சனி, 26 ஜூலை, 2014

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
ஓரெழுத்து ஒரு மொழி


தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு.

உயிர் எழுத்துகள்:

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ

'க' வரிசை:

கா,கூ,கை,கோ

'ச' வரிசை:

சா,சீ,சே,சோ

'த' வரிசை:

தா,தீ,தூ,தே,தை

'ந' வரிசை:

நா,நீ,நே,நை,நோ

'ப' வரிசை:

பா,பூ,பே,பை,போ

'ம' வரிசை:

மா,மீ,மூ,மே,,மை,மோ

'வ' வரிசை:

வா,வீ,வை,வௌ

'ய' வரிசை:

யா

பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை ..

மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.

ஓரெழுத்து ஒருமொழி

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           நன்னூல் சூத்திரப்படி குறிப்பிடப்பட்டுள்ள 42 ஓரெழுத்துக்களின் பொருளையும் அது தவிர முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் அதற்கான முதன்மையான பொருளையும், பொருளைச் சார்ந்த வார்த்தைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓரெழுத்து ஒருமொழி

அ

எட்டு,அழகு,சிவன்

ஆ

பசு,ஆன்மா,எருது

இ

'அரை'யின் தமிழ் வடிவம்

ஈ

ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி

உ

சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)

ஊ

ஊண்,இறைச்சி,உணவு

எ

வினா எழுத்து,ஏழு(தமிழ்)

ஏ

அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு

ஐ

தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்

ஓ

மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை

ஔ

உலகம்,ஆனந்தம்

க

கடவுள்,பிரம்மன்,அக்னி,ஒன்று

கா

சோலை,காத்தல்,காவல்

கி

இறைச்சல் ஒலி

கு

பூமி,உலகம்,குற்றம்

கூ

பூமி,உலகம்,கூகை

கை

உறுப்பு,ஒழுக்கம்,சிறகு,ஒப்பனை

கோ

அரசன்,தலைவன்,பசு,இறைவன்

கௌ

கொள்ளு,தீங்கு,பற்று

சா

சாதல்,இறத்தல்,சோர்தல்

சி/சீ

இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு

சு

விரட்டுதல்,சுகம்,மங்களம்

சே

எருது,சிகப்பு,மரம்

சை

கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி

தா

தருதல்,கொடுத்தல்,கேடு

தீ

நெருப்பு,சினம்,தீமை,நரகம்

து

உண்,அசைதல்,உணவு

தூ

வெண்மை,தூய்மை,பகைமை

தே

தெய்வம்,கடவுள்,அருள்

தை

மாதம்,தைத்தல்,அலங்காரம்

நா

நாக்கு,சொ,நடு,அயலர்

நீ

முன்னிலை

நே

அன்பு,அருள்,நேயம்

நை

நைதல்,வருந்துதல்

நொ/நோ

துன்பம்,நோய்

ப

நூறு

பா

பாட்டு,அழகு,பாதுகாப்பு

பி

அழகு,பிறவினை விகுதி

பீ

பெருமரம்,மலம்

பூ

மலர்,பூமி,பிறப்பு

பே

நுரை,மேகம்,அச்சம்

பை

பசுமை,கைப்பை,இளமை(பையன்)

போ

போதல்,செல்லுதல்

ம

சந்திரன்,சிவன்

மா

பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

மீ

மேலே,உச்சி,ஆகாயம்

மூ

மூப்பு,முதுமை,மூன்று

மே

அன்பு,மேன்மை,மாதம்,மேலே

மை

அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு

மோ

மோத்தல்,முகர்தல்

ய

தமிழ் எழுத்து என்பதன் வடிவம்

யா

யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்

வ

கால் பாகம்

வா

வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்

வி

அறிவு,நிச்சயம்,ஆகாயம்

வீ

மலர்,விரும்புதல்,பறவை

வை

கூர்மை,வைத்தல்,வைக்கோல்

வௌ

கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு

குறிப்பு:

ஓரெழுத்து ஒரு மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு சொல்லுக்கு இணையான சொற்களை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

(எ.கா)

மா-பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்

இதில் 'பெரிய' என்பதற்கு இணையான 'உயர்ந்த' என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்.

பெயர்ச்சொல்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                    பெயர்ச்சொல் என்றால்என்ன?

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச் சொல் ஆகும்.அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்..

இடுகுறி பெயர்:

ஒருபொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல்இட்டுவழங்கியபெயரே இடுகுறிப்பெயர்..

எ.கா: மரம்,மலை,மண்

காரணப் பெயர்:

ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப் பெயர்.

எ.கா:முக்காலி,நாற்காலி,கருப்பன்

பெயர்ச்சொல்லின்வகைகள்:

பெயர்ச்சொல்ஆறுவகைப்படும்.
பொருட்பெயர்

(எ.கா)பணம்,மனிதன்,விலங்கு,மரம்
இடப்பெயர்

பள்ளி,குளம்,வீதி,நாடு,ஊர்
காலப்பெயர்

மணி,நாள்,வைகறை,இளவேனில்,சித்திரை
சினைப்பெயர்

கை,கால்,இலை,காம்பு,காய்,பூ
பண்புப்பெயர்

வட்டம்,நிறம்,அளவு,சுவை,செம்மை
தொழிற்பெயர்

எழுதுதல்,ஓடுதல்,பாடுதல்,தைத்தல்

ஒரு பொருளைக் குறித்து வந்தால்அது பொருட்பெயர்.

ஒரு இடத்தைக் குறித்து வந்தால் அது இடப்பெயர்.

ஒரு காலத்தைக் குறித்து வந்தால் அது காலப் பெயர்.

ஒரு உறுப்பை குறித்துவந்தால்அது சினைப்பெயர்.

ஒரு பொருளின் பண்பை குறித்து வந்தால் அது பண்புப் பெயர்.

(தொல்லை,மாண்பு,மாட்சி,நன்றி,நன்று,நலம்,நன்னர்போன்றவார்த்தைகளும் பண்பு பெயர்கள்தான் குழப்பம் வேண்டாம்)

ஒருதொழிலைக்குறித்துவந்தால்அது தொழிற்பெயர்.
(ஆட்டம்,கொலை,அழுகை,பார்வை,கடவுள்,கோட்பாடு,சாக்காடுபோன்றவையும்.தொழிற்பெர்கள்தான்குழம்பி விடவேண்டாம்.மனதில்நிறுத்திக்கொள்ளுங்கள்)

தொழிற்பெயர்இரண்டுவகைப்படும்

அ. முதற்நிலைத்தொழிற்பெயர்
ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

அ. முதல்நிலைதொழிற்பெயர்

பெரும்பாலும்வேர்ச்சொல்லாகவேவரும்முதலெழுத்துகுறிலாகஇருக்கும்.

(எ.கா) சுடு, கெடு

ஆ. முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயர்

முதற்நிலைத்தொழிற்பெயரின்முதலெழுத்துநீண்டுவருமாயின்அது
முதற்நிலைத்திரிந்ததொழிற்பெயராகும்.

(எ.கா)
சுடுதல் - தொழிற்பெயர்
சுடு - முதற்நிலைத்தொழிற்பெயர்
சூடு - முதற்நிலைதிரிந்ததொழிற்பெயர்
சுடுதல் - சுடு - சூடு.

வேர்ச்சொல்லைக்கண்டறிவது

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             வேர்ச்சொல்லைக்கண்டறிவதுஎப்படி?

பகுபதஉறுப்பிலக்கணம்படித்திருப்போம்.இன்றும் படித்தவற்றை மறக்காமல் இருந்தால் இன்னும் இது எளிமையாக இருக்கும். அப்படி மறந்திருந்தாலும் கவலைஇல்லை. வேர்ச்சொல்லை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

வேர்ச்சொல்:

ஒருசொல்லின்மூலச்சொல்எதுவோஅதுவே. அச்சொல்லின்வேர்ச்சொல்ஆகும்.

(எ.கா) பார்

'பார்' என்பது ஒரு வேர்ச்சொல். இச்சொல்லை வைத்துக் கொண்டு பார்த்தான், பார்த்த, பார்த்து, பார்க்கிற போன்ற வார்த்தைகளை அமைக்கலாம்.

அப்படியானால் 'வந்தான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிய முடிகிறதா?

'வந்தான்' என்பதன்வேர்ச்சொல் 'வா'.

அவ்வளவுதான். வார்த்தையைப் பார்த்தவுடனே எளிதாக வேர்ச்சொல்லைக் கண்டறியலாம்.

இதைப்போலவே ஏதோவொரு வார்த்தையைக் கொடுத்து அதன் வேர்ச்சொல்லைக் கண்டுபிடி என கேள்விகள் கேட்கப்படும்.

மாதிரிவினாக்கள்:

1)'சென்றான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)சென்றஆ)சென்றுஇ) செல்ஈ)சென்றனன்

2)பேசினான்' என்பதன் வேர்ச்சொல்லை அறிக:

அ)பேசிஆ)பேசுஇ)பேசியஈ)பேசுதல்

மேற்கண்ட வினாக்களில் விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதா. இல்லையெனில் எளிதாக கண்டுபிடிக்க வழி இருக்கிறது..

முதலில் கொடுத்த சொல்லை நன்றாக வாசியுங்கள். பிறகு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளையும் வாசியுங்கள். அதில் எந்த சொல் கட்டளை பிறப்பிக்கும் படி இருக்கிறதோ அந்தச் சொல்லே வேர்ச்சொல் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பாருங்கள். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் கட்டளைச் சொல் எது வென்றுதெரிகிறதா?

ஆமாம். முதல் வினாவிற்கு விடை 'செல்'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

இரண்டாவது வினாவிற்கு விடை 'பேசு'.அச்சொல் தான் கட்டளைச் சொல்.

வேர்ச்சொல் என்றாலே கட்டளை பிறப்பிக்கும்படிதான் இருக்கும். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

பெயரெச்சம், வினையெச்சம்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கம் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         பெயரெச்சம், வினையெச்சம் - இலக்கண குறிப்பறிதல்


1. பெயரெச்சம்:

ஒரு வினைச் சொல்லானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

(எ.கா) படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள்

மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால். நீங்கள் முதலில் உள்ள படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டு தான் பெயரெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம்தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

பெயரெச்சத்தின் வகைகள்:

அ.தெரிநிலைப்பெயரெச்சம் ஆ.குறிப்புப்பெயரெச்சம்
இ.எதிர்மறைப்பெயரெச்சம் ஈ.ஈறுகெட்டஎதிர்மறைப்பெயரெச்சம்
என 4 வகைப்படும்.

அ.தெரிநிலைப்பெயரெச்சம்
காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப்பெயரெச்சமாகும். இது மூன்றுகாலங்களிலும் வரும்.

(எ.கா) படித்த மாணவன்
படிக்கின்ற மாணவன்
படிக்கும் மாணவன்

ஆ.குறிப்புப்பெயரெச்சம்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்புபெயரெச்சம் எனப்படுகிறது.

(எ.கா.)நல்ல பையன்
கரிய உருவம்

இ.எதிர்மறைப்பெயரெச்சம்

(எ.கா.) பாடாத பைங்கிளி
கேட்காத செவி
பேசாத பெண்

சொற்களை வாசித்தாலே எதிர்மறை என எளிதாக அறியலாம்.

ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

(எ.கா.) பாடா பைங்கிளி
பொய்யா மொழி
வாடா மலர்
பேசா வாய்
சிந்தா மணி
மாறா அன்பு
செல்லா காசு
தேரா மன்னா

2. வினையெச்சம்:

தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினயைக் கொண்டு முடியும் சொல் வினைச்சொல் ஆகும்.

(எ.கா) படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான்.

மேற்கணடவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவைவினையெச்சம் என எண்ண வேண்டும்.

முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்.

விளக்கம்:

படித்து - இதன் கடைசி எழுத்து 'து'

'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..
பாடி, ஆடி, ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி- இதன் கடைசி எழுத்து 'டி'

'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.


இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ' என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

(அ) தெரிநிலை வினையெச்சம்
(ஆ) குறிப்பு வினையெச்சம்

என வினையெச்சம் 2 வகைப்படும்.

அ.தெரிநிலை வினையெச்சம்

தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா) வந்து போனான்
நின்று வந்தான்

ஆ.குறிப்புவினையெச்சம்

குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல் பண்பின் அடிப்படையில் வினைச் சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா)மெல்ல நடந்தான்
கோபமாக பேசினான்

3. முற்றெச்சம்
ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல். வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்றுபெயர். இச்சொல் தனித்து நோக்கும் போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.
(எ.கா)
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
படித்தனர் தேர்ந்தனர்
எழுதினன் முடித்தனன்.

வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
       வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...


* வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

வினைத்தொகையில் இருசொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

ஊறிய காய் - இறந்தகாலம்
ஊறுகின்ற காய் - நிகழ்காலம்
ஊறும் காய் - எதிர்காலம்

இப்பொழுது மூன்றுகாலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப் போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா)
1)படர்கொடி

படர்ந்த கொடி- இறந்தகாலம்
படர்கின்ற கொடி- நிகழ்காலம்
படரும் கொடி- எதிர்காலம்

2)சுடுசோறு

சுட்டசோறு - இறந்தகாலம்
சுடுகின்றசோறு - நிகழ்காலம்
சுடும்சோறு - எதிர்காலம்

3)குடிநீர்

குடித்தநீர்- இறந்தகாலம்
குடிக்கின்றநீர்- நிகழ்காலம்
குடிக்கும்நீர்- எதிர்காலம்

கொடுக்கப் பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப்பாருங்கள். முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று. ஒரு விடைமட்டும் தான் முக்காலத்தையும் உணர்த்தும். மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம். தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம்.

* பண்புத்தொகைஎன்றால்என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

கொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.

(ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)

'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.

'மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை, நீலம், வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை, தீமை, கொடுமை, பொறாமை

சுவையைக் குறிக்கும் சொற்கள்:

காரம், புளிப்பு, கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம், வட்டம், நாற்கரம்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)

சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ
பொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு
அரவணை, செருக்களம் போன்றவை.

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும்பெயர்

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டுபிடிப்பது ?

1 வினைமுற்று என்றால் என்ன?

முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்து விட்டான் என்றுபொருள்.

இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினைமுற்று.

'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்

'படித்து' என்பது வினையெச்சம்
'படித்தான்' எனபது வினைமுற்று.

பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது. 'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது. எனவே அது வினைமுற்று.

கீழ்க் காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை 6 வகைப் படுத்திக் காணலாம்.

அ. தெரிநிலை வினைமுற்று

ஒருவினை முற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்.
செய்பவன் - ஓவியம்
கருவி - வர்ணம்
நிலம் - சுவர்
செயல் - தீட்டுதல்
பொருள் - சித்திரம்
காலம் - இறந்தகாலம்.

(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
செய்பவள் - எழிலரசி
கருவி - நார், கை
நிலம் - இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
பொருள் - மாலை
காலம் - இறந்தகாலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல்வினைமுற்று

முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும். இது எதிர்காலத்தைக் காட்டிவரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

1.ஏவல் ஒருமை வினைமுற்று

(எ.கா) நீநட, நீசெய், நீபோ, நீபடி

2. ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர்உண்குவீர் , நீர்வாரீர், நீர்செய்குதும்

ஈ. வியங்கோள் வினைமுற்று.
க - இய - இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக் கொடல் ஆகிய பொருள்களில் வரும். இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
ஒழிக, கெடுக, வைதல், செல்க
வருக, ஈக, விதித்தல், தருக
வேண்டல், சிரிக்க, பார்க்க

உ. உடன்பாட்டு வினைமுற்று

(எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

ஊ. எதிர்மறை வினைமுற்று

(எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

2. வினையாலணையும்பெயர்:

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
கண்டவர்
சென்றனன்

எப்படி எளிதில் கண்டறிவது?:

கொடுக்கப் பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர், அவன், அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.

(எ.கா)

'காட்சியவர்' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும்பெயர் ஈ) பண்புப்பெயர்

காட்சியவர் என்றசொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.