சனி, 18 ஏப்ரல், 2015

சிறுதானியங்கள் என்றால் என்னங்க?

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம். சிறுதானியங்கள் பற்றிய விவரம் தெரிந்துகொள்வோம்.
சிறுதானியங்கள் என்றால் என்ன?
உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?
  • ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது. அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிக அளவு கால்சியம் ராகியில் உள்ளது. மேலும் தகவல்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.
  • சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. விளைவிக்க எவ்விதமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தேவையில்லை. எனவே மண்ணும், உண்ணும் உடலும் மலடாவதில்லை. உற்பத்தி செலவு மற்றும் மின்சார உபயோகம் குறையும். அத்தகைய மானாவாரிப் பகுதிகளில் வாழும் விவசாயிகள், நீர் மற்றும் இரசாயனங்களை அதிகம் உறிஞ்சக்கூடிய  நெல் மற்றும் கோதுமை பயிர்களை, மிகவும் கஷ்டப்பட்டு விளைவிக்க வேண்டிய தேவை இருக்காது. பலவிதமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மண்ணின் பன்மயத்தன்மை (Bio-diversity) பாதுகாக்கப்படும். அரிசி, கோதுமை போன்ற பயிர்களை வலுக்கட்டாயமாக எல்லாவிதமான நிலத்திலும், காலநிலையிலும் பயிரிடத் தேவையில்லை.

சிறுதானியத்தை எப்படி சமைப்பது?
வழக்கமாக அரிசி, கோதுமையைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களைப் போன்றே, வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு மற்றும் சோளம் தானியங்களிலும், உமியை நீக்கி விட்டு, அனைத்து விதமான பதார்த்தங்களையும் சமைக்கலாம். வெறும் சாதமாக சமைத்து, சாம்பார், குழம்பு, ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.

சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.
மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?
சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நமது வீடுகளில் குழந்தைக்கு 6 மாதம் ஆன பிறகு, பொதுவாக கேழ்வரகு மாவில் இனிப்புக் கூழ் செய்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். அந்த வழக்கம் குழந்தை சற்று வளர்ந்ததும், தாய்மார்களால் நிறுத்தப்பட்டு விடுகிறது. அதேபோன்று, வயதான பின்பு மருத்துவர்களின் அறிவுரையின் படி, சர்க்கரை நோயாளிகள் மட்டும், (விருப்பமில்லாமல் / வேறு வழியில்லாமல் / வேண்டாவெறுப்பாக) அவ்வப்போது உண்ணக்கூடிய ஒரு தானியமாக கேழ்வரகு மாறிவிட்டது. மற்ற அனைத்து சிறுதானியங்களையும் நாம் முற்றிலும் ஒதுக்கி (கிட்டத்தட்ட மறந்து) விட்டோம். சிறுதானியங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளுக்கான உணவாக மட்டும் ஆகி விட்டது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் ஒன்றாகக் கலந்து விட்டமையால், இன்றைக்கும் அவர்கள் கேழ்வரகு, கம்பு மற்றும் சோள தானியங்களை மட்டும் அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர்.  இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். மேலேக் குறிப்பிட்டது போல, சிறுதானியங்கள் எல்லா வயதினரும், எல்லா பருவகால நிலைகளிலும் உண்ணக் கூடியதே. அவரவர் வசிக்கும் நிலப்பரப்பில் விளையக்கூடிய தானியங்களை உண்பதே சிறந்தது. நம்மில் பலருக்கும் கம்பு உடலுக்கு குளிர்ச்சி, கேழ்வரகு சூடு என்கின்ற கருத்து உள்ளது. எனவே நமது பகுதிகளில் கம்பை வெயில் காலத்திலும், கேழ்வரகை குளிர் காலத்திலும் மட்டுமே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் வட மாநிலங்களில், கம்பு உடலுக்கு சூடு தரும் என்று குளிர் காலங்களில் பயன்படுத்துகின்றனர். 

இயற்கையானது, ஒவ்வொரு பருவ நிலைக்கும், மனிதர்களின் உடல் நலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையிலான பயிர்களை மட்டுமே, அவரவர் வாழும் பகுதிகளில் விளைவிக்கின்றது. எனவே இந்தப் பொருள் குளிர்ச்சி, அந்தப் பொருள் சூடு என்று எந்த தானியத்தையும், காய்கறிகளையும், பழங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. ஒருவேளை உங்களில் சிலருக்கு, அந்தந்த பருவகாலத்தில் விளையும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடல் நலத்தில் மாற்றம் ஏற்படலாம். இதற்கான காரணத்தை இயற்கை வாழ்வியல் கருத்துக்களின் மூலம் அறிந்து கொள்ளவும்.

குழந்தைகளை எப்படி சிறுதானிய உணவுகளுக்குப் பழக்கப்படுத்துவது?
குழந்தைளுக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதனை சுவைத்துப் பழக வேண்டும். தற்சமயம் வீடுகளில், பெரும்பாலானத் தின்பண்டங்கள் அரிசி அல்லது மைதா மாவுகளைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால் நாம் அனைவரும் வெள்ளை நிற உணவுகளையே சாப்பிட்டுப் பழகி விட்டோம். ஆனால் சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதால், நம் மனங்களால் அவற்றை உடனடியாக உண்பதற்கான ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆதலால் சிறுதானிய உணவுக்கு மாற விரும்புபவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஒருநாளில் ஏதாவது ஒருவேளை உணவில் மட்டும் என்று சிறுதானியத்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு முதலில் சிறுதானிய தின்பண்டங்களை சாப்பிடக் கொடுப்பது நல்லது. அவர்களுக்கு அந்தச் சுவை பிடித்தமானதாகி விட்டால், பின்னர் கலவை சாதங்களை அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் ஒருமுறை சாப்பிட்டு விட்டு, அவர்களுக்குப் பிடிக்காமல் போனால், அதற்காக முற்றிலுமாக சிறுதானியத்தை நிறுத்தி விடுவது நன்மை தராது. குறைந்த பட்சம் பெரியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளும் சிறிது சிறிதாக அவற்றின் மீது விருப்பம் கொள்வார்கள். சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்கள் மட்டுமன்றி தனித்தன்மையான சுவையும் கொண்டவை. ஒருமுறை இவற்றை சுவைத்துப் பார்த்த பின்னர் வெள்ளை நிற அரிசி மற்றும் மைதாவினால் ஆன உணவுப் பண்டங்களின் மீது நமக்குள்ளப் பற்றுத் தானாகவே குறைந்து விடும்.

சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகுமா?
சிறுதானியங்களில், பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவற்றை உண்டபின், மிக சீரான அளவில் இரத்தத்தில் சர்க்கரையை வெளியிடுகின்றன. குறைந்த அளவே அமிலத் தன்மை உள்ளதால், உடனடியாக பசிக்காது. எனவே சாதாரணமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடும் அளவைக் காட்டிலும், அதில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்டாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடியத் தேவை இல்லை. இந்த அடிப்படையான கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்வதனால், நம்மில் பலர் சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதாக நம்புகின்றோம்.

சிறுதானியங்கள் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன?
தற்பொழுதுக் கடைகளில் விற்கப்படும் சிறுதானியங்களின் (கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு தவிர) விலை, பட்டைதீட்டப்பட்ட அரிசி, கோதுமை இவற்றின் விலைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருப்பது உண்மை. இதற்கு முக்கியமான காரணம், பசுமைப் புரட்சி விவசாயிகளிடத்தில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இந்தியா தனது பாரம்பரிய உணவு தானியங்களை விளைவிப்பதை நிறுத்தி விட்டு, ஒட்டு ரக நெல், கோதுமை உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட சிறுதானியங்களை மறந்து விட்ட நிலையில், தற்பொழுது அவற்றின் சிறப்புகளை மீண்டும் உணர ஆரம்பித்துள்ளனர். நமது பாரம்பரிய தானியங்கள் வெகு சில விவசாயிகளால் மட்டும் விளைவிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி குறைவாக இருப்பதினால், அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது. நுகர்வோர்களாகிய நாம் நம் அன்றாட உணவில் அதிக அளவில் சிறுதானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால், அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும். அவற்றின் விலையும் தானாகவே குறைந்து விடும்.

அரிசி உணவில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்பதே போதுமானது. அவ்வகையில் பார்க்கப் போனால், 2 கிலோ பட்டை தீட்டப்பட்ட அரிசியின் விலைக்கு, 1 கிலோ சத்தும் சுவையும் மிகுந்த சிறுதானியத்தை வாங்கினால் போதும். மேலும் பட்டை தீட்டப்பட்ட அரிசியை உண்பதனால் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற விளைவுகளுக்கு செய்யப்படும் மருத்துவ செலவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. எனவே சிறுதானியங்களின் விலை தற்சமயம் அதிகமாக இருந்தாலும், அவற்றால் நமக்கு ஏற்படும் பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உண்மையில் நாம் பணத்தை மிச்சப்படுத்தவே செய்கிறோம்.

பாரம்பரிய அரிசி வகைகள்:
சிறுதானியங்களைப் போலவே, அதிக சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த, நம் அனைவராலும் மறக்கடிக்கப்பட்ட தானியங்கள் தான் நமது பாரம்பரிய அரிசி வகைகள். இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக