஆண்டு 'ஜூனியர் விகடனில்' தொடராக வெளிவந்து, 2005 -ஆம் ஆண்டு முழு நூலாக
வெளிவந்த 'இது ராஜபாட்டை அல்ல '- என்ற எனது நூல்
இதுவரை 12 பதிப்புக்களைக்
கண்டிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில சுவையான
வரிகளை இம்முக நூலில் உங்களோடு
பகிர்ந்து கொள்வதைப்
பெருமையாக நினைக்கிறேன்
- சிவகுமார்

உருப்பட்டே ஆக வேண்டும் என்ற வெறியில் 15 வயதில் ஊரை விட்டுக் கிளம்பின என்னை - 'மது, மாது, சூது' தொடமாட்டேன் என்று, காந்தி செய்து கொடுத்த சத்தியத்தைச் செய்யச் சொன்னவர் என் நண்பர் - எங்கள் ஊரின் முதல் ஓராசிரியராக வந்த குமாரசாமி அவர்கள்.


பள்ளிப் படிப்பு முடிந்தது. பருவ உணர்வு தலை தூக்கியது. அது காதலோ காமமோ அல்ல. அதற்கு முந்தைய நிலை. பெண்களைப் பார்த்தாலே ஒரு குறுகுறுப்பு. சிலிர்ப்பு. கிறுக்கு பிடித்த மாதிரி, என் வயதொத்த ஒரு பெண் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.
அவள் அழகியில்லை, படித்தவள் இல்லை ஏழை. தினம் கூலி வேலைக்கு சென்று வயிறு வளர்க்கும் சாதாரனப் பெண். கவர்ச்சியான தோற்றமில்லை.
ஆனால் அவள் குரல் காந்தம் போல் என்னைக் கவர்ந்தது.
பல முறை ஆசைப்பட்டு, துணிந்து ஒரு முறை சந்தித்தேன். என்ன வேண்டும் என்றாள். சொல்லத் தெரியவில்லை. ஏன் என்னிடம் வந்தாய்? பதில் சொல்ல முடியவில்லை.
சொல்லாமல் புரிந்து கொண்டாள்.
"இதோ பார், வயசில எல்லோருக்கும் வர்ற ஆசை இது. ஈ எறும்புக்கும் வரும். நீ நல்லாபடிச்சி பெரிய ஆளா ஆனேன்னா 60 வயசுல கூட 20 வயசு
அழகான பொண்ணு கெடைக்கும். போய் உருப்படற வழியப்பாரு"

சிலையாக நின்றேன். அவள் சொடுக்கிய சாட்டை வலி உடம்பெல்லாம் பரவியது. நெடுநேரம் அந்தச் சுடுகாட்டுப் பக்கம் இரவில் நின்றேன்.
மனதில் ஒரு வைராக்கியம்!! புலன்களிலே ஒன்று உபாதை செய்தால் அதை
இழுத்துவைத்து அறுத்து விடுவது என்ற வெறியோடு சென்னை வந்தேன்
இன்று 88 கதாநாயகிகளோடு கட்டி அணைத்துக்காதல் வசனம் பேசி நடித்தும் சலனங்கள், சபலங்கள் பட்டும் கிழே விழுந்து மூக்குடைபடாமல் காப்பாற்றியது, அந்த போதிமரம் தந்த ஞானம்.
ஆனால், நான் சென்னை வந்த 4 ஆண்டுகளில் வயதான ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, வறுமையில் வாழ்ந்து, மூன்றாவுது பிரசவத்தில் அந்த போதிமரம் உலகை விட்டு மறைந்துவிட்டதுதான் சோகம்.
-சிவகுமார்

"ஐயா! அம்மா!! கோயிலுக்குள்ள மாட்டிக்கிட்டோம். தயவுசெஞ்சு வந்து கதவைத் திறந்து எங்களைக் காப்பாத்துங்க"
காலை 9 மணிக்கு பாழடைந்த பிள்ளையார் கோயிலுக்கு சாமி கும்பிடப் போய், காற்றில் கதவு இறுக்கமாய் மூடிக்கொள்ள, உள் பக்கமிருந்து இழுத்துத் திறக்க வளையமோ, பிடிப்போ இல்லாமல் மாலை 5 மணி வரை கத்திக் கத்தி, தொண்டை வறண்டுவிட்டது.
பத்து வயதுச் சிறுவர்கள் இருவரின் கூச்சல், 15 அடி உயரமுள்ள கோயிலின் ஓடு வேய்ந்த கூரையைத் தாண்டி யார் காதிலும் விழவில்லை.
இருட்ட ஆரம்பித்தது. விளக்கு வைக்க யாரும் வரமாட்டார்கள். சோறு தண்ணியில்லாமல் சாகப்போகிறோம் என்பது உறுதியாகி விட்டது.
உடைந்த குரலில் கடைசியாக 'அம்மா காப்பாத்துங்க' என்று கத்திவிட்டு மயக்கமானோம். கூலிவேலைக்குப் போய் ஊர் திரும்பிக்கொண்டிருந்த மக்கள் காதில் விழ, ஒருவழியாக கதவு திறக்கப்பட்டது.
அது மறுபிறவி!
பத்து வயதில் மனதில் ஏற்பட்ட பயம், 50 வயது தாண்டியும் விமானத்தில் ஏறி கதவுகளைச் சாத்தியதும் வந்து விடும்.
'ஓ! கதவுகளைச் சாத்தியாகிவிட்டது. நீ வெளியே போகமுடியாது. கெஞ்சினாலும் திறக்கமாட்டார்கள் '- ஆழ்மனம் மிரட்டும். உடனே மெடிடேட் செய்து, பயப்படாதே ஒன்றுமில்லை! நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்று 1000 தடவை சொல்லி அமைதிப்படுத்த ஆரம்பித்து விடுவேன்.
இன்று அந்த' போபியா'விலிருந்து மீண்டு விட்டேன்.
 பெண்கள் பலவீனமானவர்கள் என்று
யார் சொன்னது?
'மாப்ளே !பொடக்காளில நானே
வளத்த செடியில புடலங்காய் காச்சிருக்கு. மெட்ராஸ் எடுத்திட்டு
போறீங்களா ?'
நூறு வயது கடந்த பாட்டி- என் சகோதரி மாமியார் பேச்சியம்மாள்
கேட்டார் .
60 வயது தாண்டினாலே ஆட்டம்
கண்டுவிடுகிறது வாழ்க்கை. மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் பார்க்காத - கைத்தடி, கண்ணாடி தேவைப்படாத பாட்டி வளர்த்த செடியிலிருந்து பறித்த புடலங்காயை விமானத்தில் சென்னை எடுத்து வந்தேன்.
'ஒரு சந்தேகம் கேக்கட்டுங்களா' என்றார். 'ஊருக்குள்ளெ அப்பப்ப சேதி வருது. கிணத்தில குதிச்சு செத்துப் போயிட்டாளாம். விட்டத்தில் கயிறு மாட்டி ஒருத்தி தூக்கில தொங்கிட்டாளாம்'-னு சொல்றாங்க. நானும் ஒரு வேளை அப்படி ஏதாச்சும் பண்ணி செத்திடுவனா ?'- ' சத்தியமா அப்படியெல்லாம் உங்களுக்குச் சாவு வராது. குடிக்கத் தண்ணி இல்லாம, குடத்தை எடுத்துகிட்டு சனங்க அலைஞ்சப்ப ,2 மைல் தூரத்தில ஏரோட்ரோம் காட்டுக்குள்ளே
இருக்கற உங்க கிணத்தில,
ஆயில் எஞ்ஜின் வச்சுத் தண்ணி எடுத்து 30 வருஷம் 250 குடும்பத்துக்கு நல்ல தண்ணி குடுத்த மகராசி நீங்க. அப்படியெல்லாம் கேவலமான சாவு உங்களுக்கு வராது'- என்றேன்.
கணவனை இழந்த கவலை மறந்து, அவர் மறைந்த பிறகும்
40 ஆண்டுகள் வாழ்ந்து 2006-ல்
சூர்யா - ஜோதிகா தம்பதியை வாழ்த்தி விட்டு 109 வயதில் விடைபெற்றார் அந்த
மூதாட்டி .
தியாகம், பொறுமை, சகிப்புத்தன்மை
வலி தாங்கும் வல்லமை,இவற்றின்
பிரதிபிம்பம் பெண்கள் என்பதை ஆண்கள் என்றும் மறந்து விடக்கூடாது.



1957 - பிப்ரவரிமாதம் கடைசி வாரம். பிற்பகல் 3 மணிக்கு பள்ளியில் பெல் அடித்தார்கள்.11-ம் வகுப்பு 3 பிரிவு மாணவர்களும் வெளியேறி, நடுவே புல்வெளியில் பெஞ்ச் நாற்காலிகளை வரிசையாய்ப் போட்டார்கள். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர், 6-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பு வரை பாடம் கற்பித்த அத்தனை ஆசிரியர்களுடன் 'குரூப் போட்டோ' எடுக்கும் நிகழ்வு அது.
என்னையும்சேர்த்து என் வகுப்பிலிருந்து 4பேர், வலைப்பை, தூக்குப் போசியை எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினோம் !.
கிளாஸ் லீடர் பொன்னுசாமி ஓடி வந்தான்.'எங்கப்பா போறீங்க ! இன்னிக்குத்தானே போட்டோ எடுக்கப்
போறோம்'-என்றான்.
'அது காசு கொடுத்தவங்களுக்கு.
எங்களுக்கு இல்லை'-என்றோம். அதிர்ந்து போனவன்,'பரவாயில்லே, போட்டோலயாவது நின்னுட்டுப் போங்க. நல்லாப் படிக்கற நாலு பேரும் போயிட்டீங்கன்னா போட்டோவே வேஸ்ட்'- என்றான்.

"ஒரு வாரம் முன்பு மாதக்கட்டணம்
ரூ.5.25 அம்மாவிடம் வாங்கிப் பள்ளியில்
கட்டினேன்.அடுத்த நாள் பொதுத் தேர்வுக்கு என்று 11.50 பைசா கேட்ட
போதே கோபப் பட்டார் அம்மா.
மறுநாள் , ஸ்வீட் காரத்தோடு, குரூப் போட்டோ எடுக்க 5 ரூ கேட்ட போது
'சோளத்தட்டு அறுவடைக்குக் கூலி குடுக்கோணும்.இப்ப அந்த போட்டோ
இல்லன்னா குடி முழுகிடாது'- என்றார்.
அவர் வாதத்தில் நியாயம் இருந்தது"
' காசு கொடுக்காமல் போட்டோல நிக்க தன்மானம் எடங்கொடுக்கல'-
என்று கூறிவிட்டு கிளம்பி விட்டோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
40 ஆண்டுகளில் 175 படங்களில் ஹீரோவாக, மொத்தம் 192 படங்களில்
நடித்திருக்கிறேன். குறைந்த பட்சம் 4 கோடி பிரேம்களில் என் முகம் பதிவாகி இருக்கிறது. ஆனால், ஒரு கோடி கொடுத்தாலும் அந்த குரூப் போட்டோ கிடைக்குமா?
காலம் கருணை காட்டியது !!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2007 -ல்
விஜய் டி.வி. நிகழ்ச்சிக்காக அதே
பள்ளிக்குச் செல்ல நேர்ந்த போது
உயிரோடு இருந்த 5,6 ஆசிரியர்கள்
10,15 மாணவ மாணவியர்களுக்கு (தாத்தா, பாட்டிகளுக்கு) தகவல் கொடுத்து அதே புல் தரையில், அதே ஓடு வேய்ந்த பின்னணியில் புகைப் படம் எடுத்துக் கொண்டேன்.

"ஏங்கண்ணு நேத்து நீ வரல்ல. மூணாம்பெறை பாத்துட்டு உன் மொகத்தில முழிச்சா மாசம்பூரா மனசுக்கு சந்தோசமா இருக்கும்னு தேடினேன். எங்கடா போயிட்ட ?"
"......"
"சரி,இரு. பொள்ளாச்சியில இருந்து கார்த்தால புது ஓவல்டின் வந்திருக்கு. பால்கறந்து, காய்ச்சி,கலக்கித்தர்றேன். தந்தார். குடித்தேன். தேவாம்ருதம் இதுதானோ!?!.. 10 வயதில் அப்படி உணர்ந்தேன்.வீடு வந்து அம்மச்சியிடம் சண்டை போட்டேன்.
" மிளகாய்க்கார பெரியம்மா துளிர் வெள்ளெல பொடவ கட்டறாங்க. ராணி மாதிரி கம்பீரமா இருக்காங்க! அஸ்கா சக்கர போட்டு ஓவல்டின் தர்றாங்க!
இங்க எப்ப பாத்தாலும் கருப்பட்டிக் காப்பி, கொத்தமல்லிக் காப்பிதானா ?-
வாதிட்டேன்.
பெரியம்மா கதை பெருஞ்சோகக்
கதைப்பா.
7 வயசில பெரியம்மாவுக்கு கண்ணாலம் பண்ணி வச்சிட்டாங்க. மாப்பிள்ளை 9 வயசு முத்துச்சாமி -அத்தை பையன். நீளமா முடி வளத்து குடுமி போட்டிருப்பான்
ஒரு ஐப்பசி மாச அடை மழையில ஊரையே அடிச்சிட்டுப்போறமாதிரி வெள்ளம். 40அடி ஆழத்தில இந்த கிணத்துத் தண்ணி மள மளன்னு மேல 10-க்கு வந்திடுச்சு.
ஊர்ப்பசங்க விலாங்கு மீன் மாதிரி 'சளேர் சளேர்'னு குதிச்சு நீந்தி விளையாடினாங்க. கிணத்து மேட்ல முத்துச்சாமி .
என்னடா சும்மா வேடிக்கை பாத்திட்டு, குதிடான்னு தள்ளி உட்டுட்டானுக. முத்துச்சாமிக்கு நீச்சல் தெரியாது .
2 தடவை மேல வந்து 'காப்பாத்துங்க' -ன்னான். பசங்க சிரிச்சாங்க. போனவன் திரும்பல.
பெரிசுக வந்து மூலைக்கு மூல பாதாள சங்கிலிய விட்டு தேடினாங்க.ஒரு மணி நேரம் தேடினதுக்கப்புறம் சங்கிலில குடுமி சிக்க வெளிய தூக்கிப் போட்டாங்க
7 வயசுப்பொண்ணுக்கு கழுத்திலிருந்த மஞ்சக்கயிற அறுத்துட்டு, வெள்ளச்சீலய ஒடம்பில சுத்திவுட்டுட்டாங்க.
புருஷங்கறவன் யாரு, அவன் செத்தா நம்ம நெலமை என்னன்னு தெரியாம சிரிச்சுக்கிட்டே இருந்திச்சு அது.
6 வருஷம் கழிச்சு வயசுக்கு வந்திச்சு.
தாய்மைன்னா என்ன, மகப்பேறுன்னா என்னன்னு தெரியாமலே 90 வயசு வரைக்கும் வாழ்ந்திச்சு.
அறியாத வயசில அக்கா இப்படி ஆயிட்டாளேன்னு பொள்ளாச்சில இருந்து மாமா அரிசி, பருப்பு, ஓவல்டின், செலவுக்குப் பணம் மாசாமாசம் அனுப்பிக்கிட்டே இருக்காரு-"ன்னாங்க அம்மச்சி.

கேட்டதும் தெகச்சுப் போயிட்டேன்.
எனக்கு ஒரே ஆறுதல் 1974 - ஜூலைல, அவங்கள என் கல்யாண வரவேற்புக்கு, மெட்ராஸ் கூட்டியாந்து, ஒரு வாரம் தங்க வச்சு ஊரெல்லாம் சுத்திக்காட்டி அனுப்பினேன்.
பெரியம்மாவுக்கு அளவில்லாத சந்தோஷம் !!
" கோரிக்கையத்துக் கிடக்குதண்ணே
இங்கு வேரில் பழுத்த பலா - மிகக்
கொடியதென்றெண்ணிடப் பட்டதண்ணே - குளிர் வடிக்கின்ற வட்ட நிலா "-
பாரதி தாசன்


1946-ல் கலங்கல் பள்ளியில் 1-ம் வகுப்பிலிருந்து 4-ம் வகுப்பு வரைக்கும்
பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்
கல்யாணசாமி நாயுடு. காந்தியவாதி, கதர் சட்டை, கட்டுக்குடுமி, சைவ உணவுக்காரர்.
'கால் அரைக்கால் காசுக்கு, நால் அரைக்கால் கத்திரிக்கா. ஒரு காசுக்கு எத்தனை !? வைடா சிலேட்டை!!'- ன்னு கத்துவாரு. அதுக்குள்ளெ விடை எழுதி
தரையில சிலேட்டை வச்சிறணும். இல்லை, கொண்ட பிரம்பு மண்டைய பதம் பாத்துரும்!
"வாத்தியார்ரு! நாலு எழுத்த கத்துக்குடு.
கண்ணு, மூக்கைத் தவிர,பாக்கியெல்லா
உறிச்சு எடுத்திடு" - பெற்றோர் வேண்டு கோள்.... அந்த குருவே எங்க தெய்வம் !!
சூலூர் உயர்நிலைப்பள்ளி முடித்து, சென்னையில் 6ஆண்டு ஓவியக்கலை, பின்பு 15ஆண்டு சினிமா நடிப்பு, - இந்தக்
கட்டத்தில் அவரைச் சந்தித்தேன் .
' தண்டபாணி ! (இதுதான் என் சொந்தப் பெயர்) மழை மாரி ஏமாத்திடுச்சு. கெணறெல்லாம் வறண்டு போச்சு. மாடு
கண்ணுகளுக்கு தீவனத்துக்கு கூட ஒண்ணும் வெளயமாட்டேங்குது.
நீ என்ன பண்றே, அந்த பூமிக்குள்ள ஒரு எட்டு நடந்திட்டு வா. உன் பாதம் பட்டாலாச்சும் அதுக்கு ஒரு கதிமோட்சம் கெடைக்குதான்னு பாப்போம்'..
"ஐயா, என்ன சொல்றீங்க ?"
"சும்மா காட்டக்குள்ளெ ஒரு நடை போயிட்டு வான்னேன்" புரிந்துவிட்டது எனக்கு....
"ஐயா, அந்த பூமி அகலிகையுமில்லெ,
நான் ராமனுமில்லே. என் பாதம் பட்டு
விமோசனம் அடைய "--
"டேய், ராமாயணம் நாந்தானே உனக்குச் சொல்லிக்கொடுத்தேன். நம்பிக்கைதாம்பா வாழ்க்கை. நீ சும்மா ஒரு எட்டு போயிட்டு வா"
கண்களில் நீர் முட்ட அவர் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு புறப்பட்டேன்.....
***** ******** ******** ******
மூன்றாண்டு கழித்து மீண்டும் அவரைச்
சந்திக்க நேர்ந்தது.
"தண்டபாணி, உன் பாதம் பட்ட யோகம் போன வருஷம் பிளாட்போட்டு பாதி நெலத்தை வித்திட்டேன். மகனுக்கு 2 லட்சம், மகளுக்கு 2 லட்சம் குடுத்திட்டு நான் பேங்கில 2 லட்சம் போட்டு வச்சிருக்கேன்"...
இது, காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் என்றாலும்,...காலம் அவருக்கு கருணை காட்டியிருக்கு என்பதே உண்மை.
ஆனாலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது, அன்று எப்படி கண்டிப்புக் காட்டினார்கள் -பின்னாளில் எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதற்கு இது உதாரணம்...!


இரவு நரி ஊளையிட்டது. ஊருக்குள் யாராவது சாவார்கள் என்றார் அம்மச்சி.
பொள்ளாச்சியில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து, கல்லூரி சேருமுன் பிறந்த கிராமத்தில் இரண்டு நாள்கள் தங்கிப்போக வந்தான் அண்ணன் ஷண்முகம். என்னைவிட பத்து வயது மூத்தவன்.
சாமி வீட்டில் பெருச்சாளி செத்து விழுந்தது.வீட்டைக் காலிசெய்து பக்கத்து வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம்.
காலையில் கலகலப்பாக விளையாடிய அண்ணன்-எம்.ஜி.ஆர் கலரில் மின்னியவன் - பகலில் காய்ச்சல் அடிக்க படுக்கையில் வீழ்ந்தான்.
தொடை இடுக்கில் இருபக்கமும் கட்டி.. வேப்பிலைக்கொளுந்து அரைத்து
பத்துப்போட்டாள்அம்மா! பயனில்லை நடுநிசி கடந்த நேரம்.

'அம்மா, போயிட்டு வர்றேன்'-
குரல் கொடுத்தவன் போய்விட்டான் .
நாலு வயதுப் பிள்ளைக்கு மரணத் பற்றி என்ன தெரியும்? எல்லோரும்அழுவதைப் பார்த்து நானும் அழுதேன்.
மறுநாள் ஊரில் காக்கை குருவி இல்லை. நாங்களும் பக்கத்து ஊர் குடி பெயர்ந்தோம்.
சுடுகாட்டுப் பகுதியைக் கடக்கையில் 6 அடி நீள மண்மேடு, அம்மா அதை அழுகையோடு பார்த்துக்கொண்டே வர 'என்னம்மா இது' - என்று கேட்டேன்.
'உன் அண்ணன் தூங்குகிறான்' -என்றாள்..''அண்ணன் வரமாட்டானா ?'' 'மாட்டான்'-என்றாள்.
மின்னலைப்போல் நேற்று மின்னி இன்று மறைந்து விட்ட அண்ணனை
நினைத்து முதன்முதலாய் அழுதேன்.
ஊருக்குள் நுழைந்தாலே உயிருக்கு ஆபத்து என்று மக்கள் சிதறி ஓடிய போது போனால் உயிர் போகட்டும் என்று , ஒருஆத்மா, தானே சுடுகாடு சென்று,குழி வெட்டி, விறைத்துப் போன உடம்பை, தனி ஆளாகத் தூக்கி வந்து அடக்கம் செய்த விபரம் பின்னாளில் அறிந்தேன்.
அவர்தான் இந்த மாமனிதர்
சுப்பையா கவுண்டர். என் அத்தை மகன்!!
முதல் புகைப்படத்தில் நிற்பவர் அண்ணன் சன்முகம்.

"ஏம்மா, சினிமா பாத்திருக்கியா? "
"ம்..கல்யாணமான புதிசுல உங்கப்பன் ஒரே ஒரு ஊமைப்படத்துக்கு கூட்டீட்டு போனாரு".
"அதுக்கப்புறம்?"
"எவன் கூட்டிட்டுப் போனான்"
"ஓஹோ... சரி, கற்பகம்னு ஒரு படம். கோபால கிருஷ்ணன் எடுத்தது. சூலூர் ஷண்முகதேவில ஓடுது. போலாமா ?"
"போனாப் போச்சு"- ரெடியாகி விட்டார்.
1964-மே 27-ந்தேதி -பிற்பகல் 2 மணி. சூலூர் ஷண்முகதேவி தியேட்டர் வாசல்.
"ஏம்ப்பா நின்னுட்டே ! போய் டிக்கட் வாங்கிட்டு வா".
"எங்கெ போறது ,தியேட்டரு பூட்டீருக்கு"
சினிமாவுக்குப் போகும் பரபரப்பில் காலையில், ரேடியோ, நேரு இறந்த செய்தி சொன்னது மறந்து விட்டது. மீண்டும் சைக்கிளில் டபுள்ஸ். சூலூரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள எங்க ஊருக்கு திரும்ப பயணம்.

மறுநாள் டிக்கட் வாங்கி தியேட்டருக்குள் உட்கார வைத்துவிட்டு ஊர்திரும்புகையில், மூச்சு விட முடியாமல், அடைமழையில் சைக்கிள் மிதித்தேன். அடுத்த நாள் காலையில், சூலூரில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த அம்மாவிடம் 'படம் எப்படி' என்றேன்.
"நா அப்பவே சொன்னெ, எனக்கெல்லா சினிமா ஆகாதுன்னு நீ கேட்டியா!? "
"என்ன ஆச்சு" -இடைவேளைக்கப்பறம் கே.ஆர். விசயாளை மாடு முட்டுனதுக்கப்பறம் போன கரண்ட்டு இதா வருது அதா வருதுன்னு சொல்லி, விடிஞ்சு போச்சு. வாசல்ல சாணி தெளிச்சுட்டாங்க..." என்றார்.
நொந்து போய் விட்டேன்.
இருந்தும், மூணாவது நாள், சண்டை போட்டு தகறாராறுபண்ணி, முழுப்படத்தையும் பாக்க வச்சேன்.
"நல்லாத்தானே இருக்கு சினிமா. அப்பறம் ஏன் சனங்க, சினிமா பாத்தா கெட்டுப்போயிடுவாங்கன்னு சொல்றாங்க"- என்றார் வெகுளியாக.
இப்போது புரிந்து கொண்டீர்களா, சினிமாவில் நான் நடித்த போது அம்மா எதிர்ப்பு சொல்லாத காரணத்தை !!!!

சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன்.
சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொடுத்தால் அதிகம் என்று தெரிந்து அதிர்ந்து போனேன்.
கொதிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டுக்குள், முண்டா பனியன்,அழுக்கு லுங்கியுமாக 'கோடா' மீது ஏறி நின்று தோள்பட்டை வலிக்கும் அளவுக்கு 10 நெ. பிரஷ்ஷை வைத்து, அவர்கள் ஓவியம் தீட்டும் அவலத்தைப் பார்த்த போது - 40 அடி ஆழக் கிணற்றில் குழி அடித்து வேட்டு வைப்பவருக்கும், இந்த ஓவியரின் வலிக்கும் பேதமில்லை என்று தெரிந்தது.
மிகப்பெரிய ஓவியம் வரைபவருக்கு, மிக குறைந்த சம்பளம் என்றறிந்த போது என் கற்பனைக் கோட்டை சிதறியது.
இங்கிருந்து பெரிய ஓவியனாக வர முடியாது - எங்கள் செல்வது என்று தவித்து, தடுமாறிய போது தன்னம்பிக்கை ஊட்டியவர் ஓவியர் சுந்தரம். ஓவியக்கல்லூரியில் சேர வழி வகை செய்தவர் ஓவியர் நடராஜன்.

16 வயதில் மோகன் ஆர்ட்ஸில்
வரைந்த Ten Commandments
ஓவியம்.
வழி காட்டிய ஓவியர்கள்
சுந்தர மூர்த்தி - நடராஜன்

1960 அக்டோபர் தசரா விடுமுறையில், சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்கு 56 கி.மீ. சைக்கிளில் சென்று, தெருவில் படுத்து, கைப்பம்பில் குளித்து, 2 நாள் ஓவியம்தீட்டி முடித்து, அங்கிருந்து 30 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் சென்று, கோயில் பின்னால் கழுகு பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு
கோயில்களை ஸ்கெச் செய்த பின் அங்கிருந்து செங்கல்பட்டு 28 கி.மீ., அங்கிருந்து சென்னை 46 கி.மீ., வழியில் லேலண்ட் கம்பெனி ஆயுத பூஜை. பொரி கடலை வாங்கி கொரித்துக் கொண்டே சென்னை வந்தோம்.
மோகன் ஆர்ட்ஸில் ஓராண்டு,
ஓவியக் கல்லூரி காலத்தில் 6 ஆண்டு என இந்தியாமுழுக்கச் சுற்றி ஓவியம் வரைய ஆன செலவு 7596 ரூ.
இன்று 5 நட்சத்திர ஓட்டலில் ஒரு
குடும்பம் ஒரு வேளை உணவுக்கு
ஆகும் செலவு 10,000/- ரூ.

என்ன வித்தியாசமான அனுபவம் !!
குறைந்த தேவைகளும் உயர்ந்த லட்சியமுமாய் வாழ்ந்த நாட்கள் இனி கிடைக்குமா ?
அப்பொழுது வரைந்த ஓவியம் இங்கே!



1961-அக்டோபர் -தசரா விடுமுறையில் பாண்டிச்சேரி சென்றேன்.
என் ஓவியக்கலை கல்லூரி நண்பர் ஆர்.டி.தயாளன்- 107,கொசக் கடைத் தெருவில் குடியிருந்தார். அவர் வீட்டிலிருந்து, ஒரு பக்கம் பெடல் கட்டை இல்லாத சைக்கிளை எடுத்துக்கொண்டு அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு சென்று லைட் ஹவுஸ் ஒட்டிய காம்பவுண்ட் அருகே அமர்ந்து, தெற்கு நோக்கி ஓடிய ட்யூப்ளே தெருவையும், அதன் நடுவே கம்பீரமாய் நிற்கும் ட்யூப்ளே சிலையையும் -அதைத் தாங்கி நிற்கும்அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்க மேடையையும் -உதய சூரியனின் தங்கக் கரங்கள் படும்போது 2மணி, 30 நிமிடங்களில் வரைந்து முடித்தேன்.

 ஏவிஎம் நிறுவனத்தில் என் முதல் படம்"காக்கும் கரங்கள்" 19-6-1965 -ல் வெளிவந்தது......
ஏழு ஆண்டுகள் பிரஷ்ஷும் பெயிண்ட்டுமாய் இந்தியா முழுக்க சுத்தியவனை திடீரென்று காமிரா முன்னால் நிற்க வைத்தால்?!...
'ராதா , உன் முகத்தை கண்ணாடில நீ பாத்ததில்லையா ?
நீ அழகானவள்னு உங்கண்ணனும் அம்மாவும் உங்கிட்ட ஒரு தடவை கூட
சொன்னதே இல்லையா? '-இந்த 2 வரி வசனத்தை ஒழுங்காகச் சொல்ல முடியாமல்
திணறினேன். காரணம் இந்த 2 வரி வசனத்துக்கு 3 நாள் ஒத்திகை. ஓவர் ஒத்திகை உளறுவதற்குக் காரணமாயிடுச்சு.
போலியோவினால் பாதிக்கப்பட்ட பெண்ணை நான் காதலிக்கக் காரணம் என் தாய்க்கும் அந்த குறைபாடு உண்டு என்று, அவளுக்கு விளக்கும் , 5 நிமிட நீளம் வரும் நீண்ட வசனக் காட்சியை , அதிகாலை 4.30 மணிக்கு கடற்கரை சென்று கடல்
ஓசையை மிஞ்சும் அளவு கத்தி மனப்பாடம் செய்து நடித்தேன்.
கடைசியில் அந்த உருப்படியான ஒரு காட்சியும் வெட்டப்பட்டுவட்டது. தாரை தாரையாக கண்களில் நீர் !
படத்தில் நான் வரும் 3 காட்சிகளையும் சேர்த்தால் 6 நிமிடம் கூடத் தேறாது.
புகழ்பெற்ற நிறுவனத்தின் மூலம் அறிமுகமானேன் என்ற ஆறுதல் மட்டுமே மிஞ்சியது. சூடுகண்ட பூனையாகி எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டேன்.

திருமிகு.சிவக்குமார் அவர்களுக்கு நன்றிங்க.. என அன்பன்  பரமேஸ் டிரைவர் -  சத்தியமங்கலம். ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக