புதன், 6 ஆகஸ்ட், 2014

சதுரங்க விளையாட்டு தொடர்ச்சி-03

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                       


         சதுரங்கம் விளையாட்டு தொடர்ச்சி இங்கே காண்போம்.
                      சதுரங்க போட்டிகளின் நவீன கால வரலாறு:
           நவீனகாலத்தின் முதல் சர்வதேச சதுரங்கப்போட்டி கி.பி 1851 இல் லண்டனில் நடை பெற்றது , அதில் ஜெர்மனியை சேர்ந்த  Adolf Anderssen என்பவர் வெற்றி  பெற்றார், அவரே அப்பொழுது அதிகாரப்பூர்வமற்ற உலக சாம்பியன் எனக்கருதப்பட்டார். காரணம் என்னவென்றால்  அப்பொழுது உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொள்ளும் வகையில் சதுரங்கப் போட்டிகள் நடை பெறவில்லை ஆதலால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.

# கி.பி 1866 இல் லண்டனில் முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்றது, அதில் செக்கோஸ்லோவாக்கியாவை சேர்ந்த  Steinitz  என்பவர் வென்று அதிகாரப்பூர்வமாக  உலகின் முதல் சேம்பியனாக ஆனார்.

# போரிஸ் ஸ்பாஸ்கி ,கி.பி 1945 முதல்  கிபி 1972 இல் அமெரிக்கரான பாபி பிஷரிடம் தோற்கும் வரையில் ரஷ்யா  மட்டுமே அசைக்க முடியாத உலக சாம்பியனாக இருந்தது. ரஷ்யர்களின் ஆதிக்கத்தினை முறியடித்த பாபி பிஷர், ஒரு இளம் சாதனையாளர் ஆவார், 15 வயதுக்குள்ளாகவே கிராண்ட் மாஸ்டர் ஆனவர், ஆனால்  கொஞ்சம் "மனம் போன போக்கில்" நடந்துக்கொள்வார், பல நேரங்களில் மிக தாமதமாக போட்டிக்கு வருவார், சமயங்களில் வராமலே போய் விடுவார், ஆனால் வந்து உட்கார்ந்துவிட்டால் எதிராட்டக்காரரை தோற்கடித்துவிடுவார் , உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் தகுதிச் சுற்றில் இருமுறை கிளீன் ஸ்வீப் ஆக அனைத்து ஆட்டங்களையும் வென்றவர், அமெரிக்க தேசிய போட்டியில் 13 சுற்றுகளிலும் தோல்வியே அடையாமல் முழுமையாக  13 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தவர், உலக சாம்பியனாக  22 வயதுக்குள் ஆனவர், அவரின் சாதனையை சமீபத்தில் சென்னையில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தான்   முறியடிக்க முடிந்தது, நார்வேயின், மேக்னஸ் கால்ர்சன்  மிக இளம் உலக சாம்பியன் ஆனார்.

பாபி பிஷரின் நிலையற்ற போக்கு , பிடிவாதம் மற்றும் அதிக அப்பியரன்ஸ் ஃபீஸ் கேட்கும் பழக்கத்தினால் அவரது விளையாட்டு வாழ்க்கை ஒரு நிச்சயமற்றதாகவே விளங்கியது,பல முறை சதுரங்கத்தினை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு பின்னர் மீண்டும் ஆட வந்துள்ளார்.

           (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
               சதுரங்கத்தில் உலகளாவிய போட்டிகளில் பரிசுப்பணம் தவிர்த்து போட்டிகளில் கலந்து கொள்ள " appearance fees" என   ஒரு தொகையினை போட்டியாளர்களுக்கு கொடுப்பதுண்டு, அதற்கு பெரும் தொகை கேட்பதை வழக்கமாக பிஷர் வைத்திருந்தார், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளவே பெரும் தொகை கேட்டவர். அப்படி வாங்கிக்கொண்டுதான் அவரும் போட்டியில் கலந்து  கொண்டார், அப்பொழுதெல்லாம் புகழ் பெற்ற ஆட்டக்காரர் எனில் அப்படி ஒரு மரியாதை இப்பொழுதும் உண்டு ,ஆனால் தற்போது உலக சாம்பியன் ஷிப் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக அப்பியரன்ஸ் FEE  இல்லை ஆனால் நல்ல பரிசுத் தொகை உண்டு. மேலும் பிஷரின் அதிரடிகளுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அவர் அன்று என்ன செய்தார் எப்படி ஆடினார் என தெரிந்து  கொள்ளவே பலரும் சதுரங்க ஆட்டத்தினை கவனிக்க ஆரம்பித்தார்கள். எனவே சர்வதேச சதுரங்க சம்மேளனமும் ,ஃபிஷருக்கு ஏற்றார்  போல பல முறை வளைந்து  கொடுத்துள்ளது.

                 (கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
 சதுரங்க போட்டியில் ஒரு ஆட்டக்காரர் வரவில்லை எனில் மற்ற ஆட்டக்காரர்  போட்டியாளரின் செஸ் கிளாக்கை ஓட விட்டு விட்டு காத்திருப்பார், இதன் மூலம் போட்டியாளர்  தாமதமாக வந்தால் அவரது காய் நகர்த்தல்களுக்கான நேரமும் குறைந்து விடும், மேலும் , அப்பொழுதெல்லாம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் எதிர் தரப்பு வர வேண்டும் என விதி இருந்தது , அதற்குள் வந்து விட்டால் ஆடலாம், ஒரு மணி நேரம் கழித்து வந்தால் தோற்று விட்டதாக அறிவிக்கப்படும்       (இப்பொழுது உடனே வர வேண்டும்),பாபி பிஷர்  பெரும்பாலும் கடைசி நேரத்தில் வந்து தான் ஆட ஆரம்பிப்பார், ஆனால் எதிரில் ஆடுபவரை விட வேகமாக ஆடி சம நிலையோ வெற்றியோ பெற்றுவிடுவார், இது போன்ற அபரிமிதமான விளையாட்டுத்திறன் இருந்ததால் தான் இன்றளவும் ஆல் டைம் பெஸ்ட் பிளேயர் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்.

               பல முறை இறுதி காலக்கெடு  முடிந்த பின்னர் வந்து ஆட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க சொல்லி இருக்கிறார், அதற்கும் சதுரங்க சம்மேளனம் தலையாட்டிய கதையெல்லாம் உண்டு.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)          
               பாபி ஃபிஷருக்காக ஆட்ட நேரத்தினை மாற்றியமைத்ததால், கடுப்பான Oscar Panno, என்ற கிராண்ட் மாஸ்டர் ஒரே ஒரு  நகர்த்தல் கூட செய்யாமல் தான் தோற்றுவிட்டதாக எழுதிக்கொடுத்துவிட்டு போய்விட்ட சம்பவமும் நடந்துள்ளது.

           ஆனால் இவரது கடைசி காலத்தில்  நிம்மதியற்று நாடற்றவராக அலைய வேண்டியதாகிவிட்டது , 1992 உள்நாட்டு யுத்தம் காரணமாக யுகோஸ்லாவியா வை  நாடாக கருத முடியாது என அறிவித்து ,அமெரிக்கா தடை செய்திருந்த காலக்கட்டம், அப்பொழுது , போரிஸ் ஸ்பாஸ்கியுடன் மீண்டும், ஒரு போட்டியினை  ஸ்பான்சர் விருப்பப்படி ?! ,யுகோஸ்லாவியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள், யுகொஸ்லாவியா செல்லக்கூடாது என அமெரிக்க அரசு எச்சரித்தது ,ஆனால் முன்னரே ஒப்பந்தம் போட்டு பெருந்தொகையினை அப்பியரன்ஸ் FEE ஆக வாங்கிவிட்ட நிலைமை, நீண்ட காலம் கழித்து பெரிய போட்டி என்பதாலும், யுகோஸ்லாவியா சென்று ஸ்பாஸ்கியுடன் போட்டியில் கலந்து கொண்டார்.

              இதனால் கடுப்பான அமெரிக்க அரசு 1992 இல் வருமான வரிக்கணக்கெல்லாம் கேட்டு குடைந்ததும் அல்லாமல் , பாபி ஃபிஷரின் அமெரிக்க குடியுரிமையையும் ரத்து செய்துவிட்டது, அதன்பின்னர் எந்த நாட்டுக்குடியுரிமையும் இல்லாமல் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்தார் ,ஐஸ்லாந்தில் சிறிது காலம் அகதியாக தங்கியிருந்தார். கி.பி  2002 இல் எந்த நாட்டின் முறையான பாஸ்போர்ட்டும் இல்லாமல் பயணம் செய்தார் என ஜப்பானில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதங்கள் சிறையிலும் கழித்தார் , புகழ்ப்பெற்ற உலக சேம்பியன் என தெரிந்தாலும்   தண்டனைக்காலம் முடிந்த பின்னர் எந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது என தெரியாத நிலை நிலவியது,பின்னர் ஐஸ்லாந்து நாடு பிஷருக்கு குடியுரிமை கொடுத்து அழைத்துக்கொண்டது, 2008 இல் இறக்கும் வரையில் ஐஸ்லாந்தில் ரெஜவிக் நகரத்தில் வசித்து வந்தார்.

                பாபி பிஷர் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை தகர்த்தது சிறிது காலமே நீடித்தது, அதன் பின்னர் ,அனடொலி கார்ப்போவ், கேரி காஸ்ப்பரோ என்ற இரட்டையர்கள் வந்து மீண்டும் ரஷ்யாவின் ஆதிக்கத்தினை தக்க வைத்துவிட்டார்கள்.


(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
            ரஷ்யர்கள் 19 ஆம் நூற்றாண்டில் தான் சதுரங்கம் பழக ஆரம்பித்து 20 ஆம் நூற்றாண்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ ஆரம்பித்த போதும் ,சதுரங்கத்தின் தாயகமான இந்தியாவில் பெரிதான சலனம் எதுவுமில்லாமலே கழிந்தது, ஆனால் 1972 இல் ,பாபி பிஷர் உலக சேம்பியன் ஆன அதே ஆண்டில் ஒரு எழுச்சி ஏற்பட்டது, சென்னையை சேர்ந்த மானுவல் ஆரோன் என்பவர் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தினை வென்றார்.
(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)

(இந்தியாவின் முதல் "International Master" மானுவல் ஆரோன்)

               அதன் பின்னரே இந்தியர்களும் சர்வதேச அளவில் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணம் உருவாகி பரவலாக சதுரங்கம் ஆட ஆரம் பித்தார்கள் என சொல்லப்படுகிறது. பின்னர் மானுவல் ஆரோன் சென்னையில் "டால் சதுரங்க கழகம்" என ஒன்றினை நிறுவி பயிற்சியும் அளிக்கலானார், இன்றும் அக்கழகம் இயங்குகிறது. ஒரு நாள் மாலை அப்பயிற்சி மையத்திற்கு  சுமார் 7 வயது சிறுவன் ஒருவன் புதிதாக ஆட வந்தான், ஆனால் பல பெரியவர்களையும் வெற்றி காணவே ,நல்ல திறமை இருக்கிறது என அடையாளங்கண்டு தொடர் பயிற்சியில் ஈடுபடுத்த சொல்லி அச்சிறுவனின் தாயாரிடம் சொன்னாராம், அச்சிறுவன் வேறு யாரும் அல்ல , பின்னாளில் ஐந்து முறை உலக சேம்பியனாக திகழ்ந்த "விசுவநாதன் ஆனந்த்" தான்!!!

              பாபி பிஷர் செய்தது போன்று ரஷ்ய ஆதிக்கத்தினை அதிரடியாக தகர்க்க வில்லை என்றாலும் நிதானமாக தகர்த்த இன்னொருவர் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் ஆவார், ஆனால் இவரால் கார்ப்போவ், காஸ்பரோவ் ஆகியோரின் சதுரங்க வாழ்வின் இறுதியில் தான் அசைக்க முடிந்தது, ஆனாலும் இரண்டாம் முறையாக ரஷ்ய ஆதிக்கம் அகன்ற கால கட்டம் என்பது ஆனந்தின் கால காட்டமே. இப்பொழுது கார்ல்சன் மூலம் இந்தியாவின் ஆதிக்கமும் தகர்க்கப்பட்டுவிட்டது, கண்ணுக்கு எட்டிய தொலைவில் ,உலக அளவில் சவால் விடக்கூடிய சதுரங்க ஆட்டக்காரர்கள் ,ஆனந்த் தரத்தில்  இந்தியாவில் உருவாகவில்லை,  இந்நிலைக்கு ஒரு காரணமாக ஆனந்த்தையே சொல்லலாம், இந்தியாவில் நடக்கும் போட்டிகளை முற்றிலும் தவிர்த்து விட்டார், மேலும் இந்தியாவின் சார்பில் செஸ் ஒலிம்பியாடிலும் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார், எனவே அடுத்த கட்ட தலைமுறைக்கு தேவையான வழிக்காட்டலையோ அல்லது போட்டிகளின் போது கொடுக்கும் அனுபவ பகிர்வுகளையோ அளிக்க தவறிவிட்டார் எனலாம்.
                
(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்)
                   கிரிக்கெட்டில் வேகமான ஆடுகளத்தில், வேகமான பந்து வீச்சாளர்களை எதிர்க்கொண்டு பயிற்சி எடுத்திருந்தால் தான் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளரை  எதிர் கொள்ள முடியும், சதுரங்கத்திலும் அதே கதை தான் .சதுரங்கத்தினை பொறுத்த வரையில் பலமான ஆட்டக்காரர்களுடன் ஆடிப்பழகினால் தான் ஆட்டத்திறன் மெருகேறும்.

                 வருங்காலத்திலும் இந்தியாவின் புகழ் சதுரங்கத்தில் உலக அளவில் கொடி கட்டி பறக்க வேண்டும் எனில் ரஷ்ய பாணியில் சிறப்பு பயிற்சிகளை பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்த வேண்டும்.

(கண்களை பாதுகாப்போம்-கண் தானம் செய்வோம்) பின் குறிப்பு:
படங்கள் மற்றும் தகவல் உதவி,
# http://math.uww.edu/~mcfarlat/177hist.htm
# http://www.avesta.org/pahlavi/chatrang.htm
# Bobby Fischer Goes To War- DAVID EDMONDS AND JOHN EIDINOW
  முழுப்புத்தகமும் மின்னூலாக படிக்க
http://www.e-reading.co.uk/bookreader.php/1010825/Edmonds_-_Bobby_Fischer_Goes_to_War.html
மற்றும்
விக்கி & கூகிள் ,தி இந்து,இணைய தளங்கள்,நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக