சனி, 26 ஜூலை, 2014

வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
       வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை...


* வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

வினைத்தொகையில் இருசொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

ஊறிய காய் - இறந்தகாலம்
ஊறுகின்ற காய் - நிகழ்காலம்
ஊறும் காய் - எதிர்காலம்

இப்பொழுது மூன்றுகாலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப் போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்.

(எ.கா)
1)படர்கொடி

படர்ந்த கொடி- இறந்தகாலம்
படர்கின்ற கொடி- நிகழ்காலம்
படரும் கொடி- எதிர்காலம்

2)சுடுசோறு

சுட்டசோறு - இறந்தகாலம்
சுடுகின்றசோறு - நிகழ்காலம்
சுடும்சோறு - எதிர்காலம்

3)குடிநீர்

குடித்தநீர்- இறந்தகாலம்
குடிக்கின்றநீர்- நிகழ்காலம்
குடிக்கும்நீர்- எதிர்காலம்

கொடுக்கப் பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப்பாருங்கள். முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று. ஒரு விடைமட்டும் தான் முக்காலத்தையும் உணர்த்தும். மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம். தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம்.

* பண்புத்தொகைஎன்றால்என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

கொடுக்கப்பட்ட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக.

(ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம். பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.)

'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை + தாமரை என்று பிரியும்.

'மை' விகுதி தெரிகிறதா. ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால் தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை, நீலம், வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை, தீமை, கொடுமை, பொறாமை

சுவையைக் குறிக்கும் சொற்கள்:

காரம், புளிப்பு, கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம், வட்டம், நாற்கரம்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப் பெயர்கள் பின்னும் நின்று இடையில் “ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)

சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, இந்தியநாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண், வாழைமரம், தாமரைப்பூ
பொருட்செல்வம், கடல்நீர் , தைத்திங்கள், அவிஉணவு
அரவணை, செருக்களம் போன்றவை.

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும்பெயர்

************************************************

வினைமுற்று, மற்றும் வினையாலணையும் பெயரை எப்படி கண்டுபிடிப்பது ?

1 வினைமுற்று என்றால் என்ன?

முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

எ.கா. படித்தான்

படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்து விட்டான் என்றுபொருள்.

இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினைமுற்று.

'படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்

'படித்து' என்பது வினையெச்சம்
'படித்தான்' எனபது வினைமுற்று.

பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது. 'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது. எனவே அது வினைமுற்று.

கீழ்க் காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

அ.தெரிநிலை வினைமுற்று
ஆ.குறிப்பு வினைமுற்று
இ.ஏவல் வினைமுற்று
ஈ.வியங்கோள் வினைமுற்று
உ.உடன்பாட்டு வினைமுற்று
ஊ.எதிர்மறை வினைமுற்று

இவ்வாறாக ஒரு வினைமுற்றை 6 வகைப் படுத்திக் காணலாம்.

அ. தெரிநிலை வினைமுற்று

ஒருவினை முற்றானது செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படு பொருள் ஆகிய ஆறிணையும் வெளிப்படையாக உணர்த்தி வரும். ஒரு செயல் நடந்து முடிந்ததாக தெரியும்.

(எ.கா) ஓவியன் சித்திரம் தீட்டினான்.
செய்பவன் - ஓவியம்
கருவி - வர்ணம்
நிலம் - சுவர்
செயல் - தீட்டுதல்
பொருள் - சித்திரம்
காலம் - இறந்தகாலம்.

(எ.கா) எழிலரசி மாலை தொடுத்தாள்.
செய்பவள் - எழிலரசி
கருவி - நார், கை
நிலம் - இருப்பிடம்
செயல் - தொடுத்தல்
பொருள் - மாலை
காலம் - இறந்தகாலம்.

ஆ.குறிப்பு வினைமுற்று

திணை, பால் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டி காலத்தை மட்டும்
குறிப்பாக உணர்த்தி வரும் வினைக்குறிப்பே குறிப்பு வினைமுற்று எனப்படும். இது காலத்தை (வெளிப்படையாக) காட்டாது.

(எ.கா) வளவன் தற்போது பொன்னன்.
செங்கண்ணன் கரியன்
பாலன் இன்று செல்வன்

பொன்னன் - பொருள்
மதுரையான், குற்றாலத்தான் - இடம்
ஆதிரையான் - காலம்
செங்கண்ணன் - சினை
இனியன், கரியன் - பண்பு (அ) குணம்
நடிகன், நடையன் - தொழில்

இவ்வாறாக பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகியவற்றைச் சார்ந்தே குறிப்பு வினைமுற்று அமையும்.

இ. ஏவல்வினைமுற்று

முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும். இது எதிர்காலத்தைக் காட்டிவரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.

1.ஏவல் ஒருமை வினைமுற்று

(எ.கா) நீநட, நீசெய், நீபோ, நீபடி

2. ஏவல் பன்மை வினைமுற்று
(எ.கா) நீர்உண்குவீர் , நீர்வாரீர், நீர்செய்குதும்

ஈ. வியங்கோள் வினைமுற்று.
க - இய - இயர் என்ற விகுதிகளைப் பெற்று வரும்.
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டிக் கொடல் ஆகிய பொருள்களில் வரும். இது மூன்று இடங்களையும் ஐம்பால் உணர்த்தி வரும்.

(எ.கா) வாழ்க, வாழிய, வாழியர், வாழ்த்துதல்
ஒழிக, கெடுக, வைதல், செல்க
வருக, ஈக, விதித்தல், தருக
வேண்டல், சிரிக்க, பார்க்க

உ. உடன்பாட்டு வினைமுற்று

(எ.கா) செய்வார், வாழ்வார், துறப்பார்

ஊ. எதிர்மறை வினைமுற்று

(எ.கா) செய்யார், வாழாதவர், துறவார்

2. வினையாலணையும்பெயர்:

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(எ.கா) படித்தவன்,
கண்டவர்
சென்றனன்

எப்படி எளிதில் கண்டறிவது?:

கொடுக்கப் பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர், அவன், அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.

(எ.கா)

'காட்சியவர்' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

அ) காலப்பெயர் ஆ)இடப்பெயர் இ)வினையாலணையும்பெயர் ஈ) பண்புப்பெயர்

காட்சியவர் என்றசொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.

உருவகம், உவமைத்தொகை

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        உருவகம், உவமைத்தொகை என்றால் என்ன ?


உவமைத்தொகை
****************
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற, போல, அன்ன, நிகர, போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..

(எ.கா) கனிவாய்
மலரடி

'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும். இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.

பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும் படியே வினாக்கள் அமையும்.

எ.கா

1.மலர்முகம்
2.மலர்விழி
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.கயல்விழி
6.அன்னைத்தமிழ்

மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.

உருவகம்
*********
உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் என்றால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச் சுலபம்.

அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.

அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

'மலரடி' என்றசொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

விளக்கம்:

ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கிறீர்கள். உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள். இதுவே 'மலர்முகம்' இது உவமைத்தொகை.

இன்னும் ஒருபடி மேலேபோய், மலரைப் போன்று முகமில்லை. இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம் அதாவது முகமலர்.

இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா?

எடுத்துக்காட்டு:

உவமைத்தொகை - உருவகம
மலர்முகம் - முகமலர்
மலர்க்கை - கைமலர்
தாய்மொழி - மொழித்தாய்
கயல்விழி - விழிகயல்
அன்னைத்தமிழ் - தமிழன்னை
மலர்விழி - விழிமலர் .

இரட்டைக்கிளவி , அடுக்குத்தொடர் மற்றும் ஒருபொருட்பன்மொழி

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           இரட்டைக்கிளவி , அடுக்குத்தொடர் மற்றும் ஒருபொருட்பன்மொழி

இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் மற்றும் ஒரு பொருட்பன்மொழி போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைக் காணலாம்.

இரட்டைக்கிளவி

ஒரு சொல் தொடர்ந்து இரண்டு முறைவரும். ஆனால் தனித் தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத் தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(எ.கா)

சலசல, கலகல

மேற்கண்ட வார்த்தைகளை சல, கல என பிரித்தால் பொருளைத்தராது. எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

அடுக்குத்தொடர்

ஒரு சொல் தொடர்ந்து இரண்டு முறை வரும். ஆனால் தனித் தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத் தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.

(எ.கா)

பாம்பு பாம்பு, வருக வருக

மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு, வருக என பிரித்தால் பொருளைத் தரும். எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.

ஒரு பொருட்பன்மொழி

ஒரு பொருளின் சிறப்பிற்காக அப்பொருளைக் குறிக்க பல சொற்கள் வருவது ஒரு பொருட்பன்மொழி ஆகும்.

(எ.கா) ஓங்கி உயர்ந்த
ஒரு தனி
தொழுது வணங்கினான்
காத்து ஓம்பினான

எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
எண்ணும்மை, உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
*********************************************


உம்மைத்தொகை, எண்ணும்மை, உரிச்சொற்றொடர் போன்றவற்றை எப்படி கண்டறிவது?

எண்ணும்மை
*************
கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(எ.கா)

அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்

சிறப்பு எண்ணும்மை

சொற்கள் “உடனும்” என முடியும்.

(எ.கா) வானுடனும், கடவுளுடனும்

உயர்வு சிறப்பும்மை

சொற்கள் “னினும்” என்று முடியும்.

(எ.கா) வானினும், ஊனினும், தேனினும

உம்மைத்தொகை
***************

கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(எ.கா)

அவன் இவன்
இரவு பகல்
இராப் பகல்

எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும். அதுவே மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்
****************
ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

(எ.கா)

மாநகரம்

அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்.
1.சால
2.உறு
3.தவ
4.நனி
5.கூர்
6.கழி
7.கடி
8.மா
9.தட

மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக் கூடிய சொற்கள். எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் தான் ஆரம்பிக்கும்..

(எ.கா)

தடக்கை
தவப்பயன்
உறுபடை

அன்மொழித் தொகை
*******************
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை ஆகிய ஐந்து தொகைகளும் தொடருக்கு புறத்தே அமையாமல் மறைந்திருந்து பொருள் தருமாயின் அது அன்மொழித்தொகை யாகும்.

(எ.கா) பொற்றொடி வந்தாள். பூங்குழலி வந்தாள், சேயிழைக் கணவன் தேன்மொழி நகைத்தாள், இன்மொழி சொன்னான் சுடுகதிர் எழுந்தான்.

வேற்றுமைத் தொகை - இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வேற்றுமைத்தொகை
*******************
இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வர சொற்கள் நிற்பது வேற்றுமைத்தொகை ஆகும். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

வேற்றுமை உருபுகள் 8 வகைப்படும்

1 -உருபுஇல்லை
2 -ஐ
3 -ஆல்
4 -கு
5 -இன்
6 -அது
7 -கண்
8 -உருபுஇல்லை

மேற்கண்ட உருபுகளை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

1.முதலாம் வேற்றுமைத்தொகை
*****************************
பொருளின் இயல்பான பெயரே முதல்வேற்றுமைதொகை. இதற்கு உருபு இல்லை.

இதன் வேறு பெயர்கள்

அ. எழுவாய் வேற்றுமை
ஆ. பெயர் வேற்றுமை

(எ.கா) கந்தன் வந்தான்
ராமன் வந்தான்

2.இரண்டாம் வேற்றுமைத்தொகை (ஐ)
**********************************
பால் குடித்தான் - பாலைக் குடித்தான்

( மறைந்த உருபு “ஐ” )

மொழி கற்றான் - மொழி + ஐ + கற்றான்
சிலை செய்தான் - சிலை + ஐ + செய்தான்.
காளை போன்றவன் - காளை + ஐ + போன்றவன்
இல்லறம் துறந்தான் - இல்லறம் + ஐ + துறந்தான்
கோயில்கட்டினான் - கோயில் + ஐ + கட்டினான்.

இவ்வாறாக “ஐ” என்ற உருபு மறைந்து காணப்படும்.

3.மூன்றாம் வேற்றுமைத்தொகை (ஆல்) - (ஓடு)
*****************************************

(எ.கா)

பேனா எழுதினான்
(ஆல்) - பேனாவால் எழுதினான்

தலையால் வணங்கினான்
மரம்வாளால் அறுபட்டது
புலவரால் பாடப்பட்டபாட்டு

(ஓடு) கடிதம் பணம் வந்தது - கடிதத்தோடு பணம் வந்தது
தாய் தந்தை வந்தார் - தாயோடு தந்தை வந்தார்

4.நான்காம் வேற்றுமைத்தொகை (கு)
********************************
(எ.கா)

நோய் மருந்து - நோய்க்கு மருந்து
மயில் போர்வை கொடுத்தான் - மயிலுக்கு போர்வை கொடுத்தான்
மான் பகை புலி - மானுக்கு பகை புலி

5.ஐந்தாம் வேற்றுமைத்தொகை (இன்) - (இல்)
***************************************
(எ.கா)

பழனி கிழக்கு மதுரை - பழனியின் கிழக்கு மதுரை
தமிழ்நாடு வடவெல்லை திருவேங்கடம் - தமிழ்நாட்டின் வட வெல்லை திருவேங்கடம்
கொடை சிறந்தவன் குமரன் - கொடையில் சிறந்தவன் குமரன்

6.ஆறாம் வேற்றுமைதொகை (அது)
*******************************
(எ.கா)

கபிலர் பாட்டு - கபிலரது பாட்டு
கண் பார்வை - கண்ணினது பார்வை
வினைப் பயன் - வினையினது பயன்
மலையுச்சி - மலையினது உச்சி
என் கை - எனது கை
கந்தன் வீடு - கந்தனது வீடு
மலர் நீட்டம் - மலரினது நீட்டம்
மலை உச்சி - மலையினது உச்சி

7.ஏழாம் வேற்றுமைத்தொகை (கண்)
*******************************
(எ.கா)

பால் சுவை - பாலின்கண் சுவை
மலை மூலிகை - மலையின்கண் மூலிகை
கிளை பறவை - கிளையின்கண் பறவை

8.எட்டாம் வேற்றுமைத்தொகை
***************************
இதன் வேறு பெயர் விளிவேற்றுமை. இதற்கு உருபு இல்லை. பெயர்ச்சொல்லின் ஈடுகெடுதல், மிகுதல், திரிதல் போன்றவை எட்டாம் வேற்றுமைத்தொகை ஆகும்.

(எ.கா) ராமன் - ராமனே
கந்தன் - கந்தனே

வேர்ச் சொல் - தமிழ் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று, வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் போன்றவை கண்டறிதல் எப்படி ?

வேர்ச் சொல்லைக் காண் என வினாக்களைக் கேட்பது போல வேர்ச் சொல்லைக் கொடுத்து இதன் வினைமுற்றை கண்டுபிடி அல்லது வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி என்பதைப் போல வினாக்கள் அமையும்.

(எ.கா)

'படி' என்ற சொல்லின் தொழிற் பெயரைக் கண்டுபிடி

அ) படித்த ஆ) படித்து இ) படித்தவன் ஈ) படித்தல்

விடை: ஈ. படித்தல்

'தல்' எனும் விகுதி வந்தால் தொழிற்பெயர்.

படித்த என்ற சொல்லின் விகுதி 'அ' என்பதால் அதுபெயரெச்சம்.

படித்து என்ற சொல்லின் விகுதி 'உ' என்பதால் அது வினையெச்சம்.

படித்தவன் என்றசொல் வினையாலணையும் பெயர்.

கீழே அட்டவணை பாருங்கள். அதைப்போல நீங்களும் அட்டவணை தயாரித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

வேர்ச்சொல் - பெயரெச்சம் - வினையெச்சம் - வினையாலணையும் பெயர் - வினைமுற்று - தொழிற்பெயர்

தா - தந்த - தந்து - தந்தவன் - தந்தான் - தருதல்

செல் - சென்ற - சென்று - சென்றவன் - சென்றான் - செல்தல்

உண் - உண்ட - உண்டு - உண்டவன் - உண்டான் - உண்ணல்

காண் - கண்ட - கண்டு - கண்டவன் - கண்டான் - காணுதல்

கூறு- கூறிய - கூறி - கூறியவன் - கூறினான் - கூறுதல்

அளபெடை -இலக்கணம் அறிவோம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.வீரமாமுனிவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  அளபெடை

ஓர் செய்யுளில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ.உயிரளபெடை
ஆ.ஒற்றளபெடை

1.உயிரளபெடை
**************
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை யாகும்.

செய்யுளிசையளபெடை (அ)
இன்னிசையளபெடை (உ)
சொல்லியைளபெடை (இ)

என இது 3 வகைப்படும்.

செய்யுளிசையளபெடை (அ)
------------------------------------------
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறுபெயர் இசை நிறையளபெடை.

(எ.கா) தொழாஅர்
உழாஅர்
நல்லபடாஅ
ஆதூம்(ஆஅதூம்)
ஓஓதல்
நடுவொரீஇ
தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்

சொல்லிசையளபெடை (இ)
-------------------------------------
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச் சொல்லை வினையெச்சசொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை என்பதாகும்.

(எ.கா) குடிதழீஇ
அடிதழீஇ
உரனசைஇ

இன்னிசையளபெடை (உ)
-----------------------------------
செய்யுளில் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்

(எ.கா) உண்பதூஉம்
கொடுப்பதூஉம்
உடுப்பதூஉம்

2.ஒற்றளபெடை
**************
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும். இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.

(எ.கா) கண்ண்கருவினை
கலங்ங்குநெஞ்சமில்லை
இலஃஃகுமுத்தின்
மடங்ங்கலந்த.