வியாழன், 26 பிப்ரவரி, 2015

கம்பு கூழ்/கம்மங்கஞ்சி:
இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..
எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.
தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம், உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.
கிடைக்கும் அளவு : 4 நபருக்கு

via - தமிழ் என் தாய்மொழி
இனிப்பு கம்பு அடை
*******************
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – 1 கப்
வெல்லம் -1/2 அல்லது 3/4 கப்
தேங்காய் துண்டுகள் – 1/3 கப்
ஏலக்காய் – 2
உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் அல்லதுநெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஏலக்காயை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை பொடி செய்துக் கொள்ளவேண்டும்.
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீருடன் கம்பு மாவு, பொடித்த ஏலக்காய், சிறிதளவு உப்பு, தேங்காய்துண்டுகள் ஆகியவற்றை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவேண்டும்.
பிசைந்த மாவு கலவையை ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவேண்டும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.
இந்த உருண்டையை உள்ளங்கை அல்லது எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் கவரின் மேல் வைத்து மெல்லிதாக தட்டிக் கொள்ளவேண்டும்.
தட்டியதை தவாவில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் அடைகளை மெதுவாக திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவேண்டும்.
இப்பொழுது சுவையான இனிப்பு கம்பு அடை தயார்.
மருத்துவ பயன்கள்:
கம்பு தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கம்பு அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு. கம்பு ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
கம்பு உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உண்டு.
நண்டு மிளகு சூப்
*****************
தேவையான பொருள்கள்:
பெரிய நண்டு = 1
தக்காளி = 1
சின்ன வெங்காயம் = 6
மிளகுத்தூள் = 3 ஸ்பூன்
இஞ்சி = 1 துண்டு
சீரகத்தூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
பிரியாணி இலை = 1
எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
கிராம்பு = 1
கறிவேப்பிலை = சிறிதளவு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும். இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து அதனுடன் சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இஞ்சி விழுது, கலந்து வைத்த‌ மிளகு, சீரகத்தூள் அனைத்தையும் சுத்தம் செய்த நண்டு மீது தடவி தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கி வைத்த தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு மசாலா தடவிய நண்டை சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் எலுமிச்சை பழச்சாறு கலந்து சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான நண்டு மிளகு சூப் தயார். இதை சூடாக பரிமாறினால் மிகவும் சுவையுட‌ன் இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
நண்டில் வைட்டமின் C, வைட்டமின் B12 காணப்படுகிறது. இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், செலினியம் நிறைந்துள்ளது. அதிக அளவில் புரோட்டீன் நிறைந்த உணவு ஆகும்.
இந்த சூப் காய்ச்சலை குறைக்கும். ஜலதோஷம் ஏற்படும் நேரத்தில் இதை வைத்து சூடாக குடித்தால் ஜலதோஷம் இல்லாமல் போகும். நெஞ்சு சளியை நீக்க வல்லது. மேலும் இது உடலுக்கு அதிக சூடு என்பதால் சரியான அளவில் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.
புதினாக்கீரை சூப்
****************
தேவையான பொருள்கள்:
புதினாக்கீரை = 1 கட்டு
பூண்டு= பாதி (சிறியது)
மிளகு = 2 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 4
எலுமிச்சை பழம் = பாதி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
புதினாக்கீரையை சுத்தம் செய்து வெட்டி வைத்து கொள்ளவும். பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை சிறிது தட்டி வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் வெட்டி வைத்த புதினாவை போட்டு நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகத்தை போட்டு மீண்டும் கொதிக்க வைத்து எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான புதினாக்கீரை சூப் தயார். இதை தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மருத்துவ குணங்கள்:
புதினாவில் குறைந்த அளவே கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. மேலும் புதினாவில் பாஸ்பரஸ், இரும்புத்தாது, ஃபைபர், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது. வைட்டமிம் “A”, வைட்டமின் “C” உள்ளது.
புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்று பொருமல், அஜீரணம் ஆகியவை குறையும். பசியை தூண்டும். இரத்தம் சுத்திகரிக்கப்படும். வாய் நாற்றம் குறையும். மலச்சிக்கல், வாதம் வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி, தலைவலி, ஆஸ்துமா, விந்து குறைபாடு ஆகியவை அகலும்.
இந்த சூப்பை குடித்து வருவதால் வறண்ட சருமம் பொலிவு பெற்று முகப்பரு குறையும். இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
இறால் மசால்
*************
தேவையானவை:
இறால்..................1 /2 கிலோ
சின்ன வெங்காயம்.. கைப்பிடி/15
இஞ்சி......................சிறு துண்டு
பூண்டு.....................6
மிளகு.....................1 /4 தேக்கரண்டி
சீரகம்.......................1 /4 தேக்கரண்டி
சோம்பு+கசகசா........1 /4 தேக்கரண்டி
மிளகாய் பொடி...1 /4 தேக்கரண்டி
மல்லிப் பொடி.......1 /4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி........கொஞ்சம்
உப்பு........................ தேவையான அளவு
எண்ணெய்.............3 தேக்கரண்டி
கறிவேப்பிலை........கொஞ்சம்
செய்முறை:
iraal_masala_370இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும். வெங்காயத்தை உரித்து அதில், 8 வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும். கழுவிய இறாலுடன், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு பிசறி 10-30 நிமிடம் வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி + 7 வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து பிசறிய இறாலைப் போட்டு, மெலிதான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் வேண்டாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய பின், அதில் பாதிவெந்த இறாலையும் போட்டு சிறு தீயில் வதக்கவும்.
10 நிமிடம் கழிந்தபின் இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து போட்டு இறக்கவும். இந்த இறால் மசால் சூப்பராக இருக்கும். இதனை எதனுடனும் துணையாக இணைத்து சாப்பிடலாம்.
கீரை கட்லட்
************
தேவையானப்பொருட்கள்:
கீரை - 1 கட்டு (எந்த கீரையையும் பயன்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தங்கள் சுவைக்கேற்றவாறு
எண்ணை - 5 முதல் 6 டேபிள்ஸ்பூன் வரை
செய்முறை:
கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ளக் கீரையைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். கீரை சற்று ஆறியதும் அத்துடன் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும். கைகளைத் தண்ணீரில் தொட்டுக் கொண்டு (அப்பொழுதுதான் கைகளில் ஒட்டாமல் இருக்கும்) எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி பின்னர் சற்று அழுத்தி வடை போல் தட்டிக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்துக் கொள்ளவும். அதில் தட்டி வைத்திருக்கும் கட்லட்டை (4 அல்லது 5 அல்லது கல்லில் இடம் இருக்கும் வரை) ஒன்றுடன் மற்றொன்று படாமல் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கட்லட்டைச் சுற்றி 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணை விடவும். ஒரிரு நிமிடங்கள் பொறுத்து, தோசைத் திருப்பியால் திருப்பி விட்டு, மீண்டும் சிறிது எண்ணையை சுற்றி விட்டு வேக விடவும். கட்லட் நன்றாக இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
பின்குறிப்பு: இதை எந்த வித சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ரசம், மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொள்ள மேலும் சுவையாக இருக்கும்.
மெது பக்கோடா
தேவையானப்பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன் அல்லது
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணை அல்லது
வனஸ்பதி - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணை அல்லது வனஸ்பதியைப் போட்டு அத்துடன் பேக்கிங் பவுடர் அல்லது சமையல் சோடாவைச் சேர்த்து, நுரைத்து வரும் வரை விரல்களால் நன்றாகத் தேய்த்து விடவும். பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஒரு கை தண்ணீரைச் சேர்த்துக் கலக்கி விடவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, முந்திரி ஆகியவற்றைப் போட்டுக் கலக்கவும். கடைசியில் வெங்காயத்தைச் சேர்த்துக் கலந்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். கலந்து வைத்துள்ள மாவின் ஒரு பகுதியில் சிறிது நீரைத் தெளித்து இளகலாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு, மிதமான தீயில், சிவக்கும் வரை வேக விட்டு எடுக்கவும். எல்லா மாவையும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து செய்யவும். அப்படி செய்வதால், மாவு புளித்து போகாமல், பக்கோடா அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும்.
தேங்காய்ச்சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.